இதுதான்டா உங்க பிரபாகரன்.. காங்கிரஸ் தொண்டர்களிடம் சிக்கிய தமிழ் ஈழ ஆதரவாளர்கள்.

73

»இதுதான்டா உங்க பிரபாகரன்.. » காங்கிரஸ் தொண்டர்களிடம் சிக்கிய தமிழ் ஈழ ஆதரவாளர்கள்!தமிழகம் முழுக்க காங்கிரஸ் போட்டியிட்ட  தொகுதிகளில் ஈழ ஆர்வலர்கள் செய்த எதிர்ப் பிரசாரத்தைச் சமாளிக்க முடியாத கோபத்​தில் கொந்தளித்தது தமிழக காங்கிரஸ்!

கடந்த திங்கள்கிழமை மாலை, ‘காங்கிரஸுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?’ என்று தலைப்பிட்ட புத்தகங்களை, வட சென்னைப் பகுதிகளில் விநியோகித்த மே 17 இயக்கத்தினர் மீது காங்கிரஸ் கட்சியினர் நடத்திய கொலை வெறித் தாக்குதல் ஏரியாவையே பதை​பதைக்க வைத்திருக்கிறது!தாக்குதலுக்கு உள்ளான மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் நம்மிடம் பேசினார்.


»இறுதிக் கட்ட ஈழப் போரின்போது மட்டுமே ஆயிரமாயிரம் பிஞ்சுக் குழந்தை​களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்து சிதைத்துக் கொன்றது இரக்க​மற்ற சிங்களப் படை. உலகின் மோசமான படுகொ​லை​யில் சிக்குண்டு சின்னா​பின்னமாகிப்போன ஈழத் தமிழ​னின் நிலைபற்றி இன்ற​ளவிலும் எதுவும் பேசாமல் கள்ளச் சிரிப்பு சிரிக்கிறது  காங்கிரஸ் அரசு. கடந்த தேர்தல்களில்,அந்தக் கட்சி கூட்டணிக்கு நாம் அளித்த வாக்குகள் எல்லாமே ஈழத் தமிழனுக்கு வாய்க்கரிசி போடத்​தானே உதவியது! ‘அப்படி ஓர் இழிநிலை இனியும் வரக் கூடாது. தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் ஜெயிக்கக் கூடாது…’ என்றுதான் இந்த விழிப்பு உணர்வுப் பிரசாரத்தை நடத்தினோம். உரிய அனுமதி பெற்று நாங்கள் நடத்திய பிரசாரத்துக்கு மக்களிடமும் நல்ல வரவேற்பு இருந்தது. ஒரு சில இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் தகராறு செய்தனர். ஆனால், திரு.வி.க. நகர் ஆடுதொட்டி பகுதியில் நாங்கள் மக்களிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, காங்கிரஸ் கரை வேட்டி கட்டிய கும்பல் ஒன்று திடீரென்று எங்களைச் சூழ்ந்து சரமாரியாகத் தாக்கியது.இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர் என் முகத்தில் ஓங்கிக் குத்தினார். அதற்குள் பொதுமக்கள் எங்கள் தோழர்களில் இரண்டு பேரை, அந்தக் கொலை வெறிக் கும்பலிடம் இருந்து மீட்டுக் காப்பாற்றினர். ஆத்திரம் அடைந்த கும்பல், எங்களைத் தரதரவென இழுத்துச் சென்று ஓர் அறையில் அடைத்துவைத்து அடித்தது. அதில் ஒருவன் கையில் ஒரு கல்லை வைத்துக்கொண்டு தரையிலேயே படம் வரைந்து, ‘இதுதான் பிரபாகரன். அவரைச் சுத்தி பொதுமக்களைப் பிடித்து வைத்திருந்ததால்தான், இலங்கை அரசு மக்களையும் கொன்றது. புரிஞ்சுதா?’னு சொல்லிக்கிட்டே அந்தக் கல்லால் எங்களை அடிக்க ஆரம்பிச்சான்.

