ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பொங்கல் விழா மற்றும் மரபு உணவுத் திருவிழா

491

நாம் தமிழர் கட்சியின் சர்வதேச பிரிவான செந்தமிழர் பாசறை ஓமன் மற்றும் அதன் பண்பாட்டு மீட்சி அமைப்பான தமிழர் பண்பாட்டு நடுவம். ஒருங்கிணைத்த “தமிழர் திருநாளாம் பொங்கல் விழா மற்றும் மரபு உணவுத் திருவிழா”, மஸ்கட் அருகே உள்ள பர்கா பண்ணை வீட்டில் சிறப்புற நடைபெற்றது.

1500 க்கும் மேற்பட்ட தமிழ் உறவுகள் கலந்துகொண்ட இந்நிகழ்வு, இசைகளின் தாய் பறையிசை முழங்க, வீரத்தின் அடையாளமாய் சிலம்பம் சுழல ஓமனின் அந்த பகுதி மட்டும் தமிழர் நிலம் போல மாற, காலை 7 மணி அளவில், பொங்கல் வைத்தல், கும்மிப்பாட்டு, கோலப் போட்டி என மகிழ்ச்சியாகத் தொடங்கி, மண்பானைப் பொங்கல் வைத்து, பெண்களின் குலவையோடு, இயற்கை அன்னைக்கு நன்றிச் சொல்லி கதிரவன் வழிபாட்டோடு தொடங்கியது.நாம் தமிழர் இயக்க விதிகளின் படி,தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மகளிர் பாசறை மற்றும் மழலையர் பாசறையினரால் பாடப்பட்டது. விழா ஒருங்கிணைப்பாளர் திருமதி. செண்பகவல்லி இசக்கிமுத்து வரவேற்புரை நல்கினார். அதைத்தொடர்ந்து பரதநாட்டியம், குழந்தைகள் நடனம், குறு நாடகம் என நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.

மழலைச் செல்வங்களின் குரலில் அமிழ்தாம் தமிழை சுவைத்த வண்ணமே தமிழரின் மரபு பானங்களாக வரவேற்புச் சாறுகளின் சுவை அலாதியானது.
“அழகே அழகே தமிழ் அழகே” தமிழ்த்தாயின் அழகை நடன அசைவுகளில் நம்முன் நிகழ்த்திய மழலைக் கூறியது
“புலி புலி புலி புலி தமிழ் புலி!!
தமிழ்புலி ஆகிட “ழ” படி “.

ஓமனின் தமிழர் பண்பாட்டு நடுவம் குறித்த அறிமுகம், அதன் நோக்கங்கள், செயல்பாடுகள், பறை இசை,சிலம்பம், தமிழ் வகுப்புகள் குறித்த விவரங்கள் தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பாளார்
திரு. இரகுபதி அவர்களால் விளக்கப்பட்டன. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் சிலம்ப வகுப்புகளுக்கான ஆசிரியர், திரு.இரவிச்சந்திரன், அவர்தம் தமிழர் தற்காப்புக் கலைச் சேவைக்காக கௌரவிக்கப்பட்டார்.

உணவே மருந்து – பழந்தமிழர் மரபு, மறைக்கப்பட்ட தமிழ் ஆளுமைகள் எனும் தலைப்பில், சிறு உரை நிகழ்த்தப்பட்டதோடு மட்டுமின்றி, பாரம்பரிய பானங்களும் சுவைப்பதற்காக வழங்கப்பட்டன. மேலும் பாரம்பரிய மரபுப்படி தயாரிக்கப்பட்ட, ஆரோக்கியமான, சைவ, அசைவ தானிய உணவுகள் மற்றும் மாலைச் சிற்றுண்டி,
திரு. இராபர்ட் அவர்களின் “நிலாச்சோறு உணவகம்” காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளைகளுக்கும் வழங்கி சிறப்பித்தது. அதுமட்டுமின்றி புத்தகம், திருக்குறள் மற்றும் தமிழ் சொற்கள் பதித்த தளர்வாடையும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கடல் தாண்டி வசிக்கும் தமிழர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.

தமிழர்தம் வரலாற்றில் மறைக்கப்பட்ட தமிழர் ஆளுமைகளை தெளிவாக விளக்கும் புகைப்படக் கண்காட்சி தமிழ்த்தேசியத்தை இன்னும் வீரியமாக எடுத்துச் செல்லும் கடமையை உணர்த்தும் விதமாக இருந்தது. பின்னர் தமிழர் பண்பாட்டு நடுவத்தின் மூலம் பயிற்சி பெற்ற நம் குழந்தைகளின் பாடல், குழுப்பாடல், திருக்குறள் ஒப்பித்தல், பறையிசை, சிலம்பாட்ட நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் கலை நிகழ்ச்சிகளிலும், உறி அடித்தல், பந்து பிடித்தல், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகளிலும், ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர். முதல் பரிசு இரண்டாம் பரிசு என இல்லாமல், பங்கேற்பாளர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

செந்தமிழர் பாசறை ஓமன் உறுப்பினர் உரத்தூர் திரு. நாகேந்திரன் எழுதிய வெத நெல்லத் தொலச்ச வயக்காடு புத்தகம் வெளியிடப்பட்டது.
தமிழர் பண்பாட்டு நடுவ உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் வைத்து நிசுவா பொறுப்பாளர் திரு ஆன்ட்ரூ அவர்களால் இயக்கபட்ட கொடுப்பதே மகிழ்ச்சி குறும்படமும் வில்லுவண்டி என்ற வலையொளிப் பக்கமும் துவங்கி வைக்கப்பட்டது.

“தமிழர்கள் ஏன் தொழில் துவங்க வேண்டும் “ என்ற தலைப்பில் “வளைகுடா செந்தமிழர் பாசறை நிதிப் பொறுப்பாளர் திரு.இரவிவர்மன்” அவர்கள் சிறப்புரை வழங்கினார். தமிழ் முதலாளிகளை கவுரவிக்கும் விதமாக ஒமனில் தொழில் செய்யும் தமிழர் ஆளுமைகளான திரு.மசுகட் இராசா மற்றும் திரு. சுரேசு அவர்களுக்கு சிறந்த ஆளுமை விருது வழங்கப்பட்டது.எழுத்து ஆர்வத்தை கவுரவிக்கும் வண்ணம் இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் வாழ்வியலை ஆகச்சிறந்தநடையில் சொல்லலும் “வெத நெல்லத் தொலச்ச வயக்காடு” புத்தகத்தின் ஆசிரியர் திரு. நாகேந்திரன் அவர்களுக்கு சிறந்த படைப்பாளி விருது வழங்கப்பட்டது. பண்பாட்டுக் கலையான சிலம்பம் மற்றும் ஓகம் ஆகியவற்றைப் பயிற்றுவிக்கும் பணிக்காக திரு.இரவிச்சந்திரன் மற்றும் திரு.சுசித் அவர்களுக்கு பாரம்பரிய கலை மீட்பு விருது வழங்கப்பட்டது. செந்தமிழர் பாசறை ஓமன் ஒருங்கிணைப்பாளர் திரு கிருட்டிணமூர்த்தி அவர்கள் விழாவை ஏற்பாடு செய்தோர் மற்றும் வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி உரை பகர, விழா இனிதே நிறைவுற்றது.

தமிழர் பண்பாட்டு நடுவம் நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டு பிரிவான வீரத்தமிழர் முன்னணியின் ஓமன் கிளையாகும். இதன் மூலம், ஓமானில், பல மாகாணங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு, பறை இசை மற்றும் சிலம்ப பயிற்சிகள், அவர் தம் குழந்தைகளுக்கு தமிழ் வகுப்புகள் ஆகியன வாரந்தோறும் விடுமுறையான வெள்ளிக்கிழமையில், சீப் அருகே உள்ள பண்ணை வீட்டில் ஒழுங்கு செய்யப்படுகிறது. பல குழந்தைகளும், இங்கு வாரந்தோறும் கலந்துகொண்டு முனைப்போடு பயில்கின்றனர். இந்த பொங்கல் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணிகளை மசுகட் மாகாண பொறுப்பாளர் திரு சீனிவாசன் மற்றும் மகளிர் பாசறை சகோதரி திருமதி பொன்மணி அருண் மற்றும் திருமதி சரண்யா சுஜித் செய்து இருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சி திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைக்கும் பணிகளை ஓமன் வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தமிழ் திரு. செவ்வேள் செந்தில்குமார் அவர்கள் செய்து இருந்தார்கள்.

இந்த பண்பாட்டு நடுவம் நடத்தும் பொங்கல் விழா, ஜனவரி 18ஆம் தேதி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாட்டை நாம் தமிழர் செந்தமிழர் பாசறை ஓமான் மற்றும் தமிழர் பண்பாட்டு நடுவத்தின் உறுப்பினர்கள் செவ்வனே செய்திருந்தனர்.

முந்தைய செய்திஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்!  – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திலயோலா கல்லூரிக்கு எதிரான மதவாதிகளின் அச்சுறுத்தலை முறியடித்துக் கல்லூரியைக் காக்கத் துணை நிற்போம்! – சீமான்