கதிராமங்கலம் மக்கள் மீதான அதிமுக அரசின் அடக்குமுறை சர்வாதிகார ஆட்சி முறையின் கோரத்தாண்டவம் : சீமான் கண்டனம்!

92

கதிராமங்கலம் மக்கள் மீதான அதிமுக அரசின் அடக்குமுறை சர்வாதிகார ஆட்சி முறையின் கோரத்தாண்டவம் : சீமான் கண்டனம்! நாம் தமிழர் கட்சி

கதிராமங்கலத்தில் நடந்தேறி வரும் அடக்குமுறைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (01-07-2017) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஒ.என்.ஜி.சி.யின் எண்ணெய்க்குழாய் பதிப்பால் விவசாயம் நிலங்கள் யாவும் பாழ்பட்டு நிலத்தடி நீர்வளம் முழுதாக மாசுபட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியற்று நிற்கிற நிலையில் தங்கள் நிலத்தின் மீது நிகழ்த்தப்படும் இவ்வளச்சுரண்டலையும், அதிகார அத்துமீறலையும் கண்டித்து அறவழியில் போராடிய கதிராமங்கலம் மண்ணின் மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தித் தாக்கியது சகித்துக் கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும்.இம்மண்ணும், நீரும் நாளைய தலைமுறைக்கானது எனும் இயற்கையின் இயங்கியலை உட்செரித்துக் கொண்ட மக்கள் அவற்றிற்கு ஒரு பங்கம் விளையும்போது அதற்கெதிராய் கிளர்ந்தெழுந்து போராடுவார்கள் எனும் உலகநியதியின் பாற்பட்டு உலகம் முழுதும் நிகழும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் போலவே கதிராமங்கலத்திலும் மக்கள் தங்களது நிலமீட்புப் போரை முன்னெடுத்திருக்கிறார்கள்.

ஒ.என்.ஜி.சி.யின் எண்ணெய்க்குழாய்க் கசிவினால் நிலத்தில் ஏற்பட்ட தீப்பிழம்பையும், நிறம் மாறி மாசடைந்த நீரின் தன்மையையும் கண்டு நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து அதற்கெதிராய் வெகுண்டெழுந்து உணர்வெழுச்சியோடு போராடிய கதிராமங்கலம் மக்களை அதிகார வலிமை கொண்டு அடக்கி ஆள முற்படுவது அரசப்பயங்கரவாத நடவடிக்கையாகும்.மாந்தநேயத்தை வாழ்வியல்நெறியாக ஏற்று மக்கள் மீது பற்றுறுதி கொண்டு வாழும் எவராலும் இதனை ஏற்க முடியாது. ஆயுதப்போராட்டத்தின் மூலம் விடுதலையை எட்டிய நாடுகளுக்கு மத்தியில் அறவழியில் போராடி விடுதலை பெற்ற நாடாகப் போற்றப்படும் இந்நாட்டில், அறவழியில் போராடும் மக்கள் மீது தடியடித் தாக்குதல் தொடுக்கப்படுவது என்பது இந்தியாவின் அடிப்படைக் கோட்பாட்டுக்கே எதிரானது. 

மண்ணின் உரிமைக்காகப் போராடுவோரைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவதும், கொடுஞ்சட்டங்களின் கீழ் சிறையில் அடைப்பதும், அதிகாரத்திமிர் கொண்டு அச்சுறுத்துவதும், போராட்டக்காரர்களைச் சமூக விரோதிகளாகச் சித்தரிப்பதும், போராட்டங்களை வன்முறைக்களமாக்கி வெறியாட்டம் போடுவதுமான நிகழ்வுகளின் உச்சமாகப் பாலியல் தொழில் செய்ததாக வழக்குப் போட்டு சிறைப்படுத்தி விடுவதாகக் கதிராமங்கலத்தில் போராடிய பெண்களைப் பகிரங்கமாக மிரட்டியிருக்கிறது. தமிழகக் காவல்துறை. மதுவிலக்கு கோரி போராடிய காந்தியவாதி சசிபெருமாளை, ‘எய்ட்ஸ் நோயாளியை விட்டுக் கடிக்கச் செய்வேன்’ என மிரட்டிய அதிமுக அரசு, தற்போது போராடிய பெண்களை மிரட்டியிருப்பதில் நமக்கு வியப்பேதுமில்லை என்றாலும், இது வாக்கு செலுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்த மண்ணின் மக்களுக்குச் செய்கிற பச்சைத்துரோகமாகும். இந்நாடு ஏற்றிருக்கிற மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரான மாபெரும் சனநாயக விரோதமாகும். பாஜகவிடம் சரணாகதி அடைந்துவிட்ட அதிமுக அரசின் இத்தொடர் மக்கள் விரோத ஆட்சியானது விரைவில் வீழ்ந்து தமிழரின் அறம்சார்ந்த ஆட்சி மீண்டும் மண்ணில் தழைத்தோங்கப்போவது திண்ணம்.

