ஒட்டகம் நுழைகிறது – தினமணி தலையங்கம்

13

‘எறும்பு ஊர கல்லும் தேயும்’ என்பது யாருக்குப் புரிகிறதோ இல்லையோ, இன்றைய மத்திய ஆட்சியாளர்களுக்கு மிகத் தெளிவாகவே புரிந்திருக்கிறது.

ஆறுமாதங்களுக்கு முன்பு, ஒரே இலச்சினை (சிங்கிள் பிராண்ட்) கொண்ட பொருள்கள் விற்பனையில் 51 விழுக்காடு அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது பல இலச்சினைப் (மல்டி பிராண்ட்) பொருள்களை சில்லறையில் விற்பனை செய்வதற்கும் இதேபோல அனுமதிக்கலாம் என்ற கோரிக்கை எழுந்தது. எதிர்ப்பும் வந்தது. அப்போது பிரதமர் “அரசு இந்த விவகாரத்தில் நிதானமாக, அனைவரையும் கலந்துபேசித்தான் முடிவு செய்யும்’ என்று கூறியபோது பரவாயில்லையே, நமது பிரதமர்கூட சராசரி மக்களின் நல்வாழ்வைப் பற்றியும் கவலைப்படுகிறாரே என்று மகிழ்ச்சியாக இருந்தது.

இதற்கிடையே, தனியார் ஆய்வு நிறுவனம் ஒரு களஆய்வு அறிக்கையை வெளியிட்டது. இந்தியாவில் காய்கறி, பழங்கள் விலை குறைய வேண்டுமானால், பல இலச்சினைப் பொருள்களின் சில்லறை விற்பனையிலும் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம்தான் சாத்தியமாகும். அவர்கள் வல்லமை படைத்தவர்கள். எல்லா இடங்களிலும் குளிரூட்டு நிலையங்கள் அமைத்து, விமானம் மற்றும் வாகனப் போக்குவரத்து மூலம் விளைபொருள்களை விரைந்து கொண்டு வந்துவிடுவார்கள். ஆகையால், இந்தியாவில் காய்கறி, கனிகள் அழுகிப்போய் வீணாவது குறையும். இந்த நன்மை அதன் விற்பனை விலையைக் குறைக்கும். தற்போது காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயிக்குக் கொடுக்கப்படும் கொள்முதல் விலையைக் காட்டிலும் இரண்டரை மடங்கு விலையை இந்திய நுகர்வோர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அன்னிய நேரடி முதலீட்டில் சங்கிலித் தொடர் நிறுவனங்கள் வந்துவிடுமேயானால், விவசாயிக்குக் கொடுக்கும் விலையில் ஒரு மடங்கு கூடுதல் விலையை மட்டுமே இந்திய நுகர்வோர் கொடுப்பர். அதனால் காய்கறி விலை குறைந்துவிடும்.

அடுத்ததாக, சில செய்திகள் ஆங்காங்கே வெளியாகத் தொடங்கின. ஆனானப்பட்ட சீனாவிலேயே 25-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் சக்கைப்போடு போடுகின்றன. அந்த நிறுவனங்கள் ஆண்டுதோறும் 11 சதவீத வளர்ச்சியை அடைந்து வருகிறது.

இப்போது, விலைஉயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்க அரசு நியமித்த அமைச்சுப்பணி அதிகாரிகள் குழுத் தலைவரும், முதன்மைப் பொருளாதார ஆலோசகருமான கெüசிக் பாசு நிருபர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்: பல இலச்சினைப் பொருள்கள் (சில்லறை) வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதும், விவசாயப் பொருள் கொள்முதல் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்வதும் விலைவாசியைக் குறைக்க உதவும் என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது எங்கள் பரிந்துரைதான், கொள்கை அல்ல என்றும் சாதுர்யமாகக் கூறியுள்ளார்.

அடுத்தநாளே, சில்லறை வணிகத்தில் உள்ள சங்கிலித் தொடர் நிறுவனங்கள் ஆதரவுக் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டன. இதைத்தானே நாங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறோம், சீக்கிரமாக அனுமதி தாருங்கள் என்கிறார்கள்.

