ஏதிலி சந்திரகுமார் விடுதலை: தமிழக அரசு தலையிட வேண்டும்

67

ஏதிலி சந்திரகுமார் விடுதலை: தமிழக அரசு தலையிட வேண்டும்

பூந்தமல்லி சிறப்பு முகாமில் சட்டத்திற்குப் புறம்பாக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலி சந்திரகுமாரை விடுதலை செய்வது போல் ஒரு நாடகமாடி, மீண்டும் சிறப்பு முகாமில் சிறை வைத்திருக்கிறது தமிழக காவல் துறையின் கியூ பிரிவு.

சிறப்பு முகாமில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமெனவும், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, ஈழத் தமிழ் ஏதிலிகள் இருக்கும் ஏதாவது ஒரு முகாமிற்கு மாற்றும்படியும் பல காலமாக போராடி வந்துள்ளார் சந்திரகுமார். இவருடைய கோரிக்கையை ஏற்று, கும்மிடிபூண்டி முகாமிற்கு மாற்றுவதாக கூறிய கியூ பிரிவு, 15.05.2013 அன்று பிறப்பிக்கப்பட்ட அந்த அரசு உத்தரவில், அவர் மனைவி இருக்கும் கும்மிடிபூண்டி முகாமிற்கு மாற்றுவதாக ஒரு வரியை சேர்த்துவிட்டது. சந்திரகுமாரின் மனைவி மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்து, வெளியில்தான் வாழ்ந்து வருகிறார்.

சிறப்பு முகாமில் இருந்து சந்திரகுமாரை விடுவித்து கும்மிடிபூண்டி முகாமிற்கு அழைத்து சென்றபோது, அவரை ஏற்க மறுத்த வட்டாட்சியர், அரசு உத்தரவில், சந்திரகுமாரின் மனைவி கும்மிடிபூண்டி முகாமில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அவரது மனைவி இங்கு இல்லை என்று கூறி, சந்திரகுமாரை ஏற்க மறுத்துவிட்டது. உடனடியாக அவரை மீண்டும் பூந்தமல்லி சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து அடைத்துள்ளது கியூ பிரிவு. அரசு உத்தரவில் உள்ள பிழையை மாற்றி, தன்னை வெளி முகாமிற்கு மாற்றுமாறு சந்திரகுமார் விடுத்த கோரிக்கைக்கு எந்த பதிலும் கியூ பிரிவு அளிக்காத காரணத்தினால், அவர் மீண்டும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதேபோல் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மற்றொரு ஈழத் தமிழ் ஏதிலியும் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக காவல் துறையின் கியூ பிரிவு நடவடிக்கை மனிதாபிமானமற்ற, கேவலமான ஒரு நாடகமாகும். ஒருவரை விடுவிப்பதுபோல் விடுவித்து, உத்தரவை பிழையாக பிறப்பித்து, மீண்டும் சிறையில் அடைப்பது சட்டப்படி நடந்துகொள்ள வேண்டிய ஒரு துறையின் செயலாக இருக்க முடியுமா? நம்மை நாடி வந்த தஞ்சமடைந்த ஈழத் தமிழ் சொந்தங்களை வதைப்பதற்கு இப்படியெல்லாம் வழி தேடி அலைவதா? அவர்கள் செய்த குற்றமென்ன? சிங்கள அரசின் இன அழித்தலில் இருந்து தப்பித்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தது குற்றம் என்று கூறுகிறதா தமிழக காவல் துறை? ஈழத் தமிழ் ஏதிலிகளை வதைப்பதையே தனது ஒற்றை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறதே கியூ பிரிவு? என்ன காரணம்?

கியூ பிரிவின் இப்படிப்பட்ட சித்ரவதைகளை தாங்க முடியாமல்தான், தங்கள் உயிர் நடுக்கடலில் போனாலும் போகட்டும் என்ற முடிவுடன், தங்களுடைய நகைகளையெல்லாம் விற்று, ஆஸ்ட்ரேலியா போன்ற நாடுகளுக்கு நம் சொந்தங்கள் தப்பிச் செல்கின்றனர். ஈழத் தமிழ் சொந்தங்களின் வாழ்வில் தமிழக முதல்வர் அக்கறை காட்டும் அதே வேளையில், அவரின் அதிகாரத்தின் கீழ் இயங்கும் தமிழக காவல்துறையின் கியூ பிரிவு ஏன் இப்படி அராஜகமாக நடந்துகொள்கிறது என்று புரியவில்லை.

சிறப்பு முகாம் என்ற ஒன்று எதற்காக என்று பல முறை நாம் கேள்வி எழுப்பிவிட்டோம். அதற்கு பதில் இல்லை. இப்பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என்றும் பல முறை கூறிவிட்டோம், ஒன்றும் நடக்கவில்லை. இப்போதும் கேட்டுக்கொள்கிறோம், தமிழக முதல்வர் இப்பிரச்சனையில் தலையிட வேண்டும். தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழ் ஏதிலிகளை மரியாதையுடனும், மனிதாபிமானத்துடனும் நடத்த வேண்டும் என்று கோருகிறோம். இந்த கோரிக்கையே இறுதி கோரிக்கையாக இருக்கட்டும் என்ற எண்ணத்துடன், தமிழக முதல்வர் மனிதாபிமானத்துடன் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திகொடியேற்றம் தோட்டியம் 18-06-2013
அடுத்த செய்திநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு போகாமல் தடுப்போம்