அணு உலை பாதுகாப்பு குறித்து முதல்வர் முழுமையான விளக்கம் பெற வேண்டும்: நாம் தமிழர் கட்சி

47


கூடங்குளம் அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்க அணு சக்தி ஆணையத்தின் தலைவர் சிறீகுமார் பானர்ஜியும், தேச அணு சக்திக் கழகத்தின் தலைவர் ஜெயினும் இன்று தமிழக முதல்வரை சந்திக்கவுள்ளார்கள் என்று செய்திகள் வந்துள்ளது.

கூடங்குளம் அணு உலை இயக்கப்பட்டால், அதில் விபத்து ஏற்படும் நிலையில் தங்கள் வாழ்வு முற்றிலும் அழிந்துபோகும் அபாயம் உள்ளது, எனவே அணு உலைகளை மூடிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துவரும் நிலையில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஒரு பக்கம், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிவரும் மக்கள் எழுப்பிய வினாக்களுக்கு இன்றுவரை நேரிடையாக எந்த பதிலையும் அணு சக்தி ஆணையம் அளிக்கவில்லை. ஆனால், மறுபக்கம், அந்தப் போராட்டத்தை அந்நிய சக்திகள்தான் பின்னால் இருந்து தூண்டி வருகின்றன என்று எதிர் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. இது மக்கள் போராட்டத்தை பிளவுபடுத்தி அதன் மூலம் அணு மின் உலைகளை இயக்குவதற்கான சூழலை உருவாக்கும் மறைமுக முயற்சியாகும். மக்கள் போராட்டத்தை மதப் போராட்டமாக சித்தரிக்கும் கீழ்த்தரமான வேலையும் நடந்து வருகிறது. இதன் பின்னணியி்ல யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து மக்களிடையே வெளிப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

இப்படிப்பட்ட பின்னணியில் தன்னை சந்திக்க வரும் சிறீகுமார் பானர்ஜியிடமும், ஜெயினிடமும் கூடங்குளத்திற்கு எதிராக போராடிவரும் மக்கள் எழுப்பும் வினாக்களுக்கு தமிழக முதல்வர் பதில்களைப் பெற வேண்டும்.

அணு உலைகளில் பயன்படுத்தப்படும் செரிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருள், பயன்படுத்தப்பட்ட நிலையில் அதில் 5 விழுக்காடு மட்டுமே எரிந்திருக்கும் என்றும், மீதமுள்ள 95 விழுக்காடு அப்படியே இருக்கும் என்றும் ஒப்புக்கொள்கின்றனர். மிக அதிகமான கதிர் வீச்சு கொண்ட அந்த அணுக் கழிவு எப்படி கையாளப்படுகிறது?

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இயக்குனர் சுந்தர், அணுக் கழிவை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவோம் என்று கூறியுள்ளார். அப்படியானால், கூடங்குளத்தில் அணுக் கழிவை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதா என்ற வினாவை முதல்வர் எழுப்ப வேண்டும். ஏனெனில் இதுவரை மறுசுழற்சி செய்யும் வசதி (Recycling Facility) எதுவும் பன்னாட்டு அணு சக்தி முகமையும் ஒப்புதலோடு இந்தியாவில் அமைக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. எனவே இதற்கான விளக்கத்தை அவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாகப் பெற வேண்டும்.

கூடங்குளம் அணு உலையில் ஒராண்டுப் பயன்பாட்டில் எவ்வளவு அணுக் கழிவு உருவாகும் என்று செய்தியாளர்கள் கேட்ட வினாவிற்கு சுந்தர் பதிலளிக்கவில்லை. இது இதழாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் வீணாகும் கழிவுகளை சிமெண்ட்டுடன் கலந்து கூடங்குளம் அணு உலை வளாகத்திற்குள்ளேயே புதைத்து வைத்து கண்காணிக்கப்படும் என்று கூறியுள்ளார். இது சுற்றுச் சூழலிற்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்தும் ஆழமான  விளக்கத்தை முதல்வர் பெற வேண்டும்.

கூடங்குளம் அணு மின் உலை கடல் மட்டத்திலிருந்து 4.5 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது, எனவே ஆழிப்பேரலை தாக்கினாலும் ஒன்றும் ஆகாது என்று முன்பு கூறியிருந்தனர். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அது கடல் மட்டத்திலிருந்து 7.5 மீட்டர் உயரத்தில் இருப்பதாக கூறுகின்றனர். இப்படி முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் அதிகாரப்பூர்வமான பேச்சாளர்களே வெளியிடுவது ஏன்? இதில் உண்மை என்ன என்பதை முதல்வர் கேட்டறிய வேண்டும்.

அணு கதிர் வீச்சு (Radiation) ஆபத்தானது என்று உலகம் முழுவதும் பேசப்படுகிற அறிவியல் பூர்வமான உண்மை. அணுக் கதிர் விச்சால் ஏற்படும் பாதிப்பு பல தலைமுறைகளுக்குத் தொடரும் என்பதை இன்று வரை ஜப்பான் கண்ணுக்குத் தெரிந்த ஆதாரமாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், அணு சக்தி தூய சக்தி என்று கூறி, மக்களை ஏமாற்றுவது ஏன்?

அணு உலைகளின் மூலம் பெறும் மின் சக்தி விலைக் குறைவானது என்று அணு சக்தி விஞ்ஞானிகள் மட்டுமே கூறிக்கொண்டிருக்கின்றனர். இது ஒப்பீட்டளவில் எந்த அளவிற்கு உண்மை? 2,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க கூடங்குளம் உலைகளுக்கு இதுவரை ரூ.13,500 கோடி செலவாகியுள்ளது. அப்படியிருக்க அணு மின்சாரம் எப்படி விலைக் குறைந்ததாக இருக்க முடியும்?

அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருள் இந்தியாவில் மிகவும் குறைவாகவே உள்ளது. இப்போது இயங்கிவரும் அணு உலைகளுக்கே அயல் நாட்டில் இருந்து யுரேனியம் தருவிக்க வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறிருக்க அணு உலைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதேன்?

இது போன்ற பல வினாக்களுக்கு விடையைப் பெற்று, அதனை தமிழக மக்களுக்கு முதல்வர் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், மக்களுக்காக மின்சாரமா? அல்லது மின்சாரத்திற்காக மக்களா? என்ற வினாவிற்கு பதில் கிடைக்கும்.

முந்தைய செய்திமூன்று தமிழர் உயிர்க்காக்க 3-11-11 அன்று கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பார்ட்டம்
அடுத்த செய்திஅமெரிக்காவில் நுழைய சீமானுக்கு அனுமதி மறுப்பு: நாம் தமிழர் கட்சி கண்டனம்