சமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடல் – 2020 | நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறை

6

சமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடல் – 2020 | நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறை

இன்று 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு தாம்பரம், சி.எஸ்.ஐ. தேவாலயம் எதிரிலுள்ள அன்னை அருள் திருமண அரங்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக “சமூக ஊடக ஆர்வலர்கள் ஒன்றுகூடல்-2020” நிகழ்வு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

  1. இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் அடிநாதமாக விளங்கும் மதச்சார்பின்மை எனும் மகத்தான கோட்பாட்டினை அடியோடு தகர்த்து, நாடு முழுமைக்கும் வாழும் இசுலாமிய மக்களைத் தனிமைப்படுத்தி அச்சுறுத்தும் நோக்கோடு கொண்டு வரப்பட்டிருக்கிற குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை (CAA) நாம் தமிழர் கட்சி வன்மையாக எதிர்க்கிறது. இச்சட்டத்திருத்தம் இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், பன்முகத்தன்மைக்கும் ஊறு விளைவிக்கும் கொடுஞ்சட்டமெனக் கண்டிக்கிறது. இதன் நீட்சியாக இருக்கிற தேசியக் குடிமக்கள் பதிவேட்டையும் (NRC), தேசிய குடிமக்கள் பதிவையும் (NPR) ஒருபோதும் கொண்டு வரக்கூடாது எனவும், நாடு முழுமைக்கும் போராடி வருகிற மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை வலியுறுத்துகிறது.
  1. நாம் தமிழர் கட்சி முன்வைக்கிற ஆகச்சிறந்த கருத்தியலையும், அறம்சார்ந்த உயிர்மநேய அரசியலையும், ஒப்பற்ற உயர்நெறி கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் தயங்கி நின்றபோது இணையத்தில் இயங்கும் கடைக்கோடி மகனுக்கும் கட்சியையும், அதன் கொள்கைகளையும் கொண்டு சேர்த்து மாற்று அரசியல் புரட்சிக்கு விதை தூவிடப் பேருதவி புரிந்தது சமூக வலைத்தளங்களில் இயங்கும் இனமானத்தமிழர்களென்றால் அது மிகையல்ல! வெறுமனே கேளிக்கைகளிலும், பொழுதுபோக்குகளிலும், அரட்டைகளிலும், வீணான விவாதங்களிலும் காலம் கழிக்காது இன விடுதலைக்கான ஊடகம் கட்டுகிற பெரும்பணியில் தங்களைப் பங்காளர்களாக ஈடுபடுத்திக்கொண்டு அயராது பணியாற்றி கட்சியின் கருத்தியலைக் கொண்டு சேர்த்திட தன்னார்வத்தோடு தொண்டு புரிந்த யாவருக்கும் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப்பாசறை தனது நன்றிகளையும், வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறது.
  1. 2021ஆம் ஆண்டு நடக்கவிருக்கிற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துக் களமிறங்கும் நாம் தமிழர் கட்சி 117 தொகுதிகளில் ஆண்களையும், 117 தொகுதிகளில் பெண்களையும் களமிறக்கி புதிய அரசியல் வரலாறு படைக்கவிருக்கிறது. இத்தோடு, நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் செயற்பாட்டு வரைவும் புதுப்பிக்கப்பட்டு, அதன் மேம்படுத்தப்பட்ட வடிவம் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது. அதுசமயம், கட்சியின் காலத்தேவையை வலியுறுத்தும்விதமாக தேர்தலுக்கான ஒருமித்த ஊடகப்பரப்புரையும், கட்டுக்கோப்பான ஒருங்கிணைவும் மிக அத்தியாவசியமாகிறது. அதற்காகத் தன்னார்வத்தோடு இணையத்தில் இயங்கும் கட்சியினரையும், கட்சியின் ஆதரவாளர்களையும் ஒருங்கிணைக்க வேண்டியதும், அதன்மூலம் வலிமைமிக்க பரப்புரைக்களத்தை உருவாக்க வேண்டியதும் இணையவெளியில் இயங்கும் ஒவ்வொருவரின் முதன்மைக்கடமையாகும். அதுசமயம், சமூக வலைத்தளங்களில் இயங்கும் ஒவ்வொருவரும் தங்கள் மூலம் குறைந்தது தலா 1,000 வாக்குகளையாவது பெற்றுத்தந்து கட்சியின் வெற்றிக்கு உழைக்க இந்நாளில் உறுதியேற்க வேண்டும் எனவும், இணையவெளியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி நாம் தமிழர் கட்சியை அரியணையில் ஏற்றிட அயராது அரும்பாடாற்றி உழைக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை அறைகூவல் விடுக்கிறது.
  2. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 24 அரசுப்பள்ளிகளில் பயிலும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டப் பிள்ளைகளுக்கு காலை சத்துணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிற தமிழக அரசு, அதனை மதச்சார்பு கொண்ட ஒரு தனியார் அமைப்புக்குத் தாரை வார்த்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. மதிய உணவு வழங்குவதை தமிழக அரசே தொய்வின்றி நடத்தி வரும் நிலையில் காலை உணவு வழங்கும் திட்டத்தை தனியார் நிறுவனத்திடம் வசப்படுத்துவது நிர்வாகச்சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் மிகமோசமான முன்னுதாரணமாகும். இது ஒட்டுமொத்தமாகப் பள்ளிகளில் உணவு வழங்கும் திட்டத்தையே தனியார்மயமாக்க முனையும் சதிச்செயலின் முன்நகர்வே! பள்ளிகளில் உணவு வழங்கும் இத்திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் அது ஏற்படுத்தப்பட்டதற்குரிய நோக்கமே முழுமையாக சிதைந்துபோகும் பேராபத்து நிறைந்திருப்பதால், அட்சயப் பாத்திரம் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும், காலை உணவு வழங்கும் திட்டத்தை அரசே ஏற்று செயற்படுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை வலியுறுத்துகிறது.
  1. எளிய மக்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் ஊடகமாக, அடித்தட்டு மக்களின் அறச்சீற்றத்தையும், உள்ளக்குமுறலையும் வெளிக்காட்டும் பொதுவெளியாக இருக்கிற சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்வதையே முடக்கி, கருத்துச்சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் 66 ஏ சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு ரத்து செய்தபோதும் அப்பிரிவின் கீழ் நாடு முழுமைக்கும் வழக்குத் தொடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநில அரசாங்கங்கள் தங்களது காவல்துறையினருக்கு வழிகாட்ட உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அறிவுறுத்தியும் அதனை மாநில அரசுகள் கடைப்பிடிக்காதிருப்பதும், ஆட்தூக்கிச் சட்டமான தேசிய முகாமைச் சட்டத்தில் (NIA) இணையக் குற்றங்களை உள்ளடக்கியிருப்பதும் சனநாயகத்தின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்கும் பேராபத்தாகும். இத்தோடு, இயல்பு நிலை திரும்பிவிட்டதாகக் கூறிவிட்டு, காஷ்மீரில் சமூக வலைத்தளங்களை முடக்கி வைத்திருப்பதும், அங்கு 3 ஜி மற்றும் 4 ஜி சேவையைப் பெற முடியா வண்ணம் தடுத்து வைத்திருப்பதும், வி.பி.என் சேவைகளைப் பயன்படுத்துவோரைக் கைதுசெய்வதும் காஷ்மீரிய மக்களை அடக்கி ஒடுக்கும் அரசப்பயங்கரவாதமாகும். ஆகவே, மக்களின் கருத்துரிமையைப் பறிக்கும் இக்கொடுஞ்செயல்களும், கொடிய சட்டங்களும் முழுமையாக விலக்கப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை வலியுறுத்துகிறது.