பியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

103

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

சூழலியல் செயற்பாட்டாளர் அன்புத்தம்பி பியூஸ் மனுஷ் அவர்கள் நாட்டில் நிலவும் பொருளாதாரத்தேக்கம் குறித்தும், மிக மோசமானப் பொருளாதாரக் கொள்கை குறித்தும் சேலம் பாஜக அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் நிர்வாகிகளை நோக்கிக் கேள்வியெழுப்பியதற்காக அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிற பாஜக நிர்வாகிகளின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய, கருத்தியலால்தான் ஒருவரை வீழ்த்த வேண்டுமே ஒழிய அதனைச் செய்யாது ஒருமையில் விளிப்பதும், தனிப்பட்ட முறையில் ஆபாசமாகப் பேசுவதும், அவதூறு பரப்புவதும், தாக்குவதும், மிரட்டுவதுமான வன்முறைச்செயல்களில் ஈடுபடுவது ஒருபோதும் ஏற்புடையதல்ல! அவைச் சனநாயகத்தைக் கொலைசெய்யும் பாசிச நடவடிக்கைகளாகும்.
தம்பி பியூஸ் மனுஷின் குடும்பத்தினர் குறித்துத் தொடர்ச்சியாகப் பாஜகவினர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதற்கு முடிவுகட்டும் விதமாகவும், பாஜகவின் நிர்வாகிகளோடு சித்தாந்த ரீதியாகவும், ஆட்சிமுறை குறித்தும் தர்க்கம் செய்யவே அவர் பாஜகவின் அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார். பாஜக அலுவலகத்திற்குள் அவர் அத்துமீறி நுழையவுமில்லை. சண்டை, சச்சரவில் ஈடுபடும் நோக்கத்தோடு செல்லவுமில்லை என்பது அவரது முகநூல் நேரலை காணொளி மூலம் தெளிவாகத் தெரிகிறது. சேலம் பாஜகவின் அலுவலகத்திற்குள் சென்ற பியூஸ் மனுஷ் பாஜக நிர்வாகிகளுடன் தர்க்கரீதியாக வாதம் மட்டுமே செய்கிறார். ஒருகட்டத்தில் பாஜக நிர்வாகிகள் மிக மோசமாக ஒருமையில் பேசவும், மிரட்டவும் தொடங்கவே தனது வாதத்தை முடித்துக் கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்கிறார். அத்துடன் அவரது முகநூல் நேரலையையும் நிறுத்துகிறார். அதன்பிறகே அவர் மீது பாஜகவின் நிர்வாகிகள் கோரத்தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள். இவை மிகத் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும் அரசியல் அநாகரீகமாகும். இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது ஓர் அரசின் தலையாயக் கடமையாகும்.
ஆகவே, சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுசைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்டப்பிரிவின்படி வழக்குப் பதிவுசெய்து அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி20 ஆண்டுகளுக்கு மேல் மின்வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஅறிவிப்பு: ஆக. 30, ‘பன்னாட்டு காணாமல் போனோர் நாள் 2019’ – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு