முக்கிய அறிவிப்பு

124

முக்கிய அறிவிப்பு:

தமிழ்த்தேசிய பேரினத்தின் தலைவர் மேதகு .வே.பிரபாகரன் அவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ, மதத்திற்கோ சொந்தமானவர் அல்ல. அவர் உலங்கெங்கும் வாழக்கூடிய தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமானவர். அவர் வழிநடத்திய இயக்கமும், அடைய போராடிய தேசமும் சாதி, மத முரண்களுக்கு அப்பாற்பட்ட சமத்துவ குடியரசாகும். அந்த உன்னதத் தலைவனை நெஞ்சில் ஏந்தி நடைபோடும் நாம் தமிழர் கட்சியும் சாதி, மத முரண்களுக்கு அப்பாற்பட்ட உலகத் தமிழர் அனைவருக்குமான உரிமைக்காகக் குரல் கொடுக்கும் அரசியல் கட்சியாகும். தமிழர்க்கென்று ஒரு தேசத்தை வென்றெடுக்கப் போராடினாலும், மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் எப்படி உலகெங்கும் விடுதலைக்காகப் போராடும் தேசிய இனங்களின் எழுச்சி குறியீடாக இருக்கிறாரோ அதுபோல, தமிழர் நிலத்தைத் தமிழரே ஆளவேண்டும் என்ற தத்துவ நிலைப்பாட்டோடு இருந்தாலும், தமிழ்த்தேசிய அரசியல் என்பது  அனைத்து உயிர்களுக்குமானது.

எனவே நாம் தமிழர் கட்சி எந்த ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ, மதத்திற்கோ, இனத்திற்கோ எதிரானது அல்ல. அனால் இவற்றின் பெயரால் தமிழருக்கு ஒரு இன்னலை ஏற்படுத்த யார் முனைந்தாலும் அவர்களுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி உறுதியாகப் போராடும். நம்முடைய எதிர்போராட்டம் என்பது தமிழை, தமிழ் நிலத்தை, அதன் வளத்தை, தமிழர்களை அடிமைப்படுத்த வேண்டும், இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுபவர்களின் கொள்கைகளுக்கு, செயல்பாடுகளுக்கு எதிரானதுதானே தவிர எந்த ஒரு குறிப்பிட்ட தனி மனிதருக்கோ, அவர் சார்ந்த சாதிக்கோ, மதத்திற்கோ, எதிரானது அல்ல.

கடந்த பத்தாண்டுகளில் நாம்தமிழர் முன்னேடுத்த அத்தனை போராட்டங்களும் அப்படிப்பட்டவைதான். ஆனால் இதே காலகட்டத்தில் நாம் தமிழர் கட்சி குறிப்பிட்ட சாதிக்கு எதிரானது போலவும், குறிப்பிட்ட மதத்திற்கு எதிரானது போலவும், குறிப்பிட்ட இனத்திற்கு எதிரானது போலவும் கட்டமைக்கப்படும் அவதூறான முயற்சியானது தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிரானவர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. அதே போல் குறிப்பிட்ட சாதிக்குள்ளோ, மதத்திற்குள்ளோ நாம் தமிழர் கட்சியை அடைக்கும் முயற்சியும் அவர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டே வந்துள்ளது.

ஆனால் இவ்வாறான அவதூறு பரப்புரைகளையெல்லாம் ஒவ்வொரு முறையும் நாம் தமிழர் கட்சி தம்முடைய அறம் சார்ந்த செயல்பாடுகளால்  புறந்தள்ளி தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தற்போது மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த படத்தில் சர்ச்சைக்குள்ளான காட்சியை நீக்க வேண்டும் என்ற நமது கோரிக்கையானது அந்தக் காட்சி உருவகப்படுத்தும் இழிவான சிந்தனைக்கு எதிரான, அதைக் காட்சிப்படுத்தியவர்களின் செயல்பாடுகளுக்கு எதிரானதே தவிர அதில் சம்பந்தப்பட்ட நபர்களின் சாதிக்கோ, மதத்திற்கோ எதிரானதல்ல.

எனவே தொடர்புடைய நபர்களின் சாதியையோ, மதத்தையோ, குறிப்பிட்டு அவை ஏதோ தமிழ்த்தேசிய இனத்திற்கும், தலைவருக்கும் எதிராக இருப்பதுபோலச் சித்தரிப்பது என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவற்றை நாம் தமிழர் கட்சி என்றைக்கும் ஆதரிக்காது. ஆனால் இவ்வாறான செயல்பாடுகளை நாம் தமிழர் கட்சி மேற்கொள்வதைப்போலவும், ஆதரிப்பதைப்போலவும் பொய்யான பரப்புரையைச் சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர். இவையனைத்துமே தமிழ்த்தேசிய அரசியலை அழித்துவிடத் துடிக்கும் சிறுமதியாளர்களின் தரம்தாழ்ந்த இழிவான செயல்பாடுகளாகும்.

எனவே எந்த ஒரு சாதி, மதத்திற்கு எதிரான உள்நோக்கத்துடன்கூடிய வன்மமான பரப்புரைகளில் ஈடுபடுபவர்களோ, அல்லது நாம் தமிழர் கட்சி ஈடுபடுவதுபோல் உண்மைக்குப் புறம்பாக அவதூறை பரப்புபவர்களோ அறம் சார்ந்த தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிரானவர்களேயன்றி அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்று தெளிவாக அறிவுறுத்தப்படுகிறது. 

  • தலைமை அலுவலகம்
முந்தைய செய்திகொரோனா நோயை தடுப்பு நடவடிக்கையாக கிரிமி நாசினி பொருட்கள் வழங்குதல்-நன்னிலம் தொகுதி
அடுத்த செய்திகுறிஞ்சிப்பாடி தொகுதி – பொறுப்பாளர் தேர்வு கலந்தாய்வு கூட்டம்