ஓ.என்.ஜி.சி குழாய்ப்பதிப்புக்கு எதிராகப் போராடியோர் கைது: மக்கள் புரட்சி வெடிக்கும் – சீமான் எச்சரிக்கை!

26

அறிக்கை: கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் குழாய்ப்பதிப்புக்கு எதிராகப் போராடியோர் கைதுசெய்து சிறையிலடைப்பு : மக்கள் புரட்சி மண்ணில் வெடிக்கும் – சீமான் எச்சரிக்கை! நாம் தமிழர் கட்சி

ஓ.என்.ஜி.சி.யின் குழாய் பதிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடியவர்கள் சிறைப்படுத்தப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (03-06-2017) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலம் கிராமத்தில் விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் ஓ.என்.ஜி.சி.யின் செயலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டபேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 11 பேர் பிணையில் வெளியில் வர முடியாத வழக்குகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருக்கும் செய்தி பெருத்த மனவேதனையையும், அளவற்ற பெருங்கோபத்தையும் ஏற்படுத்துகிறது. மக்களின் சொத்துக்களையும், மண்ணின் வளங்களையும் சுரண்டிக்கொழுத்தோர் எல்லாம் மகிழ்ச்சியாக உலவித் திரிகிற நாட்டில் மண்ணின் உரிமைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் போராடுவோர் சிறைப்படுத்தப்படும் தொடர் நிகழ்வுகளானது அரசப்பயங்கரவாதத்தை தனது ஆட்சி முறையாகக் கொண்டு செயல்படும் அதிமுக அரசின் சர்வாதிகாரப்போக்கினை தோலுரித்துக் காட்டுவதாக உள்ளது. மண்ணின் மக்கள் மீதான அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளானது, வாக்கு செலுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்த அன்னைத்தமிழ் மக்களுக்குச் செய்கிறப் பச்சைத்துரோகமாகும்.

மண்ணின் வளங்களைச் சூறையாடுவோர் மீதும், மக்களின் உழைப்பைச் சுரண்டுவோர் மீதும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீதும், சட்டம் ஒழுங்கிற்குக் குந்தகம் விளைவிப்போர் மீதும் பாய வேண்டிய சட்டமும், வழக்குகளும் அவர்களையெல்லாம் விடுத்து, தங்களது உரிமைக்கானப் போராட்டத்தில் ஈடுபடும் ஏழை எளிய மக்களின் மீது பாய்கிறதென்றால் நாம் விரும்பித் தேர்ந்தெடுந்திருக்கிற ஆட்சியும், அதிகாரமும் யாருக்கானது என்பதைத் திறனாய்வு செய்ய வேண்டிய வரலாற்றுத் தருணமிது. ஆகையினால்,தேர்தலின்போது தவறானவர்களைத் தேர்ந்தெடுத்து ஆட்சி அதிகாரத்தில் ஏற்றிவைத்துவிட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகள் அழுது புலம்பிப் பயனில்லை என்ற படிப்பினையை உணர்ந்து செயலாற்ற வேண்டிய காலத்தேவை உருவாகியிருக்கிறது.

கதிராமங்கலம் கிராமத்தில் ஏற்கனவே பதிக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய்க்குழாய்களின் மூலமே விவசாயம் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டு, மக்கள் நிவாரணம் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிற நிலையில் தற்போது மீண்டும் எண்ணெய்க் குழாய்ப் பதிக்கிறப் பணிகளை முடுக்கிவிட்டிருப்பது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுகிற செயலாகும். அதற்கெதிராகப் போராடுவோரைக் கைதுசெய்வதோடு, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையைக் களமிறக்கி ஒரு நெருக்கடி நிலைக்குள் அக்கிராம மக்களைத் தள்ளி, மக்களின் அனுமதியின்றியே அவர்களின் நிலங்களில் குழாய்ப் பதிக்கும் இந்நடவடிக்கைகளானது மக்கள் நலனை முற்றும் முழுதாகப் புறந்தள்ளி நிகழ்த்தப்படும் பாசிசக்கொடுமையாகும்.

எனவே, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, மண்ணின் வளத்தைப் பாதிக்கும் அத்துணை நடவடிக்கைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும், கைதுசெய்யப்பட்டு மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ள பொதுமக்களையும், சிறைப்படுத்தப்பட்டுள்ள பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இதனைச் செய்யத்தவறி வழமைபோல அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்துவிட முற்பட்டால் மக்களின் மனங்களில் எரிந்து கொண்டிருக்கிற கோபக்கனலானது ஆட்சியாளர்களுக்கு எதிரான மாபெரும் மக்கள் புரட்சியாக இம்மண்ணில் வெடிக்கும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வலைதளம்: https://goo.gl/VWz2r4


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திமாட்டுக்கறியா? மதவெறியா? : மத்திய அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு: 04-06-2017 கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – திருவாடானை சட்டமன்றத் தொகுதி