இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம்

27

இன்னும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம். இலங்கை முழுவதையும் பெளத்த கொள்கையின் கீழ் ஒரே சமூகமாக மாற்றும் திட்டத்தில் அங்கமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.” என்று நேற்று சூளுரைத்தது பொதுபல சேனா.

இதற்காக பெளத்த அமைப்புகள் ஒன்றிணைந்து உடனடியாக நடைமுறைப்படுத்தவுள்ள வேலைத்திட்டத்தையும் பொது பலசேனா நேற்று உத்தியோ கபூர்வமாக வெளியிட்டது.

திட்ட வெளியீடு

ஒரு இலட்சம் தர்மபாலகர்கள்
2 ஆயிரம் பிக்குகள் அணி
2 ஆயிரம் பொதுக் கூட்டங்கள்
10 இலட்சம் கையேடுகள்
10 ஆயிரம் விகாரைகளில் நடவடிக்கை
5 மாபெரும் யாத்திரைகள்

“பெளத்த தர்மத்தைப் பாதுகாக்க நாட்டிலுள்ள சிங்கள பெளத்தர்கள் அனைவரும் சர்வமதக் கொள்கையை எதிர்த்த அநாகாரிக தர்மபால போல் செயற்பட வேண்டும்.

இதற்கு அனைத்து பெளத்தர்களும் அரசியல் கட்சிப் பேதங்களைக் கடந்து எமக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் வண. கலபொடஅத்தே ஞானா சார தேரர் அழைப்பு விடுத்தார்.

தென்னிலங்கையில் பள்ளி வாசல்கள் மீது தாக்குதல் நடத்தி தன்னுடைய பெளத்த வெறியை வெளிப்படுத்தி வந்த அமைப்பான பொது பலசேனா தமிழர் தாயகப் பகுதிகளிலும் பாயத் தயாராகி விட்டதையே நேற்றைய அறிவிப்பு வெளிப்படுத்தி உள்ளது.

பெளத்த, சிங்கள மறுமலர்ச்சியாளரும், எழுத்தாளருமான அநாகரிக தர்மபாலவின் 149 ஆவது ஜனன தினத்தயொட்டி கொழும்பு, கிருலப் பனையிலுள்ள போதி பெளத்த நிலையத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
“இலங்கைக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வெள்ளையர்களுடன் அன்று போராடிய எமது தலைவர் அநாகரிக தர்மபாலவின் 149ஆவது ஜனன தினமான இன்று (நேற்று) பெளத்தத்தைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிக்கவுள்ளோம்.

சர்வமதக் கொள்கையையும், சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கும் இலங்கை சொந்தம் என்ற வாதங்களையும் எதிர்த்த அநாகரிக தர்மபால, விகாரைக்கு அருகில் கோவில், பள்ளிகள் உருவாகும் நிலை ஏற்படும் என்றார்.

அவர் அன்று கூறியது இன்று அப்படியே நடந்துள்ளது. எனவே, எமது இனம் முகங்கொடுத்துள்ள இந்த அபாயத்திலிருந்து அதை மீட்க பல தர்மபாலர்கள் எமக்குத் தேவை.

நாட்டிலுள்ள சிங்கள, பெளத்தர்கள் அனைவரும் அநாகரிக தர்மபால ஆகவேண்டும். அவருடைய கொள்கைகளினூடாக மட்டுமே பெளத்தத்தைக் காக்க முடியும். அத்துடன், பாணந்துறை வாதத்தையும் மீள உருவாக்க வேண்டும்.

பெளத்த கொள்கை நாடு
பெளத்த சாசனத்தைப் பாதுகாக்க அநாகரிக தர்மபாலவின் கொள்கைகளை வடக்கில் தற்போது சிங்களவர்கள் இல்லாததால், கிழக்கு உள்ளிட்ட நாடு முழுவதும் சமூகமயப்படுத்த வேண்டும்.

இதனூடாக சிங்கள பெளத்தர்களை தேசிய மட்டத்தில் ஒன்றிணைந்து பெளத்த கொள்கையின் கீழான சமூகத்தை உருவாக்குவோம். அத்துடன், ஒரு இலட்சம் தர்மபாலர்களையும் உருவாக்குவோம்.

இரண்டு வருடங்களில் நடைமுறைப் படுத்தவிருக்கும் இந்தத் திட்டத்தில் நாடு முழுவதும் இரண்டாயிரம் பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளோம். தர்மபாலவின் கொள்கைகளை சமூகமயப்படுத்தி இரண்டாயிரம் பிக்குகளை உருவாக்கி, நாடு முழுவதுமுள்ள 10 ஆயிரம் விகாரைகளில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

மேலும் அநாகரிக தர்மபாலவின் கொள்கைகள் அடங்கிய 10 இலட்சம் கையேடுகளை விநியோகிக்க உள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 5 யாத்திரைகளையும் ஒழுங்குசெய்யவுள்ளோம்” என்றார்.

இதன் போது, ஏனைய சிங்கள, பெளத்த அமைப்புகளையும் இந்த வேலைத்திட்டத்தில் பொதுபலசேனா இணைத்துக்கொள்ளுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
“”ஆம். இதுவரையில் பல சிங்கள, பெளத்த அமைப்புகளுடன் நாம் பேச்சு நடத்தியுள்ளோம்.

எமது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அவை இணக்கம் தெரிவித்துள்ளன. இன்னும் பல அமைப்புகளுடனும் நாம் தற்போது பேசி வருகிறோம்.

நாட்டிலுள்ள அனைத்து சிங்கள பெளத்தர்களும் அரசியல் பேதங்களைக் கடந்து எமக்கு ஆதரவளிக்கவேண்டும்” என்றார்.

வடக்கிலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், “யுத்த காலத்தில் புலிகளால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள் அங்கு மீளக் குடியமர்த்தப்பட வேண்டும்.

சிங்களவர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டவுடன், அங்கும் எமது நடவடிக்கையை மேற்கொள்வோம்” என்றார்.

முந்தைய செய்திஈழம் : இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர் – சூரியதீபன்
அடுத்த செய்திஇந்தியாவும் கனடாவும் மட்டுமே அமர்வுகளில் பங்கேற்பது குறித்து உறுதிப்படுத்தவில்லை