இனத்தின் விடுதலை எனும் புனிதக்கனவைத் தூக்கிச் சுமக்க நம் மாவீரர் தெய்வங்கள் மீது ஆணையிட்டு உறுதியேற்போம் : சீமான் மாவீரர் நாள் அறிக்கை

86

இனத்தின் விடுதலை எனும் புனிதக்கனவைத் தூக்கிச் சுமக்க நம் மாவீரர் தெய்வங்கள் மீது ஆணையிட்டு உறுதியேற்போம் : சீமான் மாவீரர் நாள் அறிக்கை
உலகம் முழுவதும் பரவிவாழும் எம் தாய்த்தமிழ் உறவுகளே!
வணக்கம்.
இன்று மாவீரர் நாள். தாயக விடுதலைக்காக உயிரை விலையாகக் கொடுத்து மண்ணில் விதையாக விழுந்த மகத்தானவர்களை மனதில் நிறுத்தி வணங்க வேண்டிய தியாகத் திருநாள். தமிழ்த்தேசிய இனத்தின் அடிமை இருள் அகற்ற தன்னைத்தானே அழித்துக்கொண்டவர்களை நம் ஆன்மாவில் பொருத்தி இந்தக் கார்த்திகை மாதத்தில் காந்தள் மலர்கொண்டு பூஜிக்க வேண்டிய பொன்னாள். இந்நாள் உயிரை இழந்தவர்களைப் பற்றி உள்ளம் உருக கசிந்து அழ வேண்டிய நாள் அல்ல! மாறாக, நம் இனத்தின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் கனவினை நாம் வாழும் காலத்திலேயே நிறைவேற்றிட அதற்காக நிதமும் உழைத்திட நமக்குள்ளாக உருவேற்றி உறுதிகொள்ள வேண்டிய உன்னத நாள்.
வரலாற்றுப்பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனம் தமிழகம், தமிழீழம் என்கின்ற இரண்டுபெரும் தாய்நிலங்கள் இருந்தும், இவ்வுலம் செழிக்க அளப்பரிய உயிர்க்கொடை, ஈடு, இணையற்ற மானுட உழைப்பு, மாபெரும் கலைபண்பாட்டு பங்களிப்புகள் என அனைத்தையும் வாரிக்கொடுத்த ஒரு மாபெரும் தேசிய இனத்திற்கு உள்ளங்கை அளவுகூட இறையாண்மை கொண்ட நாடில்லை என்பதுதான் இந்த நூற்றாண்டிலும் தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் மீது கவிழ்ந்து இருக்கும் வரலாற்றுப் பெருஞ்சோகம். ஒரு தேசிய இனம் என்றைக்குத் தனக்கென ஒரு தேசம் அடைகின்றதோ அன்றைக்குத்தான் முழுமுதற் விடுதலையை எட்டும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அந்தத் தேச விடுதலையை அடைவதற்காகத் தன் தேகத்திற்கு விடுதலை கொடுத்தவர்கள்தான் நம் மாவீரர்கள்.
ஒருநாடு என்பது நிலம் மட்டும்தானா? இல்லை. அதனால்தான், நம் தேசிய தலைவர் அவர்கள் ஒரு அறிவார்ந்த தலைமுறையின் செறிவான உழைப்பின் மூலமாக இறையாண்மை கொண்ட நாட்டினை உருவாக்கிட முடியுமென நம்பினார். இலட்சிய வேட்கையோடு விடுதலைத்தாகம் கொண்ட ஒரு அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கினால் போதுமானது. அதுவே தனது விடுதலைப்பாதையைக் கண்டறிந்து வெற்றியடையும் என நம் தேசிய தலைவர் நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான், உலகம் போற்றும் உன்னத மனிதர்களை, வீரம்செறிந்த தளபதிகளை, அறிவார்ந்த அறிஞர்களை அவரால் உருவாக்க முடிந்தது. இன்றளவும் என் ஆழ்மனதில் நான் இழப்பெனக் கருதி வருந்தித் துடிப்பது இதைத்தான். நிலத்தை இழந்தால் பெறலாம்; உடமையை இழந்தால் பெறலாம்; உரிமையை இழந்தால் அடையலாம், ஆனால், நம் தேசிய தலைவர் அவர்கள் அணு அணுவாய் பார்த்து கற்பித்து வழிகாட்டி உருவாக்கிய ஒரு அறிவார்ந்த தலைமுறையை ஈடு, இணையற்ற அறிவாற்றல் கொண்ட இளைஞர் பட்டாளத்தைத் தமிழர் என்ற தேசிய இனம் வரலாற்றின் வீதிகளில் என்று கண்டறியும்?
தியாகத்திற்கு ஒரு திலீபன், அறிவாற்றலுக்கும் ஒரு தமிழ்ச்செல்வன், பார் போற்றும் வீரத்திற்கு ஒரு பால்ராஜ், கடும்பகை அழித்துக் கொடுந்துயர் தீர்க்க ஒரு கடாபி, மானுட ஆற்றலுக்கும் மேலான நுட்பமும், வீரமும் கொண்ட பொட்டு அம்மான், கடலிலே காவியங்கள் படைத்த சூசை, வீரத்திற்கு ஒரு இலக்கணமாய்த் திகழ்ந்த விதுஷா என அடுக்கடுக்காய்ச் சொல்லிக்கொண்டே போனால், முடிவற்ற பட்டியலாய் தொடரும் என் அண்ணன்மார்களின் பெயர்கள். தமிழனின வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கபப்ட்டு, நாம் தொழுது வணங்க வேண்டிய தியாகச்சுடர்கள்.
இன்றளவும் சிங்களப்பேரினவாதிகள் நம் தாய்நிலத்தை அடிமைப்படுத்தி ஆக்கிரமித்துச் சிங்களக்கொடியேற்றங்களை வலுக்கட்டாயமாக நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். திட்டமிட்ட இன அழிப்பு நடந்துக்கொண்டு தான் இருக்கிறது என்பதை யாழ்பாண மாணவர்கள் கொலை நிரூபிக்கிறது. ஒரு தேசிய இனத்தின் உயிர்நாடியான பண்பாட்டு விழுமியங்களை அழிப்பதன் மூலம் அந்தத் தேசிய இனத்தை எவ்வித அடையாளமுமின்றி அழித்துவிட முடியும் என்பதை நன்கு உணர்ந்த சிங்களப்பேரினவாத அரசு தமிழர் நிலத்தில் பெளத்த விகார்களை அமைக்கும் பல்வேறு விதமான பண்பாட்டுச் சீரழிவு தாக்குதல்களை நிகழ்த்தி தமிழ்த்தேசிய இனத்தின் ஆன்ம பற்றுறுதியை சிதைக்க முயன்று வருகிறார்கள். ஆனால், மாவீரர்களைத் தன்னுள் விதையாய் அடக்கிக்கொண்டு உயிர்ப்புடன் திகழும் ஈழ மண் சிங்களப் பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக மீண்டும் விழிப்படைந்து இருப்பது அண்மை நாட்களில் நமக்குக் கிடைத்த மாபெரும் மாறுதல். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பொங்குதமிழர் ஒன்றுகூடலில் பல்லாயிரக்கணக்கான நம் ஈழ உறவுகள் பங்கேற்றுத் தாய்மண் விடுதலையில் தங்கள் பற்றுறுதியை பன்னாட்டு சமூகத்தின் முன் பறைசாற்றியிருக்கிறார்கள்.
இன்னும் என்னடா விளையாட்டு?
எதிரி நரம்பிலே கொடியேற்று!
நிலத்தடியில் புதைந்திருக்கும்
பிணங்களுக்கும் உயிர்த்துடிக்கும்!
என்கிற அண்ணன் அறிவுமதி பாடல்வரிகளுக்கு ஏற்ப நிலத்தடியில் புதைந்திருக்கும் நம் மாவீரர்கள் இன்றளவும் உயிர்த்துடித்து ஈழ விடுதலை உணர்வை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் என்பதே பொங்குதமிழ் ஒன்றுகூடல் நமக்கெல்லாம் தெரிவித்த செய்தி.
