கல்வியில் இனப்படுகொலை! தமிழ் மாணவர்களின் மருத்துவர் கனவை பொசுக்கும் நீட் தேர்வு முறையை நீக்கும்வரை போராடுவோம் – சீமான்

61

கல்வியில் இனப்படுகொலை! தமிழ் மாணவர்களின் மருத்துவர் கனவை பொசுக்கும் நீட் தேர்வு முறையை நீக்கும்வரை போராடுவோம் – சீமான்
நீட் தேர்வினை நீக்கக்கோரி போராட்டத்தினை அறிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் பொருளாதாரச் சமத்துவமின்மையாலும், வர்க்க வேறுபாடுகளாலும், வெவ்வேறு நிலவியல் , பண்பாட்டு சூழலியல் அமைப்புகளைக் கொண்ட வேறுபட்ட நிலப்பரப்புகளாலும், பல்வேறு தேசிய இனங்களின் தனித்துவத் தன்மைகளாலும் ஒரே நாடு என்ற பெயரில் பல தேசங்களாய் இருக்கும் இந்தியாவில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இன்னும் உணவு, உடை, உறையுள், கழிவறை என அடிப்படை வசதிகளே சென்று சேராத, கிராமங்கள் அதிகம் இருக்கிற, முதல் தலைமுறை மாணவர்கள் அதிகம் படிக்கிற இன்னும் பொருளாதார வளர்ச்சியடையாத நிலை இன்றளவும் இருந்துவருகிறது. வர்ணாசிரமம் வகுத்த சாதி கட்டமைப்புகளும், அதன் வாயிலாக ஏற்பட்டு புரையோடி இன்று இந்தியச் சமூகத்தின் வாழ்வியலாக மாறி இருக்கிற சமூகச் சமத்துவமின்மை இங்கு இன்றளவும் மானுட வாழ்வை முரண்களுக்கு உள்ளாக்கி வருகின்றன. ஒவ்வொரு தனி மனிதனுக்கும், ஒவ்வொரு தனிக் குடும்பத்திற்கும் உணவு, உடை, கல்வி உள்ளீட்ட வசதிவாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதில் இருக்கிற மாறுபாடுகளால் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வைக் கொண்டிருக்கிற இந்திய நாட்டில் நீட் எனப்படும் மருத்துவக் கல்விக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முறையை நாடு முழுக்கத் திணிக்கும் மத்திய அரசின் செயல் நாட்டின் பன்மைத்துவத்தையும், சமூக நீதியையும் சீர்குலைக்கும் கொடுஞ்செயலாகும்.
இத்தேர்வு முறை எதிர்ப்பது வெறும் மருத்துவ இடங்கள் பறிபோகிறது என்பதற்காக மட்டுமல்ல, அது மறைமுகமாக மாநிலப் பாடத்திட்ட முறையினை மதிப்பிழக்கச் செய்து சிபிஎஸ்சி என்கிற தேசிய அளவிலான கல்வி முறைக்குத்தான் முக்கியத்துவம் கூட்டுகிறது என்பதாலும் தான். ஒவ்வொரு நிலத்திற்கு என்று தனித்தன்மைகள் உண்டு. தனித்துவ வரலாற்று-பண்பாட்டு சூழலியல் உண்டு. ஆனால், தேசிய அளவிலான கல்விமுறை என்பது இப்பெருநிலத்தில் வட பகுதியின் வரலாறே ஒட்டுமொத்த நிலத்தின் வரலாறாக மாறிப் போகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, பொருளாதார-சமூகப் பின்புலங்களைக் கணக்கில் கொள்ளாமல் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இம் நீட் தேர்வுமுறை இந்திய அரசியலமைப்பு நாட்டு மக்களுக்கு வழங்கி இருக்கக்கூடிய உயிர் நாடி வாக்குறுதியான கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. நாட்டின் பன்முகத்தன்மைக்கு உலை வைத்து குறிப்பிட்ட சமூக-பொருளாதார உயர் வகுப்பினரே பயன் பெறும் வகையில் திட்டமிட்டுப் புகுத்தப்பட்ட இத்தேர்வு முறைக்கு தொடக்கம் முதல் எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி மக்கள் மன்றத்தில் தொடர் பரப்புரைகளைச் செய்து வந்தது. மேலும், ஓராண்டு விலக்கு போதாது; நிரந்தர விலக்கே ஒற்றைத்தீர்வு எனவும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்தி வந்தது.
இத்தேர்வு முறையினைக் கடைசிவரை கடுமையாக எதிர்த்திருக்க வேண்டிய தமிழக அரசு மத்திய அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்து ஓர் ஆண்டு விலக்கு என்ற நிலைக்கு இறங்கி வந்து தற்போது அந்த ஓராண்டு விலக்கும் இல்லை என்று கைவிரித்திருக்கிறது. இதன்மூலம், அடித்தட்டுப் பொருளாதாரப் பின்புலத்தில் வந்தோரும், கிராமப்புறங்களில் மாநிலப்பாடத்திட்டத்தில் படித்தோரும் இனி மருத்துவராவது சாத்தியமில்லை என்ற கொடிய நிலைக்கு மத்திய, மாநில அரசுகள் இட்டுச்சென்றிருக்கிறது. தமிழகத்தில் கல்வி பயிலுகிற 90 சதவீத மாணவர்கள் சிபிஎஸ்சி கல்வி முறைக்கும், நீட் முறைக்கும் இன்னும் முறையாகத் தயார் ஆகாத சூழலில் , மாநில கல்வி முறைக்கு எதிராக நீட் தேர்வு முறை அமைந்திருக்கிற நிலையில் தற்பொழுது நீட் தேர்வு மதிப்பெண் மூலம்தான் மாணவர்களின் தேர்வு என்ற முடிவில் கொண்டுவந்து நிறுத்தியதென்பது தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் குழித் தோண்டி புதைக்கிற செயல். இது எக்காலத்திலும் மன்னிக்க முடியாத பெருந்துரோகமாகும்.
ஏற்கனவே கல்வியைத் தனியார் மயமாக்கியதன் விளைவாக மருத்துவத்தினைச் சேவையாகப் பார்க்கிற மனநிலை மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு அது பணம் பிடுங்கும் வர்த்தகமாக மாறி வரும் நிலையில் இந்த நீட் தேர்வு முறையானது மக்களின் உயிர் காக்கும் மருத்துவத்தினை வணிகமாக்கி சந்தைப்படுத்தும் உலகமயமாக்கலின் கோர வடிவத்திற்கு முழுசெயல் வடிவம் கொடுக்கவே பயன்படும். மேலும், இந்த ஒற்றைத் தேர்வு முறைக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் தனியார் பயிற்சி நிலையங்கள் நாடெங்கும் உருவாகி அவை ஏழை, எளிய மாணவர்களின் பெற்றோர்களின் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு வழிவகைச் செய்யும், அதற்கு வசதியில்லாத கிராமப்புற, ஏழை பொருளாதார-சமூகத் தளத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பதே இனி கானல் நீர் போலக் கனவாகிப் போகும்.
மாநிலப் பாடத்திட்டத்தில் 199.26 கட் அப் மதிப்பெண்கள் பெற்றாலும் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்குள் நுழைய முடியாது எனும் நிலையிருப்பது சகித்துக்கொள்ளவே முடியா பெரும் கொடுமை. வேலூரில் நித்யலட்சுமி எனும் பள்ளி தலைமை ஆசிரியர் தனது மகளின் மருத்துவக் கனவு சிதைந்ததால் தற்கொலை செய்து கொண்டிருப்பது இந்த நீட் தேர்வு முறையின் கொடுமையை அம்பலப்படுத்தி இருக்கிறது. பெருத்த மனவலியைத் தருகிற இது போன்ற தற்கொலை செயல்களில் இனி யாரும் செய்ய வேண்டாம் என உரிமையோடு கோருகிறேன். போராடி பெற்றே தீர வேண்டிய உரிமையை உயிர் கொடுத்து நம்மை அழித்துக் கொள்ளக் கூடாது எனவும் மனதார கோருகிறேன். மனமுடைந்து இறந்த அம்மா நித்யலட்சுமி அவர்களின் குடும்பத் துயரத்தில் நாம் தமிழர் கட்சி முழுமையாகப் பங்கேற்கிறது.
நடப்புக் கல்வியாண்டில் மாநில கல்வி முறை மூலம் ஏறத்தாழ 95% மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். சிபிஎஸ்ஸி கல்வி முறை மூலம் 5 % மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். ஆனால் வெறும் 5% சதவீத சிபிஎஸ்ஸி மாணவர்களுக்கு 37 சதவீத மருத்துவக் கல்லூரி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போது வெளியாகி இருக்கும் மாணவர் பட்டியலில் பிற்படுத்தப்ப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை மிகச்சொற்பம் என்பதில் இருந்தே இந்த நீட் தேர்வு முறை யாருக்குப் பயனளிக்கக் கூடியது என்பதை அறியலாம். ஏற்கனவே இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் விதமாக ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே கல்வி என்றெல்லாம் திட்டமிட்டு காய்நகர்த்தி வரும் பாஜக அரசின் கோரமுகத்தின் இன்னொரு வடிவமே இந்த நீட் தேர்வு முறையாகும்.தமிழக அரசு ஏற்கனவே சட்டமியற்றி பெற்றிருக்கிற 69% இட ஒதுக்கீட்டு முறைக்கு முற்றிலும் எதிராக உச்சநீதிமன்றம் இந்த நீட் தேர்வு முறை திணிப்பது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு நடந்திருக்கிற கொடும் அநீதி. இது கல்வியில் நடந்திருக்கும் இனப்படுகொலை. இனரீதியாக உயிரினை பறித்தால் மட்டுமல்ல இனம்பார்த்து உரிமையைத் திட்டமிட்டுப் பறித்தாலும் இனப்படுகொலை தான்.
இந்தக் கொடும் நிலை நீடிக்காது இருக்க நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்குக் கோரும் அவசரச் சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கத் தமிழக அரசு கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். மேலும், சல்லிக்கட்டு மீதான தடை விலகுவதற்கு இனி சாத்தியமே இல்லை என்று ஆட்சியாளர்களும், சட்டநிபுணர்களும் அறுதியிட்டுக் கூறியபோது அவையாவற்றையும் தவிடுபொடியாக்கிய இளையோர் படையின் தைப்புரட்சி போல, நீட் தேர்வு முறைக்கு எதிராக மாணவர் புரட்சி தமிழகத்தில் வெடித்திட தமிழ் இளையோர் கூட்டத்திற்கு அறைகூவல் விடுக்கிறேன்.
அதன் தொடக்கமாக, நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் சார்பில் வரும் செப்டம்பர் 2 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், அதில் மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென எனவும் பேரறிவிப்புச் செய்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திஅறிவிப்பு: 23-08-2017 கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – கரியாப்பட்டினம் (வேதாரண்யம்)
அடுத்த செய்திதமிழ்த்தென்றல் திரு.வி.க 135ஆம் ஆண்டு பிறந்தநாள் – சீமான் மலர்வணக்கம்