இன அழிப்பிற்கு ஆதரவு தேட இலண்டன் வரும் இலங்கைக்கு எதிராக மாபெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

33

சிறிலங்கா அரசைச் சேர்ந்த எவர் வரினும் முழுப் பலத்துடன் அதனை எதிர்ப்போம் – இன அழிப்பின் சூத்திரதாரி ஜி எல் பீரிஸின் லண்டன் வருகையை எதிர்க்கத் தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் பிரித்தானியாவுக்கு வருகின்றார்.

வரும் 21ம் நாள் திங்கள் பிரித்தானியாவில் நடைபெற உள்ள சந்திப்பொன்றில் இவர் கலந்து கொள்ள உள்ளார். பொதுநலவாய மாநாடு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் மிக வேகமாக உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையிலேயே ஜி எல் பீரிஸின் பிரித்தானியப் பயணமும் அமைவது குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்றம், மனித உரிமை மீறல் ஆகிய குற்றங்களைப் புரிந்து கொண்டிருக்கும் சிறிலங்காவில் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் கொடுக்கப்படும் நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் பிரித்தானியப் பயணம் இடம்பெற உள்ளது. இப்பயணத்தின் மூலம் பிரித்தானியாவின் முழு ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரித்தானியாவிலுள்ள அரசியல், பொருளாதாரம், கல்வி முதலிய பல் துறை சார்ந்தோரையும் சந்தித்துக் கலந்துரையாடுவதன் மூலமும்; இம்மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்வோருக்குச் சிறிலங்கா அரசாங்கம் வழங்கும் வசதிகள் பற்றித் தெரிவிப்பதன் மூலமும் பொதுநலவாய மாநாட்டிற்கு பிரித்தானியாவிலிருந்து செல்லக்கூடியவர்களின் தொகையை அதிகரிக்க முயற்சிக்கவுள்ளார் எனக் கூறப்படுகின்றது. ஜி எல் பீரிஸின் பிரித்தானியக் கல்வி சார்ந்தோருடனான சந்திப்பின் மூலம் பிரித்தானிய இளையோரின் தாயகம் நோக்கிய சனநாயக ரீதியிலான செயற்;பாடுகளுக்கு இடையூறு விளைவிக்க முற்படலாம் எனவும் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வந்த பொழுது திரண்டெழுந்து தம் எதிர்ப்பை வெளிப்படுத்திய பிரித்தானியா வாழ் தமிழர்கள் உலக வரலாற்றிலேயே புதுச்சரித்திரம் படைத்தனர். தமிழினப் படுகொலையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசைச் சேர்ந்த எவர் வரினும் முழுப் பலத்துடன் அதனை எதிர்ப்பதைத் தமது கடமையாகக் கொண்டுள்ளனர். இம்முறை பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா பங்கேற்கக் கூடாது என்று பல்வேறு வழிகளிலும் அழுத்தங்களைக் கொடுத்து வருவதுடன் வரும் திங்கள் இடம்பெற உள்ள ஜி எல் பீரிஸின் சந்திப்பு நடைபெறும் நேரத்திலும் தம் ஒட்டு மொத்த எதிர்ப்பைக் காட்டுவதற்குத் திரண்டெழுவதற்குத் தயாராகுகின்றார்கள்.

வரும் 21ம் நாள் திங்கள் மாலை 4 மணியிலிருந்து 7 மணி வரை WC1E 7HU, Malet Street என்னும் முகவரியில் அமைந்துள்ள Senate House முன்பாக நடைபெற உள்ள கவனயீர்ப்பு ஒன்று கூடலில் பெருந்திரளாக ஒன்று கூடி தமிழ் மக்களின் ஒருமித்த குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் எவ்வாறான ஆக்கிரமிப்பு நகர்வுகளையும் முறியடித்து செயற்படுவோம் என்பதைப் பறைசாற்றும் நாளாக இந்நாள் அமைய பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களும் அணி திரள வேண்டும் என பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரும் தமிழ் இளையோர் அமைப்பினரும் அழைக்கின்றார்கள்.

முந்தைய செய்திஇலங்கை குறித்த பா.உறுப்பினர்களின் அறிக்கையை பிரித்தானிய அரசு நிராகரிப்பு!
அடுத்த செய்திமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா நிகழ்ச்சி நிரல்