மத்தியில் ஆளும் பாஜக அரசானது, வளர்ச்சி எனும் ஒற்றை மந்திரச்சொல்லைக் கொண்டு இயற்கையைச் சீரழித்திடும் அபாயகரமான திட்டங்கள் அத்தனையையும் தொடர்ச்சியாகத் தமிழர் மண்ணில் திணித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. எண்ணெய் வளத்திலும், எரிகாற்று வளத்திலும் உள்நாட்டிலே தன்னிறைவு பெறத் துடிக்கும் இந்தியப் பேரரசு, இந்திய மக்களுக்குத் தேவையான உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கு என்ன திட்டத்தை முன்வைத்திருக்கிறது எனும் எளிய கேள்விக்கு நாட்டை ஆளும் ஆட்சியாளர்களிடம் என்ன பதிலுண்டு? உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்காற்றும் வேளாண்மையை அழித்துவிட்டு, வேளாண் நிலங்களைப் பிளந்து எரிகாற்று எடுத்துவிட்டு யாருக்கு வளர்ச்சியை அளிக்கப் போகிறார்கள்? புவி வெப்பமாதலைத் தடுக்கும்பொருட்டு பூமிக்கடியிலுள்ள வளங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு மாற்று எரிபொருள் வளத்தை நோக்கி உலகம் முழுவதும் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் மத்திய அரசு மேற்கொள்ளும் இவ்வகை நடவடிக்கைகள் இயற்கைக்கு எதிரானதில்லையா? இயற்கைக்கு ஒவ்வாத நடவடிக்கைகள் மேற்கொண்டு அதனைச் சிதைத்து அழிப்பது தான் இவர்கள் கூறும் வளர்ச்சியா? தேசப்பிதா காந்தியடிகளால் வேளாண் நாடு எனப் போற்றப்பட்ட இந்நாட்டில் வேளாண்மையை வளர்த்தெடுப்பதுதான் ஆகச் சிறந்த வளர்ச்சித் திட்டம் எனும் அறிவியல்பூர்வமான உண்மை நாட்டை ஆளும் கார்ப்பரேட் மூளைகளுக்கு உரைக்காமல் போனது ஏனோ எனும் தார்மீகக் கேள்விகள் இவ்விவகாரத்தில் மக்கள் மனங்களில் எழுகிறது.

தேர்தலின்போது குடும்பத்தோடு வாக்கை விற்பதும், தீயது என்று தெரிந்தும் ஒரே கட்சியைப் பல ஆண்டுகளாய் ஆதரிப்பதுமான நிகழ்வுகளை வாடிக்கையாகக் கொண்டிருக்கிற பெரும்பான்மை தமிழ்ச்சமூகத்தில் ஆட்சி அதிகாரத்தைத் தந்து அழகு பார்த்ததற்கு நன்றிக்கடனாகத் தடியடித் தாக்குதலும், கொடுஞ்சிறையுமே பரிசாய்க் கிடைக்கின்றன. அதிலும், திருப்பூரில் மதுபானக்கடையை முற்றுகையிட்டு போராடிய பெண்ணின் மீது காவல்துறையின் மூலம் தாக்குதல் தொடுத்துவிட்டு அப்படியொரு சம்பவமே அரங்கேறவில்லை எனச் சட்டமன்றத்திலேயே பச்சைப்பொய் பேசி வரும் ஆட்சியாளர்களின் காலமிது.

இதனை இனியாவது உணர்ந்து, காலம் காலமாகப் பிழையானவர்களைத் தேர்ந்தெடுத்து ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்து அடிமைபட்டுக் கிடக்கும் அடிமை மனநிலையிலிருந்து விடுபட ஒவ்வொருவரும் அமைதிப்புரட்சிக்கு ஆயத்தமாக வேண்டும். மக்கள் தந்த அதிகார வலிமையின் மூலம் மக்கள் மீதே வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் இக்கொடிய ஆட்சியாளர்களை மண்ணிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு முன்னோட்டமாக மக்கள் தங்கள் மனங்களிலிருந்து தூக்கியெறிய முன்வர வேண்டும். மண்ணின் வளத்தின் மீதும், மக்களின் நலத்தின் மீதும் அணுவளவும் அக்கறையோ, பற்றோ அற்ற திராவிட, தேசியக் கட்சிகளின் ஆட்சியாளர்களிடம் அதிகாரத்தைத் தருவது என்பது நம்மைத் தாக்குவதற்கு நாமே தடியைத் தருவதற்கு ஒப்பாகும் என்ற பேருண்மையை உணர்ந்து மக்கள் ஒரு மாற்று அரசியல் புரட்சிக்கு வித்திட வேண்டும். 

மண்ணின் மக்களின் உரிமைகளும், உணர்வுகளும் நசுக்கப்பட்டுக் கதிராமங்கலம் கிராமத்தை இன்னொரு காஷ்மீர் ஆக்க ஆட்சியாளர்கள் முயன்று வரும் வேளையில்
சனநாயகத்தைப் பற்றி மண்ணின் மக்களுக்குப் படமெடுக்கும் சனநாயகப்பற்றாளர்கள் இச்சனநாயக அத்துமீறல்கள் குறித்து வாய்திறக்க மறுப்பதும், களத்திற்குச் செல்லாது தவிர்ப்பதும் ஏன் என்று புரியவில்லை.ஆனால், மக்களுக்கான களத்தில் சமரசமற்று நிற்கும் நாம் தமிழர் கட்சியானது வழமைபோலக் கதிராமங்கலத்தில் நடந்தேறிய கொடுமைகளுக்கு எதிராகவும் களத்தில் நின்று வருகிறது.

ஆகையினால், நெடுவாசல், கதிராமங்கலம் எனத் தமிழர் நிலத்தின் மீது தொடுக்கப்படும் நாசாகாரத் திட்டங்கள் யாவற்றையும் திரும்பப்பெற வேண்டும் எனவும், கதிராமங்கலத்தில் மக்கள் மீது தடியடித் தாக்குதலை அரங்கேற்றிய காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் மக்களை அணிதிரட்டி மாபெரும் மக்கள் சனநாயகப் போராட்டங்களை மாநிலம் தழுவிய அளவில் முன்னெடுப்போம். 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வலைதளம்: https://goo.gl/i91NYh


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திதமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்: துறையூர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திதமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும்! தீர்வுகளும்! பொதுக்கூட்டம் – அஸ்தம்பட்டி (சேலம் மாவட்டம்)