இலங்கை மீது போர்க்குற்றம் தொடர்பில் அனைத்துலக விசாரணை! ஐ.நாவில் மீண்டும் பிரேரணை வருகிறது.

44

நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதற்காக முயற்சி எதிர்பார்த்த பலனை இன்னும் அளிக்காத நிலையில், ஐ.நா. மனித உரிமைச் சபையில் போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணையை வலியுறுத்தும் பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இது தொடர்பான அவசரக் கூட்டம் ஒன்று அடுத்த வாரம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தலைவர் நவநீதம்பிள்ளை மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ராஜ தந்திரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரில் மனித உரிமை மீறல்களும் போர்க்குற்றங்களும் புரியப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில் அந்த அறிக்கையின் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்த விடயத்தை மீண்டும் முன்னெடுக்கும்படி கடும் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2009ம் ஆண்டு வன்னியில் யுத்தம் முடிபடைந்த காலத்தில் இதேபோன்ற ஒரு பிரேரணை ஐ.நா. மனித உரிமைச் சபையில் கொண்டுவரப்பட்ட போதும் அதனை நிறைவேற்றுதற்குரிய போதுமான ஆதரவை பெறமுடியாத நிலையில் பிரேரணை தோல்வி கண்டது. முக்கியமாக இந்தியா பின்னணியிலிருந்து மேற்கொண்ட முயற்சியினாலேயே இது தோற்கடிக்கப்பட்டதாக செய்திகள் வெளி யாகியிருந்தன.கியூபா, வியட்நாம் போன்ற நாடுகள் கூட இந்தியாவின் மறைமுக அழுத்தங்கள் காரணமாக இப் பிரேரணையை எதிர்த்து வாக்களித்திருந்தன. இதன் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்த போதும் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.

அண்மையில் வெளியிடப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையிலும் மனித உரிமை சபையில் 2009ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட இத் தீர்மானம் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் நிபுணர் குழு பரிந்துரைத்திருந்தது.இந் நிலையிலேயே ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான பிரேரணை ஒன்றைத் திரும்பவும் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த முறைபோல் இன்றி இம்முறை பிரேரணைக்கு பரந்துபட்ட ஆதரவினை திரட்டுவது தொடர்பாக அடுத்த வாரம் நியூயோர்க்கில் இடம்பெறும் கூட்டத்தில் ஆராயப்படும் என நம்பப்படுகிறது.குறிப்பாக இந்தியாவின் ஆதரவினை திரட்டுவது தொடர்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக அரசு உத்தியோகபூர்வ பதில் எதனையும் இதுவரை அனுப்பவில்லை. மாறாக அவ் அறிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் கையெழுத்து வேட்டையும் நடத்தப்பட்டு வருகின்றன.கடந்த மே தின நிகழ்ச்சிகளில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐ.நா. அறிக்கைக்கு எதிராக வெளிப்படையாகவே கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

ஐ.நா. அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசு சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்கத் தவறினால் அனைத்துலக விசாரணைகள் தவிர்க்கமுடியாதவையாக இருக்கும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இதனை நோக்கிய இராஜதந்திர முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.இது தொடர்பிலான அவசர கூட்டம் ஒன்று நியூயோர்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதனை ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கான இலங்கைப் பிரதிநிதியும் உறுதிப்படுத்தியுள்ளார்.

முந்தைய செய்திஐ.நா அறிக்கைக்கு எதிராக மக்களிடம் பலவந்தமாக கையெழுத்து வாங்கிவரும் இலங்கை அரசு.
அடுத்த செய்திஇலங்கைக்கு ரஷ்யா, சீனா எச்சரிக்கை.