மார்ச் 8, உலக மகளிர் நாள் | பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை! – சீமான் வாழ்த்து!

1642

அறிக்கை: மார்ச் 8, உலக மகளிர் நாள் | பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை! – சீமான் வாழ்த்து! | நாம் தமிழர் கட்சி

‘மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திட வேண்டுமம்மா!’ என்று பெண்களைப் போற்றிக் கொண்டாடுகிறார் கவிமணி தேசிய விநாயகம். ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று பெண்களின் பேராண்மையைப் போற்றித் தொழுகிறார் பெரும்பாவலர் சுப்பிரமணிய பாரதி.

‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே!’ என்று பெண்ணிய விடுதலைக்குச் சங்கநாதம் எழுப்புகிறார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன். ‘அடிமைத்தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும், கொடுமையும் ஒழிய வேண்டும்’ என் அறச்சீற்றமுருகிறார் ஐயா பெரியார்.

“பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி!” என்று பாலினச் சமத்துவத்தைப் பாக்களின் வழியே போதிக்கிறார் திருவருட்பிரகாச வள்ளலார். ‘பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை!’ எனக்கூறி பெண்ணியத்தின் பெருந்தேவையைப் பேரறிவிப்பு செய்கிறார் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். இவ்வாறு பெண்களைப் போற்றிக் கொண்டாடுவதே தமிழர்களின் அறம் வகுத்துத் தந்த உயர்நெறியென அதனை அடியொற்றினார்கள் தமிழின முன்னவர்கள். தாய்வழிச்சமூகமான தமிழ்ச்சமூகத்தில் ஆதிகாலந்தொட்டே பெண்களுக்கு முன்னுரிமையும், முதன்மைத்துவமும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது; தமிழ்ச்சமூகத்திற்கு பெண்களே தலைமை வகித்திருக்கிறார்கள்.

இடைக்காலத்தில் நிகழ்ந்த அந்நியப் பண்பாட்டுப் படையெடுப்புகளினாலும், இனக்கலப்புகளினாலுமே பெண்களுக்குரிய தலைமைத் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டு பெண்ணடிமைத்தனம் வேரூன்றியிருக்கிறது. அத்தகைய அடிமைத்தனத்திற்கும், உரிமைப் பறிப்புக்கும் எதிராகப் போராடி மெல்ல மெல்ல மேலெழுந்து வரும் பெண்களை அடக்கி ஒடுக்கும் விதமாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலத்தில் பல்கிப்பெருகி வருவது பெண்களின் நடமாடும் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பான வாழ்க்கை முறையினைக் கேள்விக்குறியாக்குவதாகவும் உள்ளது.

பெண்களை நதியாகவும், தெய்வமாகவும் உருவகப்படுத்தி வழிபடும் நாட்டில் பெண்களுக்கு எதிரான இத்தொடர் தாக்குதல்கள் யாவும் ஒவ்வொரு மனிதருக்குமான தலைகுனிவு என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை. ஆணாதிக்க வன்முறையும், பாலியல் குற்றங்களும் விளிம்புநிலையில் இருக்கும் அடித்தட்டு வர்க்கப்பெண்கள் மீதுதான் அதிகளவில் நிகழ்த்தப்படுகிறது என்றாலும், இவ்வகைத்தாக்குதல்கள் யாவும் ஒட்டுமொத்தப்பெண் சமூகத்தின் மீதே ஏவப்படுபவையே என்பதை எவரும் மறுக்க முடியாது.

பெண்ணிய விடுதலையும், பாலினச்சமத்துவமும் நீண்ட நெடுங்காலமாகவே தமிழகத்தில் பேசப்படுபொருளாக இருக்கிறதே ஒழிய, செயலாக்கம் பெறவில்லை. ஆனால், அதனை ஈழ நிலத்தில் முழுமையாக சாத்தியப்படுத்தி நிறுவிக்காட்டினார் தலைவர் பிரபாகரன் அவர்கள். அவர்தம் பிள்ளைகள் அதனைத் தமிழகத்தில் செயற்படுத்த அணியமாகி நிற்கிறோம். அதற்கு எல்லாத்தளங்களிலும் பணியாற்ற வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது.

பெண்கள் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்றி, பொதுப்புத்தியைக் கட்டுடைக்க கல்வி முறை, திரைப்படம், ஊடகங்கள் என யாவற்றிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்குச் சரிநிகராக பெண்களுக்கு 50 விழுக்காட்டு இடஒதுக்கீட்டினைப் பெற்றுத்தர வேண்டும். மகப்பேறு காலத்தை 6 மாதங்களாக நீட்டித்து ஊதியத்துடன் கூடிய விடுப்பைத் தர வேண்டும். கணவனை இழந்து நிற்கும் இளம்பெண்கள் விரும்பும்பட்சத்தில் அவர்களுக்கு மறுமணம் செய்துவைக்க முன்வர வேண்டும்.

அலுவலங்களில் பணிபுரியும் பெண்களின் வசதிக்காக 15 நிமிடங்கள் தாமதமாக வந்தாலும் பணியில் இணைந்துகொள்ள நேரநீட்டிப்பு செய்ய வேண்டும். பெண்களுக்கென அதிகப்படியானப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். பெண்களுக்கென தனி சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கென தனிப்படை அமைத்து அவர்களின் பாதுப்பான வாழ்க்கையினை உறுதி செய்ய வேண்டும். இவையாவற்றையும் பெண்களின் நலவாழ்வுக்கென செய்திட நாம் தமிழர் கட்சி உறுதிபூண்டு அதனை ஆட்சியதிகாரத்தில் ஏறும்போது செய்வோமென சூளுரைக்கிறது.

அரியணையில் ஏறுவதற்கு முன்பே இந்தியத் தேர்தல் அரசியல் வரலாற்றில் இதுவரை எவரும் செய்திடாத முன்னெடுப்பை நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி செய்து காட்டியது. பாலினச்சமத்துவத்தைப் பேணும் விதமாக 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் சரிநிகராகக் களமிறக்கியது.

தற்போது அதன் நீட்சியாக, 2021ல் நடக்கவிருக்கின்ற சட்டமன்றத்தேர்தலிலும் 117 தொகுதிகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களை களம்காண செய்யவிருக்கிறது. பெண்ணியத்தை பேசிக் கொண்டிருக்கிற அரசியல் இயக்கங்களுக்கு மத்தியில் அதனைக் களத்தில் சாதித்துக் காட்டியப் பெருமை நாம் தமிழர் கட்சியினையே சாரும். இந்நாளில் பாலினச்சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத் தரவும் நாம் தமிழர் கட்சி சமரசமின்றி சமர் செய்யும் என உறுதியளிக்கிறேன்.

உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் நாள் நல்வாழ்த்துகள்!
பெண்மை போற்றுதும்! பெண்மை போற்றுதும்!

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் -ராணிப்பேட்டை தொகுதி
அடுத்த செய்திதிருச்சி சாகின்பாக் | குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் – சீமான் கண்டனவுரை