அடுத்து அரசு நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தீர்மானிப்பது அத்தனை கடினமல்ல. சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் நன்மைதான் என்று ஆய்வறிக்கை மூலம் நம்மைப் பக்குவப்படுத்தி, சீனாவிலேயே சக்கைப் போடு போடுகிறது என்று எதிர்க்கட்சிகளுக்கும் புரியவைத்து, அமைச்சுப்பணி அதிகாரிகள் குழுவையும் சொல்ல வைத்துவிட்ட பிறகு, இதை அனுமதிப்பது அரசுக்கு எந்த விதத்திலும் சிக்கல் இல்லாதது.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்து, தொடர்சங்கிலி நிறுவனங்களை மேலும் வலுவாக்கி, தற்போதுள்ள சிறு வணிகர்களின் தொழிலை நஷ்டப்படுத்துவதற்கும், விவசாய நிலத்தைப் பன்னாட்டு நிறுவனங்களுக்காகக் கையகப்படுத்தி, விவசாயிகளுக்கு மிகச் சிறுதொகையைக் கொடுத்து வெளியேற்றுவதற்கும் அதிக வேறுபாடு கிடையாது என்பதை அரசு உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.

அவர்கள் வந்தால் காய்கறிகள் அழுகாது, கொள்முதல் விலையைக் காட்டிலும் ஒரு மடங்கு விலையைத்தான் நுகர்வோர் தரவேண்டியிருக்கும் என்பதெல்லாம் இனிப்பான செய்திதான். ஆனால், இந்தச் சூழல் வரும்போது, எத்தனை சிறு வணிகர்கள் கடையை மூட நேரிடும், எத்தனை குடும்பங்களின் வாழ்வாதாரம் நசியும், அவர்களுக்கு மாற்றுத்தொழில் என்ன என்பது குறித்து இந்தத் தனியார் நிறுவனங்கள் ஆய்வு செய்துள்ளதா என்றால், நிச்சயமாக இல்லை. இத்தகைய ஆய்வையும் புள்ளிவிவரங்களையும் அறிந்துகொள்ளாமல் வெறும் ஒருதலைப்பட்சமாகச் சொல்லப்படும் நன்மைகளை மட்டுமே கருத்தில்கொண்டு எப்படிச் சம்மதிப்பது?

பத்தோ, பன்னிரெண்டோ பெரு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு முன்பணம் என்கிற பெயரில் கடன் கொடுத்து அவர்களது உற்பத்தியை ஒட்டுமொத்தமாகப் பெற்றுக்கொள்ளும். ஆரம்பத்தில் இனிக்கும் இந்தச் சலுகை விரைவிலேயே விவசாயிகளின் கழுத்தில் விழும் சுருக்காக மாறி விலை நிர்ணயம் பெரு நிறுவனங்களின் தனி உரிமையாக மாறிவிடும்.

பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சீனா, இந்தியா மீது கொள்ளை(யிட)ஆசை. இங்கே நுகர்வோர் அதிகம். உலக வங்கியின் கருத்துக்கணிப்பின்படி, உலகம் முழுவதும் 2000-ம் ஆண்டில் 430 மில்லியனாக இருந்த நடுத்தர வருவாய்ப் பிரிவினர் எண்ணிக்கை, 2030-ம் ஆண்டில் 1.15 பில்லியனாக உயரும். இவர்களில் 93 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் இருப்பார்கள். இதில் பெரும்பான்மையோர் இந்தியா, சீனாவில் இருப்பார்கள். ஆகவேதான், சில்லறை வணிகத்திலும் தொடர்சங்கிலி கடைகளிலும் கோலோச்சுகிற வால்மார்ட், டெஸ்கோ, மெட்ரோ, கேர்ஃபோர் போன்ற நிறுவனங்கள் இந்தியாவின் வாசலில் பைநிறைய பணத்தோடு தவம் கிடக்கின்றன.

சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு. அங்கே ஊழல் செய்தால், ஒப்பந்தத்தை மீறினால், உடனே கடும் நடவடிக்கை, அபராதம் எல்லாமும் உண்டு. இந்தியா அப்படியான நாடு அல்ல. இங்கே ஜனநாயகம் அநியாயத்துக்கும் இருக்கிறது. ஊழல் செய்யும் நிறுவனத்தை தண்டிக்க வேண்டுமானால், கூட்டணிக் கட்சியின் தயவு, அவர்களின் உறவுகள் பங்குதாரர்களாக இருக்கலாம் என்கிற நிதானம், அடுத்தடுத்து நீதிமன்றப் படிகள் எல்லாமும் இருக்கின்றன.

விலை குறைவது ஒரு பக்கம் இருக்கட்டும். சில்லறை வணிகர்களின் வேதனைகள்…?

நன்றி

தினமணி

முந்தைய செய்திமனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையில் நடைபெற்ற தமிழர் படுகொலை காணொளி
அடுத்த செய்திதடைக்காலம் நிறைவு கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள்