ஆந்திரச் சிறைகளில் வாடும் 3000க்கும் மேற்பட்டத் தமிழர்களை மீட்பதற்குரிய ஏற்பாடுகளை உடனே செய்ய வேண்டும். – சீமான் வலியுறுத்தல்

26

அறிக்கை: ஆந்திரச் சிறைகளில் வாடும் 3000க்கும் மேற்பட்டத் தமிழர்களை மீட்பதற்குரிய ஏற்பாடுகளை உடனே செய்ய வேண்டும். 5 பேரின் மரணத்திற்கும் மத்தியப் புலனாய்வு விசாரணை செய்து, இறந்து போனவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தர வேண்டும்.

– சீமான் வலியுறுத்தல்

செம்மரக்கட்டை கடத்தல்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி அப்பாவிக் கூலித்தொழிலாளர்களைக் கைதுசெய்வதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தனது குடும்ப வறுமையைப் போக்கக் கூலிக்கு மரம்வெட்டச் சென்ற அப்பாவித் தமிழகக் கூலித்தொழிலாளர்கள் 3,000க்கும் மேற்பட்டோர் ஆந்திரச் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்படும் செய்தியானது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. அவர்களை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காது கள்ளமௌனம் சாதிக்கும் தமிழக அரசின் செயலானது வன்மையானது கண்டனத்திற்குரியதாகும்.

கைதுசெய்யப்பட்டுள்ள தமிழகத் தொழிலாளர்கள் யாவரும் சந்தேக வழக்குகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டவர்கள்தான் என்பதனை அறுதியிட்டுக் கூற முடியும். அவர்கள் வெளியே வர முடியாதபடி அடுத்தடுத்து அவர்கள் மீது வழக்குகள் பாய்ச்சப்பட்டதால் பிணையினைப் பெற முடியாது தவித்து வருகின்றனர். ஒருவர் மீது அதிகபட்சமாக 75 வழக்குகள் வரைத் தொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிய வருகிறது. ஒரு வழக்கில் பிணையினைப் பெற 30,000 ரூபாய் வரை செலவாகும் என வைத்துக் கொண்டாலும் பல்வேறு வழக்குகளின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ள இவர்கள் பிணையினைப் பெறுவது சாத்தியமில்லை என்கிற அளவில்தான் இவர்களது பொருளாதார நிலையிருக்கிறது. இதனால், எவ்விதத் தவறும் இழைக்காத அப்பாவிக் கூலித்தொழிலாளர்கள் மூன்றாண்டு வரை சிறையிலேயே வாடும் பெருங்கொடுமையும் நடந்து வருகிறது. சிறையில் அடைக்கப்படும் தமிழகத் தொழிலாளர்கள் மிகக் கடுமையான சித்திரவதைகளுக்கும், பெரும் மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். நிர்வாணமாக்கிச் சித்ரவதை செய்வது, தலைகீழாகத் தொங்கவிட்டு அடிப்பது, நகக்கண்களுக்குள் ஊசி ஏற்றுவது, உடலில் மின்சாரம் பாய்ச்சுவது என ஈவிரக்கமற்ற பெருங்கொடூரங்கள் சிறையில் வாடும் அப்பாவித்தமிழர்களுக்கு இழைக்கப்படுகிறது.

