மே-18, இன எழுச்சி நாள்: வீழ்வோம் என்று நினைத்தீரோ..? – சீமான் பேரழைப்பு

2320

நாள்: 14.05.2020

மே-18, இன எழுச்சி நாள்: வீழ்வோம் என்று நினைத்தீரோ..? – சீமான் பேரழைப்பு

உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு,
அன்பு வணக்கம்!

சிங்களப் பேரினவாதம் உலக நாடுகளின் துணையோடு ஈழ நிலத்தில் நடத்திய கோர இனப்படுகொலை முற்றாக முடிவுற்று 10 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். இனம் பட்ட துயருக்கும், இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கும் நீதிகேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்றளவும் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறோம். புலமும், களமும், தமிழகத் தாயகமும் வலிமையற்று அதிகாரமற்றிருக்கக் கையறு நிலையில் நிற்கிற தமிழர்கள் தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொண்டு, உள்ளத்தில் வன்மத்தை உரமேற்றிக் கொண்டு மீண்டெழுந்து நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.

மே 18 –  தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் குண்டுவீசி கொலை செய்யப்பட்டு, ஈழ நிலம் முழுவதும் இரத்தச் சகதியிலே நனைந்து, ஒப்பாரியும், ஓலமும் நாட்புறமும் எதிரொலிக்க இரண்டு இலட்சம் தமிழர்களின் பிணக்குவியல்கள் மத்தியில், முள்ளிவாய்க்கால் நிலத்தில் யாவும் முற்றுப்பெற்று விட்டதாக இன எதிரிகள் எக்காளமிட்டு சிரித்த நாள். எவ்விடத்தில் தமிழர்கள் முடிவுற்றதாகச் சிங்களப் பேரினவாதமும், பன்னாட்டுச்சமூகமும் கருதியதோ அவ்விடத்திலேயே, ‘வீழ்வோம் என்று நினைத்தீரோ?’ என்று கேள்வி எழுப்பி, ‘விழ விழ எழுவோம்! ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!’ எனும் இன மீட்சி முழக்கத்தை முன் வைத்து தமிழ்த்தேசிய இனம் மீண்டெழ வேண்டிய காலக்கடமை உருவாகியிருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த அன்னைத் தமிழினம் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்றுத்தருணமிது.

கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இனப்படுகொலை நாளை நினைவுகூற தமிழர்கள் யாவரும் தத்தம் வீடுகளிலேயே நினைவேந்தலை அனுசரிக்க வேண்டுமென உலகத்தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன். வரும் மே 18 அன்று மாலை சரியாக 6.10 மணியளவில் உறவுகள் அவரவர் வீடுகளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்து, எழுச்சிச் சுடரேற்றி, இன மீட்சிக்கு உறுதிமொழியேற்று உயிரிழந்த உறவுகளுக்கு நினைவேந்தலைக் கடைபிடிக்க வேண்டுமென அழைக்கிறேன்.

ஈழப்போரின் இறுதி நாட்களில் உணவுக்குக்கூட வழியில்லா கொடிய வறுமை நிலையில் உப்புகூட இன்றி நம் உறவுகள் அல்லல்பட்ட அக்காலக்கட்டத்தில் அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சி, உப்பில்லா கஞ்சியையே உண்டு இனமீட்சிக்குப் போராடியிருக்கிறார்கள். அத்துயரினை நினைவுகூற, அந்நேரத்தில் உப்பில்லா கஞ்சியைக் காய்ச்சி அதனை உண்டு, மற்றவர்களுக்கும் பகிருங்கள். இன விடுதலைக்களத்தில் நமது உறவுகள் பட்ட பெருந்துயரினை உலகுக்கு உணர்த்திட இல்லங்களிலே இருந்தவண்ணம் உலகம் முழுமைக்கும் பரப்புரை செய்திடுவோம்.

உள்ளத்தில் அணையா பெருநெருப்பாய் பற்றியெரியும் இன உணர்வினை அடைகாத்து அதனை மற்றவருக்கும் பற்ற வைத்து இன விடுதலையை வென்றெடுக்கச் சூளுரைப்போம்!

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

 

இன எழுச்சி நாள் – எழுச்சிச் சுடர் முழக்கம்:

Download Link: https://drive.google.com/open?id=1x6uqSv8pKAbeu3jwNgHAUtFHRNr2ItZ9

எரியட்டும் இந்த எழுச்சிச் சுடர்!

நமது இல்லத்திலும் உள்ளத்திலும்

இது வீரத்தமிழர்களின் விடுதலை நெருப்பு!

உலகத் தமிழர்களின் உயிர்ச் சுடர்!

பிரபாகரன் எனும் பெருநெருப்பு பற்ற வைத்த புரட்சித் தீ!

இதை அணையவிடாமல் அடைகாப்பது ஒவ்வொரு தமிழனின் உயிர்க் கடமை!

தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்!

இன எழுச்சி நாள் – உறுதி மொழி:

Download Link: https://drive.google.com/open?id=1CKBTT1UNB6dNCTkw8nIWI4UUvbZZYj8y

 

மொழியாகி

எங்கள் மூச்சாகி

முடிசூடும்

எம் தமிழ் மீதும்,

வழிகாட்டி

எம்மை உருவாக்கும்

தமிழர் வரலாற்றின் மீதும்,

விழிமூடி துயில்கின்ற

வீர வேங்கைகளின் மீதும்

உறுதியேற்கிறோம்!

 

விழுவோம்! விழுவோம்!

விதையாய் விழுவோம்!

எழுவோம் எழுவோம்!

விடுதலையாய் எழுவோம்!

விழுவோம்! விழுவோம்!

விதையாய் விழுவோம்!

எழுவோம்! எழுவோம்!

விடுதலையாய் எழுவோம்!

இலக்கு ஒன்றுதான்!

இனத்தின் விடுதலை!

இலக்கு ஒன்றுதான்! – எம்

இனத்தின் விடுதலை!

 

இனம் ஒன்றாவோம்!

இலக்கை வென்றாவோம்!

இனம் ஒன்றாவோம்!

இலக்கை வென்றாவோம்!

 

எங்கள் மாவீரர் சிந்திய குருதி!

எங்கள் தாயகம் மீட்பது உறுதி!

எங்கள் மாவீரர் சிந்திய குருதி!

எங்கள் தாயகம் மீட்பது உறுதி!

 

புரட்சி எப்போதும் வெல்லும்! – நாளை

எம்மின விடுதலை அதைச் சொல்லும்!

புரட்சி எப்போதும் வெல்லும்! – நாளை

எம்மின விடுதலை அதைச் சொல்லும்!

 

உறுதியாக நாங்கள் வெல்லுவோம்! – இதை

உரக்க உலகிற்குச் சொல்லுவோம்!

உறுதியாக நாங்கள் வெல்லுவோம்! – இதை

உரக்க உலகிற்குச் சொல்லுவோம்!

 

தமிழர்களின் தாகம்!

தமிழீழத் தாயகம்!

தமிழர்களின் தாகம்!

தமிழீழத் தாயகம்!

முந்தைய செய்திநெய்வேலி அனல் மின் நிலைய விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகபசுரக் குடிநீர் வழங்குதல்-கவுண்டன்பாளையம் தொகுதி