சோதனைச்சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொன்ற கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

25

அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொன்ற கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

கன்னியாகுமரி மாவட்டம், தமிழக – கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச்சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து அவர்களது குடும்பத்துயரில் பங்கெடுக்கிறேன்.
பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரி நாட்டிற்குள்ளே சுட்டுக்கொலை செய்யப்படுவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதீத பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்பட்ட அக்கொலையாளிகளின் இவ்வன்முறை வெறியாட்டம் கடும் கண்டனத்திற்குரியது. இச்செயலில் ஈடுபட்டவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் உடனடியாகக் கைதுசெய்யபபட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் ஒருமித்த மனநிலையாக இருக்கிறது.

ஓய்வு, உறக்கமற்று இரவு பகல் பாராது அல்லலுற்று காவல் காக்கும் பணியில் ஈடுபடும் காவலர்கள் படும் பாடுகளும், இன்னல்களும் சொல்லி மாளாதவை. மற்ற அரசு ஊழியர்கள் போல சுதந்திரமான வாழ்க்கையோ, அமைதியான வாழ்வியலோ, வார இறுதியில் விடுமுறையோ வாய்க்கப்பெறாது அலைக்கழிப்பிற்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகிறபோதும் கடமை தவறாது காவல் பணியைச் செய்யும் அவர்களது உழைப்பு மகத்தானது. சமூக அமைதிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டு களத்தில் நிற்கும் காவல்துறை பெருமக்கள் பணிச்சுமை தரும் மன அழுத்தம் தாங்காது தற்கொலை செய்துகொள்வதும், காவல் பணியில் ஈடுபடும்போதே தாக்குதலுக்குட்பட்டு கொலை செய்யப்படுவதும் தொடர் கதையாக வருவது பெரும் மனவேதனையைத் தருகிறது. ஆகவேதான், காவல்துறையினருக்கு ஊதிய உயர்வும், வார விடுமுறையும் தர வேண்டும் என்பதை நெடுநாட்களாக வலியுறுத்தி வருகிறோம்.

துணை ஆய்வாளர் வில்சன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்தி அவரது கொலைக்குக் காரணமான குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும், இக்கொலையை மையமாக வைத்து மதத்துவேசத்தில் ஈடுபட முயலும் மதவாத அமைப்புகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் இருக்க சமூக நல்லிணக்கமும், அமைதியும் நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம் /தியாகராயநகர் தொகுதி
அடுத்த செய்திதமிழர் உள்ளங்களிலும், இல்லங்களிலும், பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்! – சீமான் வாழ்த்து