”எங்கும் பாதுகாப்பில்லை. நாதியற்று நிற்கிறது தமிழினம்”- சிங்கப்பூரில் தமிழர்களை வேட்டையாடும் காவல்துறை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை

58
சிங்கப்பூரில் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பேருந்து விபத்து ஒன்றில் உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டம் சத்திரம்-சீகம்பட்டியைச் சேர்ந்த குமாரவேலின் மரணத்துக்கு நீதி கோரி, அதனை நேரில் பார்த்தவர்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் மீது சிங்கப்பூர் அரசு கொடும் அடக்குமுறையை ஏவியிருக்கிறது.
தமிழர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டதுடன், காவல்துறை ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து தமிழர்களை வேட்டையாடி வருகிறது. கைது செய்யப்பட்ட தங்கள் சொந்தங்களைத் தொடர்புக் கொள்ளக் கூட முடியாமல் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த உறவினர்கள் பரிதவித்துக் கிடக்கிறார்கள்.
வெறும் காடுகளாய், முட்புதர்களாய் கிடந்த தேசத்தை செம்மைப் படுத்தி, செழிப்பாக்கி சிறப்பு மிக்க சிங்கப்பூர் நாடாக ஆக்கியவர்கள் தமிழர்கள். தமிழர்களின் தாயகமான தமிழ்நாடு இருக்கும் இந்தியாவிலேயே தமிழ் ஆட்சிமொழியாக இல்லாத நிலையில் தமிழர்களின் உழைப்பை மதித்து தமிழை ஆட்சிமொழியாக்கியவர் சிங்கப்பூரின் தந்தை லீ க்வான் யூ.
ஈழத்தின் எம் தமிழினம் படுகொலை செய்ய்பபட்ட போது “இராஜபக்சே வென்றதாக நினைக்கலாம். ஆனால் தமிழர்களின் போராட்டத்தை அவ்வளவு எளிதாக ஒடுக்கிவிட முடியாது” என எம் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய தலைவர் லீ க்வான் யூ அவர்கள். ஆனால் இன்றைய அரசு அதே தமிழர்களை, அதிலும் உழைக்கும் மக்களை, கொடுமையாக அடக்குவதும் கடுமையான சட்டங்களின் அடிப்படையில் தண்டனை விதிப்பதும் பெரும் வேதனை அளிக்கிறது.
இது வெறும் விபத்தினால் விளைந்த கலவரம் அல்ல என்பதையும் பன்னெடுங்காலமாக சீனர்களால் ஒடுக்கப்படும் மக்களாகவே நடத்தப்பட்டு வந்த தமிழர்கள் தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்த இந்தப் போராட்டத்தை வாய்ப்பாக்கிக் கொண்டார்கள் என்பதையும் சிங்கப்பூர் அரசு உணர்ந்து எம் மக்களை விடுவிக்க வேண்டும்.
கிழக்காசிய நாடுகளிலும், தென்னாப்பிரிக்காவிலும் உழைக்கும் மக்களாய் குடி பெயர்ந்த தமிழர்கள், தங்களை ரத்தத்தை உரமாக்கி அந்நாடுகளை வளமாக்கினர் என்பது வரலாறு. ஆனால் இன்று வளமிக்கதாய் விளங்கும் அதே நாடுகளில் தமிழர்கள் ஒடுக்கப்படுவதும், அடக்குமுறைக்கு ஆளாவதும், அடித்து விரட்டப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
வெளிநாடுகளில்தான் இந்த நிலை என்றால், இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள கேரளத்தின் அட்டப்பாடியில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தமிழர்களை அவர்கள் வாழ்ந்து வந்த நிலத்தை விட்டு கேரள அரசு துரத்துகிறது. தமிழகத்தில் குடியேறியுள்ள மலையாளி பெரு முதலாளிகளைப் போன்றவர்கள் அல்ல அவர்கள். காலம் காலமாக அட்டப்பாடியில் வாழ்ந்து வரும் மக்கள். ஆனால் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இன்று அவர்கள் அடித்து விரட்டப்படுகின்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே நடவடிக்கை எடுப்பதாகச்  சொல்லும் கேரள அரசு, அதே உச்சநீதிமன்றம் ஒரு முறையல்ல, பல முறை, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று உறுதி படக்  கூறியும் பல ஆண்டுகளாக அதை மதிக்காமல் அலட்சியப்படுத்துகிறது. ஆக, உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பதை தங்களுக்கு தேவையான போது மட்டும் பயன்படுத்துவதும் பிற நேரங்களில் அலட்சிய்படுத்துவதும் என கேரள அரசு இரட்டை வேடம் போடுகிறது.
வெளிநாடுகளில் இந்தியர்களாக குடிபெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இன்னல் ஏற்பட்ட போதும் இந்திய அரசு கேள்வி கேட்கவில்லை. அவர்களுக்கு உதவ முன் வரவில்லை. அலட்சியப்படுத்துகிறது. இந்திய நாட்டிற்குள் இந்தியர்களாய் வாழும் தமிழர்கள் அடித்து விரட்டப்படும் போதும் அதைத்  தடுக்க இந்திய அரசுக்கு மனமில்லை.
இலங்கையைத் தாயகமாகக் கொண்ட தமிழர்களுக்கு அந்நாட்டில் வாழ உரிமையில்லை. இந்தியாவைத் தாயகமாக கொண்ட தமிழர்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை. நாதியற்று நிற்கிறது தமிழினம்.
இந்நிலையில் தமிழக அரசு இதில் தலையிட்டு, சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்களுக்கும் அட்டப்பாடியில் விரட்டியடிக்கப்படும் தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்க உடனடியாக ஆவண செய்ய வேண்டும் எனக்  கோருகிறேன்.
நாம்  தமிழர் கட்சி
தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமான்
முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி பொன்னமராவதி ஒன்றியம் சார்பாக குடிநீர் வேண்டி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
அடுத்த செய்திகேரளா அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை நடத்தும் மாபெரும் தொடர் முழக்க பட்டினி போராட்டம