ஈழச் சகோதரிகள் தான் ஆண்டாள் பாசுரத்தின் இலக்கணம் – புகழேந்தி தங்கராஜ்!

47

இந்தியாவும் ராஜபக்சேவும் வேறு வேறு அல்ல. இரண்டுபேருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். (இந்தியா என்று நான் குறிப்பிடுவதுஇ இந்தியாவை ஆளும் மத்திய அரசை!) இந்தியாவையும் ராஜபக்சேவையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் இரண்டு ஒற்றுமைகளைப் பார்த்து வியந்து போவார்கள்.

1. இருவருமே வஞ்சகர்களில்லை நயவஞ்சகர்கள். நம்பவைத்துக் கழுத்தறுப்பதில் விற்பன்னர்கள்.

2. இரண்டுமே புளுகுப் பூனைகள். சொல் வேறு செயல் வேறு. நான்தான் உனக்குப் பாதுகாப்பு – என்று அவர்கள் சொன்னால் மறுநாள் நாம் பிரியாணி ஆகப்போகிறோம் என்று பொருள்.

ராஜபக்சேவின் பொய்முகத்தை முழுமையாக அறிந்தவர் சிங்களப் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க. அதனால்தான் லசந்தவை விட்டுவைக்கவில்லை ராஜபக்சே வகையறா. நடுத்தெருவில் சுட்டுக் கொன்றது. கொழும்பில் இருக்கத் துணிவில்லாமல் இலங்கையை விட்டே ஓடிக் கொண்டிருக்கிறார்கள் மனசாட்சியுள்ள பத்திரிகையாளர்கள். இந்தப் பட்டியலில் கடைசிப் பெயர் – பிரெடெரிகா ஜேன்ஸ்.

உண்மையைச் சொன்னால் என்ன நடக்கும் என்பதை அறிந்து பத்திரிகையாளர்கள் ஓடிக்கொண்டிருக்க ‘அச்சமில்லாமல் வாழும் சூழ்நிலையை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்’ என்று வவுனியாவில் போய் கயிறு திரிக்கிறான் மகிந்த ராஜபக்சே. அவன் இப்படிப் பேசிய இதே வாரத்தில் இலங்கையில் தன்னைச் சந்தித்து முறையிட்டவர்கள் அச்சுறுத்தப்படுவதாக பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறார் நவநீதம் பிள்ளை. அவன் இப்படிப் பேசிய அதே நேரத்தில் வட மாகாணத் தேர்தலில் போட்டியிடும் சகோதரி ஆனந்தி சசீதரனின் கார் தாக்குதலுக்கு உள்ளாகிறது.

ஆனந்தி விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்களில் ஒருவரான எழிலனின் மனைவி. எழிலனை ராணுவம் உயிருடன் அழைத்துச் சென்றதற்கு நேரடி சாட்சி. ‘எங்கே என் கணவர்’ என்று கண்ணீருடன் கேட்கிறார். கணவருக்காக மட்டுமின்றி காணாமல் போன மற்றவர்களுக்காகவும் இனப்படுகொலை நடந்தபோது விதவைகளான அப்பாவிப் பெண்களுக்காகவும் நீதி கேட்கிறார். ‘இதையெல்லாம் வெளிப்படையாகப் பேசினால் உங்களை விட்டுவைப்பார்களா’ என்கிற சர்வதேச வானொலி ஒன்றின் கேள்விக்கு – ‘அதற்கு அஞ்சி உண்மையைப் பேசாதிருக்க முடியாது’ என்று துணிவுடன் பதிலளித்தவர் அவர். வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரே பெண் வேட்பாளர் அவர்தான்.

2009ல் நடத்திய இனப்படுகொலை குறித்த சர்வதேச சுதந்திர விசாரணையைத் தவிர்க்க முடியாது என்பது இலங்கைக்கு நிச்சயமாகத் தெரியும். அப்படி ஒரு விசாரணை நடக்கும்போதுஇ மிக முக்கியமான சாட்சியாக ஆனந்தி இருப்பார். லசந்தவையே விட்டுவைக்காத கோதபாய ராஜபக்சேவின் கூலிப்படை ஆனந்தி மீதும் கண்டிப்பாகப் பாயும் என்கிற அச்சம் நீண்ட காலமாகவே இருந்துவந்தது. அவரது கார் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் அந்த அச்சத்தை உறுதி செய்வதாக உள்ளது.

ஏற்கெனவேஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ராணுவம் குறிவைக்கக் கூடும் என்கிற அச்சத்தில் அவர்களது பிரச்சாரத்துக்கு வாகனங்களைத் தர வாடகைக் கார் உரிமையாளர்கள் தயங்குகின்றனர். ஆனந்தியின் வாகனம் தாக்கப்பட்டது அவர்களது அச்சத்தை அதிகரித்திருக்கக் கூடும். இந்த லட்சணத்தில்தான் ஆனந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரத்தில் ‘அச்சமில்லாமல் வாழும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம்’ என்று கூச்சமில்லாமல் புளுகுகிறது பௌத்த மிருகம்.

சென்ற வாரம்தான் வந்துசென்றார் நவநீதம் பிள்ளை. கொழும்பிலிருந்து புறப்படும் முன் ‘பாலியல் பலாத்காரமும் ஆள் கடத்தலும் ஊடகங்கள் மீதான தாக்குதலும் தொடர்கிறது’ என்று வெளிப்படையாகச் சொன்னார். அமைதி திரும்பிவிட்டதுஇ அச்சமில்லாமல் வாழ முடிகிறது – என்றா சொன்னார்? வவுனியாவில் போய் உச்சஸ்தாயியில் ‘அச்சமில்லை’ பாடும் கள்ளப்புத்தன் அப்பாவி மக்களின் காதில் பிள்ளையின் குரல் கேட்டிருக்காது தன்னுடைய பாடல்தான் கேட்கும் என்று கனவு காண்கிறானா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை பிரபாகரனின் கொள்கைகளை அச்சுஅசலாகப் பிரதிபலிப்பதாக இருக்கிறது – என்பது ராஜபக்சேவின் குற்றச்சாட்டு. இப்படியெல்லாம் அந்த மிருகம் பேசுவதைப் பார்த்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மகத்தான வெற்றியைத் தேடிக் கொடுப்பது என்று அது தீர்மானித்துவிட்டதாகவே தோன்றுகிறது.

மகிந்த மிருகம் இப்படியென்றால் அந்த மிருகத்தையே ஆட்டிப் படைக்கிற சிங்கள ரிங் மாஸ்டர்களின் அலப்பரையைக் கேட்க வேண்டுமா! வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க அதை அனுமதிக்கப் போவதில்லையாம். பகிரங்கமாக எச்சரிக்கிறதுஇ ஜாதிய ஹெல உறுமய – என்கிற சிங்கள இனவெறி அமைப்பு. ‘தனிநாடு சுய நிர்ணய உரிமை சுயாட்சி – என்கிற தொனியில் பேசினால் கடும் நடவடிக்கை எடுப்போம்’ என்று எச்சரிக்கிறார் அதன் தலைவர் சோபித தேரர். (கறுப்பு ஜூலைக்கு ‘ரிப்பீட்டு’ கேட்கப் போகிறாரா தேரர்?) மகிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெற்றி தேடித் தருவான் என்றால் இவர்கள் தமிழீழக் கோரிக்கைக்கே வெற்றி தேடித் தந்துவிடுவார்கள் போலிருக்கிறது!

சிங்கள மக்களின் பொறுமையைச் சோதிக்கக் கூடாதாம்! தேரர் இப்படி எச்சரிக்கிறார். என்ன நடந்துவிட்டது சிங்கள மக்களுக்கு? தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற கட்டுக்கோப்பும் கட்டுப்பாடும் மிக்க விடுதலைப் போராளிகளின் அமைப்பு என்றைக்காவது சிங்கள அப்பாவி மக்களைக் குறிவைத்துத் தாக்கியதுண்டா? முழு ஆயுத பலத்துடன் இருந்த நாட்களில் அந்த ஆயுதங்களை அப்பாவிச் சிங்கள மக்கள் மீது பிரயோகித்ததுண்டா? ஒரே ஒரு சிங்களச் சகோதரியையாவது தவறான எண்ணத்துடன் சீண்டியதுண்டா? எந்த வகையிலாவது இலங்கை ராணுவத்திலிருக்கும் சிங்கள மிருகங்களைப்போல் காட்டுமிராண்டித்தனமாக காம வெறியர்களாக விடுதலைப் புலிகள் நடந்துகொண்டதுண்டா? சிங்கள மக்களின் பொறுமைக்கு என்ன கேடு வந்திருக்கிறது விடுதலைப் புலிகளாலும் எங்கள் உறவுகளாலும்!

