ஈழத்தமிழர்களின் உண்மை நிலையறிய ஐ.நா. குழு செல்ல வேண்டும்: நாம் தமிழர் கட்சி

22

இலங்கையில் போருக்குப் பின்னான நிலையில் தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகள் குறித்து நேரில் கண்டறியச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவரான சுஷ்மா சுவராஜ், ஒரே நாளில் வன்னி முகாமில் இருந்து கிளிநொச்சி, முல்லைத் தீவு வரை புயல் வேகத்தில் பயணம் செய்து ஆங்காங்கு வாழும் மக்கள் சிலரிடம் மட்டும் பேசிவிட்டு, ஈழத்தமிழர்களின் மறுவாழ்வுத் தொடர்பாக அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் பணிகள் திருப்தியளிப்பதாகத் தெரிவித்துள்ளது வியப்பளிக்கிறது.

வன்னி முகாம்களில் இன்னமும் இருக்கின்ற தமிழர்களிடம் நாடாளுமன்றக் குழுவினர் பேசியபோது, அவர்கள் ஒரு அச்சத்துடனேயே தங்களிடம் பேசியதாக தமிழ்நாட்டில் இருந்து சென்ற இரண்டு உறுப்பினர்கள் கூறியுள்ளனர். தங்களோடு பேசிய அம்மக்களின் கண்களில் அச்சம் தெரிந்தது என்று மற்றொரு காங்கிரஸ் உறுப்பினரான கிருஷ்ணசாமி கூறியுள்ளார். முல்லைத் தீவில் மக்களிடம் பேசியபோது அங்கு ஏராளமான இராணுவத்தினரும், சாதாரண ஆடையில் உளவுப் பிரிவினரும் குவிக்கப்பட்டிருந்தனர் என்று பல நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால், இராணுவத்தின் கெடுபிடி ஏதும் இருப்பதாக எந்தத் தமிழரும் கூறவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.

எனவே, இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயணம் எந்த விதத்திலும் பயனளிக்காது என்று கூறப்பட்ட கருத்துகள் உண்மையாகியுள்ளன. 2006ஆம் ஆண்டு முதல் அங்கு நடந்த தமிழின அழிப்புப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒன்றே முக்கால் இலட்சம் பேர். போரினால் விதவையான தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கை 90 ஆயிரம். இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? போரினால் இடம்பெயர்ந்த மூன்று இலட்சம் பேரில் மறுகுடியமர்த்தம் செய்யப்பட்டவர்கள், ஏற்கனவே அவர்கள் வாழ்ந்த இடங்களில்தான் குடியமர்த்தப்பட்டுள்ளார்களா? தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவ முகாம்களும், இராணுவப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களும் எந்த அளவிற்கு தமிழர்களின் வாழ்விடங்களை அபகரித்துள்ளன? தமிழர்களின் பூர்விக மண்ணில் சிங்கள குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக வரும் குற்றச்சாற்றுகள் பற்றிய உண்மையென்ன? அவ்வாறு குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு தமிழர்களின் காணிகள் தாரை வார்க்கப்படுவதாக கூறப்படுகிறதே, அது உண்மையா? போன்ற முக்கியமான விடயங்களுக்கு பதில் அறிவதில் எந்தவித முனைப்பும் காட்டாமல் இந்திய நாடாளுமன்றக் குழு பயணம் செய்து வருகிறது.

இன்றளவும் தமிழர்கள் கடத்தப்படுகின்றனர், தமிழ்ச் சிறுமிகளை இராணுவத்தினர் கடத்திச் சென்று கற்பழிக்கின்றனர், இராணுவத்தினர் வன்புணர்ச்சி செய்து கருவுற்ற பெண்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் யாழ்பாணத்தில் மட்டும் 300க்கும் அதிகமானவர்கள் உள்ளனர் என்றும், போரில் கணவனை இழந்த பல தமிழ்ப் பெண்கள் யாழ்ப்பாணத்தில் தங்கள் உடலை விற்று வாழ்கை நடத்தி வருகிறார்கள் என்றும் யாழ்ப்பாணம் பகுதிக்கான அரசு முகவர் இமால்டா சுகுமார் கூறியிருக்கிறாரே, ஏன் அப்படிப்பட்ட நிலை இருக்கிறது? என்பதை விசாரித்து அறியாமலேயே இந்த உண்மைக் கண்டறியும் குழு பயணம் செய்துக்கொண்டிருக்கிறது.

எனவே இப்படிப்பட்ட குழுவின் பயணத்தால் துயரத்திலும், அவலத்திலும் வாழும் தமிழர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. மேம்போக்காக ஒரு பயணத்தை மேற்கொண்டு இந்தக் குழு அளிக்கும் அறிக்கை, உண்மையை மறைப்பதாகவும், இலங்கை அரசைக் காப்பதாகவுமே இருக்கும் என்பதற்கு சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ள கருத்துக்களே சான்றாகும். சிங்கள இனவெறி இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ், அரசு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு, நடை பிணங்களாக அங்கு தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பான, முழு உரிமையுடைய வாழ்வு கிடைக்க வேண்டுமெனில் அதற்கு தனித் தமிழ் ஈழமே தீர்வு என்றாலும், அவர்களின் அன்றாட வாழ்வி்ல் சந்தித்துவரும் ஆபத்துகளையும், அச்சுறுத்தல்களையும் களைய வேண்டுமாயின், அவர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும், கற்புக்கும் பாதுகாப்புக் கிடைக்க வேண்டுமென்றால், இலங்கையில் போர் நடந்த பகுதிகளுக்கு மனித உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள் கொண்ட பன்னாட்டுக் குழுவை ஐக்கிய நாடுகள் மன்றம் அனுப்பி வைக்க வேண்டும்.

இலங்கையில் போருக்குப் பின்னான இந்த மூன்று ஆண்டுக்காலத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற அக்கறையுள்ள இந்தியாவின் கட்சிகள், அங்கு ஐ.நா.வின் பார்வையாளர்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் குன்றத்தூர் பகுதி கலந்தாய்வுக்கூட்டம்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்