அண்மையில் ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தின் ஒண்டிமிட்டா ஏரியில் 5 தமிழர்களின் உடல்கள் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது. செம்மரக்கட்டையினைக் கடத்த வந்தபோது காவல்துறையினரிடமிருந்து தப்ப முயன்று ஏரியில் விழுந்து இறந்ததாக ஆந்திரக் காவல்துறையினர் கூறியிருக்கின்றனர். இடுப்பளவு மட்டுமே தண்ணீர் உள்ள அந்த ஏரியில் நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறுவது ஒரு பச்சைப்பொய்யாகும். இது அம்மாநில அரசின் ஒப்புதலோடு ஆந்திரக் காவல்துறையினர் திட்டமிட்டு நிகழ்த்திய ஒரு படுகொலை என்பதில் துளியளவும் ஐயமில்லை. ஆந்திராவிற்குக் கூலிக்கு மரம்வெட்டச் செல்லும் அப்பாவிக்கூலித் தொழிலாளர்களைக் கைதுசெய்து சித்ரவதை செய்வது, சுட்டுக்கொலை செய்வது போன்றவற்றின் நீட்சியே இந்நிகழ்வாகும். சுட்டுக்கொலை செய்தால் தெரிந்துவிடும் என்பதால் இவ்வாறு கொன்றிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகும். கூலிக்கு மரம்வெட்டச் செல்லும் அப்பாவித்தமிழர்கள் மீது செம்மரக்கட்டையை வெட்டினார்கள் எனத் திருட்டுப்பழி சுமத்திக் கொலைசெய்யும் ஆந்திரக் காவல்துறையினர், அம்மரக்கட்டைகளைக் கடத்தும் பணக்கார முதலாளிகளையும், அவர்களுக்கு ஆள் பிடித்துத் தரும் தரகர்களையும் ஏன் கைதுசெய்வதில்லை? சந்திரபாபு நாயுடுவின் அரசு உண்மையில் துணிவும், நெஞ்சுரமும் மிக்க அரசாக இருந்தால் அவர்களைக் கைதுசெய்ய வேண்டியதுதானே? அவர்களை நோக்கி ஏன் ஆந்திரக் காவல்துறையினரின் தோட்டாக்கள் பாய்வதில்லை? ஏனென்றால், ஆந்திராவை ஆளும் சந்திரபாபு நாயுடுவின் அரசிற்கு உண்மையில் நோக்கம் அப்பாவித் தமிழர்களைக் கொலைசெய்துவிட்டு உண்மையானக் கடத்தல்காரர்களைத் தப்பிக்க விடுவதுதானே ஒழிய, அவர்களைக் கைது செய்வதல்ல! இதே கருத்தினைத்தான் ஆந்திராவைச் சேர்ந்த மனித உரிமை சங்கத்தின் தலைவர் ஸ்ரீநிவாஸ் அவர்களும் தெரிவித்திருக்கிறார். தங்களது அரசியல் சுய இலாபத்திற்காகவும், இனத்துவேச வெறிக்காகவும் தமிழர்களைப் பலியிட்டு வரும் ஆந்திர அரசின் இக்கொடுங்கோல் போக்கு, மானுடப்பற்று கொண்டு சக மனிதனை நேசித்து வாழும் எவராலும் ஏற்க முடியாத ஒன்றாகும்.

கடந்த 2015-ம் ஆண்டு திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாகக் கூறி, 20 தமிழர்களை ஒரே நாளில் ஆந்திரக் காவல்துறையினர் சுட்டுக்கொலை செய்தனர். அது ஒரு படுகொலை என்பது வெளிப்படையாகத் தெரிந்தபோதும் அதனைக் கண்டுகொள்ளாது மௌனமாகக் கடத்திவிட்டார்கள். அதனைப்போல தற்போது ஐந்து தமிழர்களைக் கொன்றிருக்கின்றனர். இது நடந்தேறி ஒரு வாரமாகியும் இதுவரை இதற்குரிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழர்களுக்கான அதிகாரங்களாக இன்றைக்கு ஆளும் வர்க்கம் இல்லாததன் விளைவாக ஒன்றும்செய்ய இயலாத கையறு நிலையில் தமிழர்கள் நிற்க வேண்டியிருக்கிறது. ஒருநாள் அதிகாரம் தமிழர்களுக்கானதாய் கைவரப் பெறும். அன்றைக்கு இவற்றிற்கெல்லாம் எதிர்வினையை மொத்தமாய் அறுவடை செய்யப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை என ஆந்திர அரசை எச்சரிக்கிறேன்.

எனவே, தமிழக அரசானது இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு ஆந்திரச் சிறைகளில் வாடும் 3000க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும், ஏரியில் பிணங்களாகக் கண்டெடுக்கப்பட்ட 5 பேரின் மரணத்திற்கும் மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு வழிசெய்து, இறந்து போனவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

வந்தாரை வாழ வைக்கும் பண்பாட்டைக் கொண்ட ஓர் பேரினத்தின் மக்கள் சொந்த நிலத்தில் வாழ முடியாது அந்நிய நிலத்திற்கு கூலிகளாய் இடம்பெயர்கிறார்கள் என்பது ஏற்கவே முடியாத பெருந்துயராகும். எனவே, ஆந்திராவில் கூலிவேலைக்குச் செல்லும் தமிழகத்தொழிலாளர்களுக்கு மாற்றுவேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர முன்வர வேண்டும் எனவும் தமிழக அரசைக் கோருகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திமாவட்டப் பொறுப்பாளர்களுடன் சீமான் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் – சென்னை நடுவண் மண்டலம்
அடுத்த செய்திபாலேஸ்வரத்தில் உள்ள ஜோசப் கருணை இல்லத்தில் நடந்த மரணங்களை ஆய்வுசெய்து உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்