பொறுமை இழந்திருப்பது எங்கள் இனம். எங்கள் பொறுமைதான் பொறுப்பேயில்லாத இலங்கையின் பொறுக்கி ராணுவத்தால் சோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இனப்படுகொலை முடிந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகும் எங்கள் சகோதரிகள் மீதான சிங்கள மிருகங்களின் தாக்குதல் தொடர்கிறது. அவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை. எங்கள் உறவுகளின் நிலங்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படும் நிலை. ‘எங்கள் பொறுமையைச் சோதிக்காதே’ என்று தாய்த் தமிழ் உறவுகள்தான் சொல்லவேண்டுமே தவிர தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாத தறுதலைகள் சொல்லக்கூடாது.

ராஜபக்சேவும் தேரரும் உளறுவதைப் பார்த்தால் நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயத்தால் ஏற்பட்ட காய்ச்சல் இன்னும் தணியவில்லை போலிருக்கிறது. ஜுரவேகத்தில் உளறிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும். ஜெனிவாவில் நவநீதம் பிள்ளை அறிக்கை தாக்கல் செய்வதுவரை இவர்களது டெம்பரேச்சர் எக்குத்தப்பாக எகிறுமென்றே தோன்றுகிறது. உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தானே ஆகவேண்டும்!

நவநீதம் பிள்ளையின் இலங்கை வருகை பிள்ளையைக் கதாநாயகியாகக் காட்டியதோ இல்லையோ எங்கள் தமிழீழச் சகோதரிகள் ஒவ்வொருவரையும் ஜான்சி ராணியாக கேப்டன் லட்சுமியாக ஆங்சான் சூகியாகக் காட்டியது. நீதிகேட்டு அவர்கள் வீதிகளில் திரண்டதுதான் ராஜபக்சே உள்ளிட்ட பௌத்த சிங்கள மிருகங்களின் அச்சத்துக்கு முதல் காரணம். இரண்டாவது காரணம்தான்இ நவநீதம் பிள்ளை.

‘காணாமல் போனவர்கள் பற்றிப் புகார் சொன்னால் நீங்களும் காணாமல் போவீர்கள்’ என்று மிரட்டப்பட்டவுடன் வீடுகளுக்குள் போய் ஒளிந்துகொள்ளவில்லை அவர்கள். நம்பிக்கையோடும் துணிவோடும் பிள்ளையைச் சந்தித்து மன்றாடினார்கள். நவ்விப் பிள்ளையைக் கண்கலங்க வைத்தார்கள். அதன்மூலம் சர்வதேசத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பினார்கள். அந்தச் சகோதரிகள் தான் இந்த இனம் தன் இதயத்துக்குள் சுமந்திருக்கும் தணலின் அனலை உணர்த்தினார்கள் உலகுக்கு!

கிருஷாந்தி குமாரசாமி என்கிற எங்கள் இனத்தின் இளைய நிலவை சிங்கள மிருகங்கள் சிதைத்தது 1996ல். அவளை விசாரித்த செம்மணி ராணுவக் காவலரணில் அவளைப் பற்றிக் கேட்கச்சென்ற அவளது தாய் தம்பி பக்கத்து வீட்டுக்காரர் ஆகிய மூவரும் அவளைப் போலவே காணாது போனவுடன் நமக்கெதற்கு வம்பு – என்று மற்றவர்கள் பதுங்கிக் கொள்ளவில்லை. கிருஷாந்தியைப் போலவே காணாது போன கைது செய்யப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் சேர்ந்து உருவாக்கிய ‘கைது செய்யப்பட்டோர் மற்றும் காணாது போனோர் பாதுகாவலர் சங்கம்’ என்கிற அமைப்புதான் அப்போதிருந்த சந்திரிகா அரசின் செவுளில் அறைந்தது. அவர்களது போராட்டங்களின் விளைவாகத்தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த விசாரணையில்தான் கிருஷாந்தி என்கிற அந்த வண்ணத்துப்பூச்சி எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

அதைப்போன்ற ஒரு எழுச்சியைத் தான் ஆவேசத்தைத்தான் நவநீதம் பிள்ளையிடம் காணாமல் போன தங்கள் பிள்ளைகளுக்காக நியாயம் கேட்ட எங்கள் ஈழச் சகோதரிகள் ஒவ்வொருவரிடமும் காண முடிந்தது. உளவுத்துறையின் கண்காணிப்புகளையும் மிரட்டல்களையும் தகர்த்தெறிந்ததைப் பார்த்து சர்வதேசமும் அதிர்ந்துபோனது. தங்களுக்கு எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பது தெரிந்தே தங்கள் உறவுகளுக்காக நீதி கேட்ட அந்த மக்கள்தான் நம் இனத்தின் நியாயத்துக்கான குரல். ஒன்றரை லட்சம் பேரைக் கொன்ற பிறகும் பிரபாகரன் இல்லை – என்று புளுகி தமிழினத்தின் மனவுறுதியைத் தகர்த்த பிறகும்இ இவர்களால் நீதி கேட்க முடிகிறதே – என்கிற அச்சம்தான் மகிந்தனையும் மற்றவர்களையும் உளற வைக்கிறது.

