கடாபிக்கு மகிந்தா உற்சாகச் செய்தி – லிபிய மக்கள் பயங்கரவாதிகளாம்

21

அனைத்துலக நீதிமன்றத்தினால் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லிபிய அதிபர் கேணல் முவான்மார் கடாபிக்கு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா உற்சாகப்படுத்தும் செய்தியை வழங்கியுள்ளதாக லிபிய தேசிய தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

தனது சொந்த மக்களையே விமானங்கள் மூலம் குண்டு வீசி படுகொலை செய்துவரும் லிபிய அதிபருக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதுடன், பிடியாணையும் பிறப்பிக்கப்படவுள்ளது.

ஆனால் லிபிய அதிபரை தொலைபேசியில் தொடர்புகொண்டு உற்சாகப்படுத்திய சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா, போராட்டத்தில் ஈடுபடும் மக்களை பயங்கரவாதிகள் எனவும் சித்தரித்துள்ளார்.

நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க வீரர், எனவே மக்களின் போராட்டத்தை நீங்கள் வெற்றிகரமாக முறியடிப்பீர்கள் என நான் நம்புகிறேன். பயமில்லாது போராட்டக்காரர்களை வீழ்த்துங்கள். பயங்கரவாதிகளை தோற்கடிப்பதற்கு நாம் கைகோர்த்து செயற்படவேண்டும் என மகிந்தா தனது செய்தியில் தெரிவித்துள்ளதாக லிபிய தேசிய தொலைக்காட்சி நேற்று (04) தெரிவித்துள்ளது.

மகிந்தாவின் புகைப்படத்துடன் மீண்டும், மீண்டும் இந்த தகவலை ஒளிபரப்பிவரும், லிபிய தேசிய தொலைக்காட்சி அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் அதனை ஒளிபரப்பி வருகின்றது.

கேணல் கடாபி உடனடியாக வெளியேறவேண்டும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதல் தடவையாக தெரிவித்துள்ள நிலையில் மகிந்தாவின் செய்தி வெளிவந்துள்ளது.

கடாபி, அவரின் மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் போர்க்குற்றங்களை மேற்கொண்டுள்ளதாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பேச்சாளர் லொய்ஸ் மொரனோ நேற்று (04) தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கான பிடியாணை எதிர்வரும் மாதத்திற்கு முன்னர் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆசிய நாடுகளில் இருந்து கூலிக்கு அமர்த்தப்பட்ட படையினரை கொண்டு கடாபி படுகொலைகளை மேற்கொண்டுவருவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். கூலிக்கு அமர்த்தப்பட்ட ஒரு படைச் சிப்பாய்க்கு தலா 30,000 டொலர்கள் வழங்கப்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

நன்றி

ஈழம்ஈநியூஸ்

முந்தைய செய்திதுரைமுருகன் பதவி விலக வேண்டும் – சீமான்
அடுத்த செய்தி10-3-2011 அன்று வட சென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.