‘துண்டறிக்கை கொடுப்பதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கு. நீங்கள் எப்படி எங்களை அடிக்கலாம்?’ என்று நான் எதிர்த்துக் கேட்கவும், உடனே அவர்கள் என்னைக் கீழே தள்ளிவிட்டு மிதித்தார்கள்.எங்களை அடித்து விரட்ட வேண்டும் என்பதை​விடவும், தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதில்தான் அவர்கள் குறியாக இருந்தார்கள். அதனால்தான் இடையிடையே, ‘டேய், அண்ணனுக்கு போன் போட்டு விஷயத்தைச் சொல்லு’னு அடிக்கடி மாற்றி மாற்றி பேசிக்கொண்டே அடித்தார்கள். கடைசியில் போலீஸ்தான் எங்களைக் காப்பாற்றி, புளியந்தோப்பு ஸ்டேஷனுக்குக் கூட்டி வந்தது. அங்கேயும் புகுந்த காங்கிரஸ் கொலை வெறிக் கும்பல், போலீஸ் முன்பே மறுபடியும் எங்களை அடித்தனர். அடிபட்டுக்கிடந்த தோழரைப் பார்க்க வந்த அவரது அண்ணனின் காரையும் உடைத்து நொறுக்கியதோடு, எங்கள் செல்போன், பர்ஸ், கிரெடிட் கார்டு எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டார்கள்… » என்றார் படபடப்போடு.

இதற்கிடையில், புளியந்தோப்பு காவல் நிலையத்தை முற்றுகை இட்டிருந்த காங்கிரஸாரோ,  »என்னமோ இவங்க மட்டும்தான் தமிழச்சி பாலு குடிச்சவங்க மாதிரிப் பேசுறானுங்க. நாங்களும் தமிழச்சிக்குப் பொறந்தவங்கதான். வெள்ளைக்காரனையே எதுத்து நின்னவங்க காங்கிரஸ்காரங்க. அடிச்சுச் சொல்றோம்… இவனுங்க விடுதலைப் புலி ஆட்கள்தான். நாங்க நெனச்சிருந்தா, ஆடுதொட்டியிலேயே இவனுங்களை அடிச்சுப் புதைச்சிருப்போம்… » என்று வெடித்தனர்.வட சென்னை காங்கிரஸ் 10-வது சர்க்கிள் தலைவர் பாலு,  »மே 17 இயக்கத்து ஆளுங்க, ‘காங்கிரஸ் கருங்காலிகளுக்கு ஓட்டு போடாதீங்க. உங்களுக்கு ஆயிரம் ரூபா தர்றோம்’னு பொதுமக்கள்கிட்டே சொல்லியிருக்காங்க. தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாவும் பேசியிருக்காங்க. அதனால​தான், அவங்களை போலீஸ்கிட்டே ஒப்படைச்சோம். மத்தபடி நாங்க யாரும் அடிக்கலை. பிடிபட்டவர்களிடம் இருந்து சி.டி., பென் டிரைவ், செல்போன், சிம் கார்டுகளை பறிமுதல் செய்து போலீஸிடம் கொடுத்தோம். ஆனால், போலீஸாரோ அவர்களுக்கு சாதமாக நடந்துகொள்கிறார்கள். அதனால், கமிஷனர் வரையிலும் இந்தப் பிரச்னையைக் கொண்டு போவோம். » என்றார் கோபத்தோடு.புளியந்தோப்பு சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மனோகரன்,

தேர்தல் நேரத்தில் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் விதத்தில் பேசியது, தலைவர்களைத் தரக்குறைவாக விமர்சித்தது உட்பட மூன்று பிரிவுகளில் மே 17 இயக்கத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். கைப்பற்றப்பட்ட சி.டி-களில் வழக்குக்கு சம்பந்தப்பட்ட தகவல்கள் ஏதேனும் இருந்தால், அதையும் கோர்ட்டில் சமர்ப்பிப்போம். » என்றார்.கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்தாக வேண்டும்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கினைப்பாளர்களுக்கு – தலைமை அலுவலக அறிவிப்பு
அடுத்த செய்திRajapakse rigged the “TIME” poll too ?