நவநீதம் பிள்ளை வந்து சென்ற பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கிட்டத்தட்ட தமிழீழக் கோரிக்கையை நினைவுபடுத்தும் விதத்தில் பேசுவதாக பௌத்த சிங்களத் தலைவர்கள் பகிரங்கமாகக் குற்றஞ் சாட்டி வருகிறார்கள். அதற்காக நவநீதம் பிள்ளை மீது பாய்கிறார்கள். அவர்களது குற்றச்சாட்டு ஓரளவு உண்மையானதாயிருக்கலாம். ஆனால் அதற்குக் காரணம் பிள்ளைதான் என்று ஒட்டுமொத்தமாக அவர்மீது பாய்வது அர்த்தமற்றது.

தமிழ்த் தலைவர்களை உண்மையாகவும் உறுதியாகவும் பேச வைத்ததில்இ நீதி கேட்ட எங்கள் தமிழ்ச் சகோதரிகளின் ஆவேசத்துக்குத்தான் முதலிடம். இதிலும் பிள்ளைக்கு இரண்டாம் இடம்தான். என்றாலும் பிள்ளையின் மீதிருந்த நம்பிக்கைதான் எங்கள் சகோதரிகளுக்கு மன உறுதியை அளித்தது என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

இனப்படுகொலைக்குப் பின் நிலைகுலைந்து நிற்கும் எங்கள் இனத்தின் பாதையை எங்கள் தாய்மார்கள் எங்கள் சகோதரிகள் எங்கள் பெண் பிள்ளைகள் நிர்ணயித்திருக்கிறார்கள் – என்பதைப் பார்க்கும் போது ஆயிரம் மகிந்தன் வந்தாலும் இந்த இனத்தை அழிக்க முடியாது என்கிற நம்பிக்கை வலுவடைகிறது. கணவனின் கொலைக்கு நியாயம் கேட்ட கண்ணகி போல் வேலுநாச்சி போல் துணிவுடன் திரண்டு அவர்கள் நியாயம் கேட்டது ஈழப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் நான்.

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு……..

என்கிற பெண் கவிச் சிங்கம் ஆண்டாளின் பாசுரத்தைக் கேட்கும் போதே மேனி சிலிர்க்கும் நமக்கு! அப்படி ஒரு மொழி ஆளுமை ஆண்டாளுக்கு! அவளது அந்தப் பாடலுக்கு வார்த்தைக்கு வார்த்தை இலக்கணமாக ஆகியிருப்பவர்கள் எங்கள் ஈழத்துச் சகோதரிகள். உண்மையான சிங்கங்கள் அவர்கள் தானே தவிர சிங்கள அசிங்கங்கள் அல்ல!

மாலதி முதல் அங்கயற்கண்ணி வரை விதுசாவிலிருந்து துர்க்கா வரை அத்தனை ஈழப் போராளிகளும் வீரத்திற்கும் விவேகத்துக்கும் இலக்கணம் வகுத்தவர்கள். அவர்களைப் போற்றும் அதே அளவுக்கு இன்றைக்கு ஈழத்தில் நீதி கேட்டு வீதிக்கு வந்துநின்ற எங்கள் சகோதரிகள் ஒவ்வொருவரையும் நாம் போற்றியாக வேண்டும். அவர்கள்தான் நம் இனத்துக்கு வழிகாட்டுகிறார்கள் என்பதைப் பெருமையுடன் பறைசாற்ற வேண்டும்.

மாகாண சபையைக் கைப்பற்றுங்கள் மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் – என்று ஈழத்திலிருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மன்மோகன் சிங் என்கிற பரமார்த்த குரு சார்பில் சொல்லப்பட்டதாக ஒரு தகவல். என் இனிய ஈழ உறவுகளே! நமக்கு வழிகாட்ட நம் மாதரசிகள் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு மக்குப் பிண்டங்களை வைத்து கொழுக்கட்டை பிடிக்காதீர்கள்!

முந்தைய செய்திடொரொண்டோ, யுனிவெர்சிடி அவெயு இல் நடைபெற்ற நீதி வேண்டிய கவனஈர்ப்புப் போராட்டம்
அடுத்த செய்திஎட்டுத் திக்கும் எமக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும் – இன அழிப்புக்கான நீதி கேட்கும் ஈருறுளிப் பயணம்