கச்சநத்தம் சாதியப் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம்! – சீமான் வேதனை

144

அறிக்கை: கச்சநத்தம் சாதியப் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம் – சீமான் வேதனை | நாம் தமிழர் கட்சி

கச்சநத்தம் சாதியப் படுகொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (30-05-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழ் தேசிய இனம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து தன் உரிமையைக் காக்க , தனது வாழ்வை காக்க, தன் நிலத்தைக் காக்க போராடி வருகிறது. தமிழர் நிலம் பல வளச் சுரண்டலுக்கு உள்ளாகி வாழ தகுதியற்றதாக மாறி நிற்கிறது. ஆற்று மணல் கொள்ளை, கனிம வள சுரண்டல், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், மீத்தேன்,ஷெல் எரிவாயு போன்றவற்றிற்காக நம் நிலத்தையும் வளத்தையும் இழக்கிற அபாயம், நீர் உரிமைகள் பறி போன அவலம் , ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடி 13 உயிர்களைப் பறி கொடுத்த கொடுமை போன்ற எட்டு திசையும் சுற்றி இருக்கிற பிரச்சனைகளுக்குத் தமிழர்கள் போராடி வருகிற நிலைமையில் சாதி மோதலினால் தமிழர்கள் இருவர் பலியான செய்தி கேட்டு உயிர் பதறுகிறது. இன்னமும் இந்த இனம் சாதி உணர்வால் பிளவுற்று உதிரம் சிந்தி உயிர்ப்பலி கொடுத்து இருக்கிறதே என நினைக்கும் போது தமிழின ஓர்மைக்காகச் சகலவிதமான அடக்குமுறைகளுக்கும் ,கொடுஞ் சிறை வாசத்திற்கும், கணக்கற்ற வழக்குகளுக்கும் அஞ்சாமல் தமிழின உரிமை போராட்ட களங்களில் நிற்கிற கோடிக்கணக்கான தமிழின இளைஞர்களின் மனம் கொதிக்கிறது.

ஒரு தேநீர்க்கடையில் சக தமிழன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறான் என்பதைக்கூட அனுமதிக்காத இந்தச் சுயசாதி பெருமித உணர்ச்சி தமிழ் தேசிய இன ஒற்றுமைக்கு மாபெரும் தடையாக விளங்குகிறது. உலகின் மூத்த குடியான தமிழினத்தில் சாதிய உணர்ச்சிக்கு, சாதிய வேறுபாட்டிற்கு இடமில்லை. இடையில் நுழைந்த சாதிய உணர்ச்சிக்கும், சாதிய வேறுபாட்டிற்கும் நாம் கொடுத்த விலையும் அடைந்த இழப்புகளும் கணக்கற்றவை. இந்த உலகில் வாழும் பல்வேறு தேசிய இனங்களைப் போல நமது இனமும் முன்னேற வேண்டும், நமது உரிமைகள் காக்கப்பட வேண்டும், நமது தாய் நிலம் மீட்கப்பட வேண்டும் என்கின்ற நமது கனவுகளுக்குச் சுயசாதி பெருமித உணர்ச்சி மாபெரும் தடையாக விளங்குகிறது.. இத்தனை சிறப்புகளையும் தாண்டி தமிழன் இன்னும் வரலாற்றிலிருந்து உரிய பாடம் கற்காமல் சாதிப் பெருமை பேசிக்கொண்டு சாதி கட்டமைப்புகளைக் காப்பாற்ற சக தமிழனை கதறக்கதற வெட்டி சாய்த்துக் கொண்டு இருப்பது உண்மையில் ஒவ்வொரு தமிழனுக்கும் அவமானமாக இருக்கிறது.

அந்நியரை எதிர்த்து தாய்நாட்டின் விடுதலைக்காகச் சாதி கடந்து ஒற்றுமையாய் நின்று உயிரை சிந்தி போராடிய வேலுநாச்சியாரும் குயிலியும் வாழ்ந்த சிவகங்கை நிலம் இன்று சாதி என்கின்ற கொடும் நோயினால் உதிரம் சிந்தி நிற்பது கண்டு நான் வேதனைப்படுகிறேன். சுய சாதிப் பெருமிதம் என்பது ஒருவித உளவியல் நோய். பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி இருக்கிற நம் தமிழினம் சாதிய உணர்ச்சிக்கும், சுயசாதி பெருமைக்கும் இடம் கொடுக்காமல் தமிழர் என்கின்ற ஓர்மை உணர்வோடு திகழ வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. ஒவ்வொரு தமிழின இளைஞனும் சாதிய உணர்ச்சியைத் தனது ஆழ்மனதிலிருந்து அழித்தொழித்தால்தான் அடிமை இருட்டில் இழி நிலையில் கிடக்கின்ற நமது இனம் மேல் எழும்ப முடியும்.

நினைப்பதற்கே பதறுகின்ற இந்தக் கொடிய கொலையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக அரசு உடனடியாக இதில் உரிய அக்கறை காட்டி இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பாரபட்சம் இன்றி உடனடியாகக் கைது செய்ய வேண்டும். மேலும் கலவரம் பரவாமல் இருக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக மாறாமல் இருக்கவும் உரிய தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சாதிய உணர்ச்சியினால் சக தமிழனை வெட்டி சாய்கின்ற இதுபோன்ற சம்பவங்களைத் தமிழக அரசு தனது இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் கொலை செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் கைது செய்து உரிய சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும், இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டுத் தன் உடைமைகளை இழந்து, உயிர் இழந்து வாடுகிற மக்களுக்கு உடனடியாக வாழ்வாதார உதவிகளைத் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

உயிர் இழந்த கச்சநத்தம் ஆறுமுகம் உள்ளிட்ட இருவரின் குடும்பத்திற்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இச்சம்பவத்தில் பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் சகோதர சகோதரிகளுக்கு எனது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.‌

கடவுள் வெறி சமய வெறி கன்னல் நிகர் தமிழுக்கு நோய்! நோய்! நோயே!
இடைவந்த சாதிஎனும் இடர் ஒழிந்தால் ஆள்பவள் நம் தாய்! தாய்! தாயே!

என்கின்ற பாவேந்தர் வாக்கிற்கேற்ப நமது தமிழ்ச் சமூகமும் சாதி எனும் இடர் ஒழிய தமிழர் என்கின்ற ஒருமை உணர்ச்சியுடன் ஒன்று திரள வேண்டுமென இதன் மூலம் நான் கேட்டுக்கொள்கிறேன்

– இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

முந்தைய செய்திதூத்துக்குடி அரசப் பயங்கரவாதத்தைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – திருநெல்வேலி
அடுத்த செய்தியார் சமூகவிரோதிகள்? – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்