கரும்பு விவசாயிகளின் கவலைகளை அரசு தீர்க்க முன்வர வேண்டும். -நாம் தமிழர் கட்சி அறிக்கை

24

ஒரு டன் கரும்புக்கு ரூ.2,650 என தமிழக அரசு விலை நிர்ணயம் செய்திருப்பதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராடிவந்த நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டன் ஒன்றுக்கு ரூ.2,650 என விலை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். குலை பட்டினியாய் கிடந்தவனுக்கு வெறும் இலையை மட்டும் போட்டுவிட்டுச் செல்வதைப் போன்ற அறிவிப்பு இது. ரூ.2,650 என்பது கடந்த வருடத்தில் அறிவிக்கப்பட்ட விலை நிர்ணயத்தைக் காட்டிலும் 100 ரூபாய் குறைவானது. கரும்புக்கான உற்பத்திச் செலவு, பராமரிப்பு, வெட்டுக்கூலி, போக்குவரத்துக் கட்டணம் என செலவுகள் எக்கச்சக்கமாக எகிறிக்கிடக்கும் நிலையில், விவசாயத்தையே விட்டுவிட்டு ஓடிவிடலாமா என விவசாயிகள் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேதனை புரியாமல் குறைந்த விலை நிர்ணயத்தை அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து நிர்ணயிக்கும் இந்த விலை நிர்ணயத்தில் தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டங்களை மனதில் கொண்டு 3,500 ரூபாயை உரிய விலையாக நிர்ணயித்திருக்க வேண்டும். விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வஞ்சக அரசாக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், மாநில அரசு இந்தப் பிரச்னையை மனசாட்சியுடன் அணுகி இருக்க வேண்டும். தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவரான முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கரும்பு விவசாயத்தின் சிரமங்களை நன்கு அறிந்தவர். அவரே ஒரு கரும்பு விவசாயிதான். கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் கரும்பு கொள்முதல் விலையை  உயர்த்தி இருப்பதாகச் சொல்லும் முதல்வரின் அறிவிப்பு அவருடைய முயற்சியை வெளிக்காட்டினாலும், முழுமையான தீர்வாக கரும்பு விவசாயிகளின் கவலையைத் தீர்க்கவில்லை.

இதற்கிடையில், கரும்பு விவசாயிகளுக்குத் தரப்படாமல் இருக்கும் 362 கோடி ரூபாய் பாக்கித் தொகையைப் பெற்றுக் கொடுக்கும் அறிவிப்பையும் முதல்வர் அறிவிக்கவில்லை. உரிய வட்டியுடன் அந்தத் தொகையைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையையும் விவசாயிகளுக்கான பொங்கல் பரிசாக தமிழக அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். இனிப்பான கரும்பை விளைவித்தாலும் விலை நிர்ணயம் தொடங்கி விவசாய சிரமங்கள் வரை கரும்பு விவசாயிகளின் நிலை கசப்பாகத்தான் நீடிக்கிறது. உரிய விலையை மாற்றி அறிவித்தும், பாக்கித் தொகையை வழங்க ஏற்பாடு செய்தும் கரும்பு விவசாயிகளின் கவலைகளைத் தீர்க்க தமிழக அரசு மனசாட்சியுடன் முன்வர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் குறிப்பிட்டு உள்ளார்.

முந்தைய செய்திடெங்கு காய்ச்சல் அச்சத்தைத் தீர்க்க சிறப்பு மருத்துவர் குழு அமைக்க வேண்டும். – சீமான் கோரிக்கை
அடுத்த செய்திமொழிப்போர் ஈகியர் வீர வணக்க நிகழ்வு அந்தியூர் ஈரோடை மாவட்டம்