“கணினி ஆசிரியர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” -செந்தமிழன் சீமான்

23

கணினி ஆசிரியர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்

2007ஆம் ஆண்டு தமிழக அரசு நடத்திய கணினி ஆசிரியர்கள் தேர்வில் 75க்கும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றும் ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெற்று அரசுப் பணியில் இருந்த 600க்கும் அதிகமான கணினி ஆசிரியர்கள் நீதிமன்றத் தீர்ப்பால் பணி இழந்துள்ளனர்.
 
தமிழக அரசு நடத்திய கணினி ஆசிரியர்களுக்கான அந்தத் தேர்வில் மொத்த மதிப்பெண்களான 150க்கு 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டும் அரசுப் பள்ளி கணினி ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு தேர்வு எழுதித் தேர்வானவர்களில் மோதுமான அளவிற்கு தேர்ச்சி பெறாத காரணத்தினால், தேர்வு மதிப்பெண்ணை 75இல் இருந்து 50 ஆக தமிழக அரசு குறைத்தது. அதில் தேர்வானவர்கள் அனைவரும் கடந்த 5 ஆண்டுக்காலமாக ஆசிரியர் பணியில் சேர்க்கப்பட்டு நிரந்தர பணியாளர்களாகவும் இருந்துள்ளனர் 
இந்த நிலையில், 75க்கு பதிலாக 50 மதிப்பெண்கள் என்று குறைத்து, அதன் அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்டவர்களை பணி நீக்கம் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் 600க்கும் மேலான பள்ளி கணினி ஆசிரியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நிரந்தர அரசு பணியாளர்களாக இருந்தவர்கள். அரசு வேலையினால் அவர்களுக்கு கிடைத்து வந்த பொருளாதார வாழ்வு பணி இழப்பினால் ஒரே நாளில் கனவாகிவிட்டது. இது அவர்களின் தவறுதலால் ஏற்பட்ட நிலை அல்ல. மாறாக, அரசு எடுத்த முடிவினால் அவர்கள் பணி வாய்ப்பு பெற்றார்கள்.
 
50 மதிப்பெண்கள் பெற்று பணியில் சேர்ந்த காரணத்தினாலேயே அவர்களின் கற்பித்தல் திறன் அதே அளவில் இன்று வரை இருக்கும் என்று மதிப்பிடவும் முடியாது. இந்த ஐந்தாண்டுக் காலத்தில் அவர்களின் திறன் நிச்சயம் மேம்பட்டிருக்கும். எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து செயல்படுத்த வேண்டிய நிலையில் இருக்கும் தமிழக அரசு, மனிதாபிமான கண்கொண்டு இவர்களை தமிழக அரசின் வேறு பணியிடங்களில் நியமிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திமதுரை மாவட்டம் சிலைமலைபட்டியில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-27.07.2013
அடுத்த செய்திமதுரை மாவட்டம் , பேரையூர் வட்டம் , சிலமலைபட்டியில் பொதுகூட்டம் மற்றும் கிளை திறப்பு