நீண்டகாலமாக ஈழ விடுதலைக்காக நாம் எண்ணற்ற இழப்பினைத் தாங்கிப் போராடி வருகிறோம். தற்கால உலக அரசியல் ஒழுங்கமைவுகளுக்கு ஏற்ப சரியான காய்நகர்த்தல்களுடன் கூடிய ராஜதந்திர முன்னெடுப்புகள் ஈழ விடுதலைக்குத் தற்போதைய உடனடித் தேவையாக இருக்கிறது. சிங்களப் பேரினவாத அரசிற்கு ஆதரவு நல்கி, ஆயுதம் வழங்கி நாம் கனவு தேசமாய்க் கட்டிய நாட்டை நம் கண்களுக்கு அழித்துப் போட்டதில் இந்தியாவின் பங்கு மகத்தானது. 8 கோடித் தமிழர்கள் வாக்கு செலுத்தி, வரி செலுத்தி வாழுகின்ற இந்தியப் பெருநாட்டின் வெளியுறவு கொள்கைகள் மாற்றப்படாமல் நமக்கு ஈழ விடுதலை சாத்தியமில்லை. எனவே, இந்திய நாட்டின் வெளியுறவு கொள்கையை மாற்றுவதற்கான அதிகார வலிமைப் நமக்குத் தேவையாக இருக்கிறது. அதனால்தான், அதிகாரத்தை நோக்கிய பாய்ச்சலாக, எந்த அதிகாரம் எம் இனத்தின் விடுதலைக்கனவை நசுக்கிப் போட்டதோ அந்த அதிகாரத்தை அடைவதற்காகத் தமிழின இளையோர் ‘நாம் தமிழர்’ என்கின்ற மாபெரும் வெகுசன அரசியல் முன்னெடுப்பை தாயகத்தமிழகத்திலே உருவாக்கி வருகின்றோம். தன் மொழியையும், இனத்தையும் உயிருக்கு மேலாக நேசிக்கின்ற தமிழின இளையோர் தங்கள் இனமான விடுதலையை எதிர்காலத்தில் வென்றே தீருவார்கள். இது உறுதி.
அடிமை இருளகற்ற தங்கள் உயிரையே வெளிச்சமாகக் கொண்டு அந்த விண்ணில் நட்சத்திரமாய் மாறிப்போனவர்கள் நம் மாவீரர்கள். அவர்களது மூடிய விழிகளுக்குள் மூடாத விடுதலையின் வாசல் இருக்கிறது. ஊதக்காற்றை அலையும் அவர்களது மூச்சுக்காற்றில் முடங்காத விடுதலைக்கனவு ஒன்று இருக்கிறது. குடல் சரிந்து உடல் விழுந்தாலும் உருக்குலையாத உள்ளத்தில் தாயக விடுதலைக்கனல் இன்னும் கனன்று கொண்டேதானிருக்கிறது. எந்தக் கனவிற்காக மாவீரர்கள் மண்ணில் விழுந்து விண்ணிற்குப் போனார்களோ அந்தத் தாயக விடுதலைக்கனவை நம் உயிருள்ளவரை நம் ஆன்மாவில் சுமந்து நம் செயல்களினால் அதைச் சாத்தியப்படுத்த சத்திய தலைவன் மேதகு வே.பிரபாகரன் வழியில் ஒன்றுகூடி உழைப்போம் என இந்நாளில் நாம் உறுதியேற்போம். ஓயாத அலைகளாய் எழும்பி நம் தாயக விடுதலைக்காகத் தன்னுயிர் தந்த மாவீரர்களின் புகழ் ஓங்குக! சத்தியநெருப்பில் தங்களையே ஒப்படைத்து நமக்காக, நம் இனத்திற்காக, நம் மொழிக்காக, நம் விடுதலைவாழ்விற்காகச் சாவினைத்தழுவிய சந்தனப்பேழைகளாம் மாவீரர்களுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!

— செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி26-11-2016 தேசியத்தலைவர் 62வது பிறந்தநாள் விழா – சீமான் வாழ்த்துரை
அடுத்த செய்தி27-11-2016 மாவீரர் நாள் பொதுக்கூட்டம் – மதுராந்தகம்