ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு முழு ஆதரவு: ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்

18

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் காணப்படும் பரிந்துரைகளுக்கு நாம் எமது முழுமையான ஆதரவுகளை வழங்குவதுடன், சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சுயாதீன விசாரணைக்குழு அமைக்கப்படவேண்டும் எனவும் தென்ஆபிரிக்க அரசின் பிரதான அரசியல் கட்சியான ஆபிரிக்க தேசிய பேரவை நேற்று (06) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை வருமாறு:

சிறீலங்காவில் நடைபெற்ற போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைத்திருந்த நிபுணர் குழுவில் தென்ஆபிரிக்காவைச் சேர்ந்த முன்னனி நீதிபதி ஜஸ்மின் சூகாவும் இடம்பெற்றிருந்தார்.

சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் இரு தரப்பினரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகளுக்கு எதிரான இந்த வன்முறைகளை நாம் கண்டனம் செய்கிறோம். மேலும் மோதலில் ஈடுபட்ட தரப்பினர் தமது பிரச்சனைகளை பேச்சுக்களின் மூலமும், அமைதியான வழிகளிலும் தீர்க்கவேண்டும்.

சிறீலங்கா அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் முறிவே இராணுவத் தீர்வுக்கு வழியேற்படுத்தியிருந்தது என்பதை நாம் கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நிபுணர் குழுவின் அறிக்கையில் காணப்படும் பரிந்துரைகளுக்கு நாம் எமது முழுமையான ஆதரவுகளை வழங்குவோம். சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சுயாதீன விசாரணைக்குழு அமைக்கப்படவேண்டும் என்ற பரிந்துரைக்கும் நாம் எமது ஆதரவுகளை வழக்குவோம்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சிறீலங்கா அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதுடன், உண்மையான இனநல்லிணக்கப்பாடுகளை ஏற்படுத்தவும் அது முற்படவேண்டும் என நாம் கோருகின்றோம்.

கலாநிதி ஏ. ஏப்ராகிம்
தலைவர், அனைத்துலக விவகாரங்கள்,
ஆபிரிக்க தேசிய பேரவை.

தமிழாக்கம்: ஈழம் ஈ நியூஸ்

முந்தைய செய்திவரும் 08.05.11 அன்று குமாரபாளையம் நாம் தமிழர் கட்சியினர் இந்திய அரசை ஐ.நா வின் போர்குற்ற அறிக்கையை ஆதரிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தயுள்ளனர்
அடுத்த செய்தி[படிவம் இணைப்பு] பான்கிமூனுக்கு 2 கோடி கையெழுத்துகளை விரைந்து அனுப்பவும்: பெ.தி.க தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள்