சத்தியவாணி முத்து நகர் மக்கள் அப்புறப்படுத்துவதை நிரந்தரமாக நிறுத்துக! – சீமான் கண்டனம்

174

அறிக்கை: மண்ணின் மக்களை பூர்வீக நிலத்தைவிட்டு வெளியேற்றுவதுதான் பெருநகர வளர்ச்சியா? சத்தியவாணி முத்து நகர் மக்கள் அப்புறப்படுத்துவதை நிரந்தரமாக நிறுத்துக! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

சென்னை, அண்ணாசாலையில் இருக்கும் சத்தியவாணி முத்து நகரில் வசித்து வருகிற மண்ணின் மக்களை அவர்களின் விருப்பத்திற்கும், உணர்வுக்கும் மாறாக வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி அகற்றி சென்னைக்கு வெளியே ஒதுக்குபுறமாகத் தள்ள முனையும் தமிழக அரசின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. சென்னையின் பூர்வக்குடி மக்களை அவர்களது வாழ்விடத்தைவிட்டு முழுவதுமாக வெளியேற்றி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க முனைகிற கொடுஞ்செயலைத் தமிழக அரசு தொடர்ச்சியாகச் செய்துவருவது மிகப்பெரும் கொடுஞ்செயலாகும். மண்ணின் மக்களுக்கு எதிரான இவ்வகைச் செயல்கள் யாவும் மக்களாட்சித் தத்துவத்திற்கே எதிரான மாபாதகமாகும்.இது இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. பெருநகர வளர்ச்சி என்கிற பெயரில் மண்ணின் மக்களை நிலத்தைவிட்டு வெளியேற்றிவிட்டு, வடமாநிலத்தவர்களைக் குடியேற்றி தமிழர் அல்லாதோரின் ஆதிக்கத்தை வளர்த்து விடுகிற இப்போக்கு பேராபத்தானதாகும்.

காலங்காலமாக வாழ்ந்து வருகிற மக்களை, ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ எனக்கூறி அப்புறப்படுத்த முனைகிறது அரசு. ஆதித்தமிழர்களுக்கென வெள்ளையர் காலத்தில் அளிக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் அவர்கள் வசம் இருந்திருந்தால் அவர்கள் ஏன் இந்நிலத்தில் வாழப் போகிறார்கள்? இம்மக்களை ஆக்கிரமிப்பாளர்களென்று கூறி அவர்களது குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்துகிற அரசு, அதே போல பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்தவர்களையும் அப்புறப்படுத்தி அந்நிலங்களை மீட்டெடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்க முயலுமா? எனும் கேள்விக்கு இதுவரை பதிலிலில்லை.

ஓரிரு ஆண்டுக்கு முன்பு சாலை விரிவாக்கப்பணி என்று சொல்லி எண்ணூர் விரைவுச்சாலையில் கடற்கரையோரம் இருந்த வீடுகளையெல்லாம் இடித்துவிட்டு அங்கிருந்த மக்களை அவ்விடத்தைவிட்டு வெளியேற்றினார்கள். சிந்தாதிரிப்பேட்டை, ஐந்து குடிசைப்பகுதியிலுள்ள மக்களை அப்புறப்படுத்தி வெளியேற்றினார்கள். அதனைப் போலவே, தற்போது சத்தியவாணி முத்து நகரில் வாழும் பூர்வக்குடிகளையும் காவல்துறையின் துணையோடு அடக்கி ஒடுக்கி அச்சுறுத்தி வெளியேற்ற முனைகிறார்கள். அவ்வாறு வெளியேற்றப்படும் மக்கள் கல்லுக்குட்டை, செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு மாற்றப்பட்டு எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

ஐ.நா. அவையின் வரையறையின்படி, 50 ஆண்டுகளுக்கு மேலாக ஓரிடத்திலேயே மக்கள் நீடித்து நிலைத்து வசித்து வந்தால் அவர்களது குடியிருப்புகளுக்கு மாற்றாக, புதிய குடியிருப்புகள் கட்டப்படுகிறபோது ஒவ்வொருவருக்கும் தலா 450 சதுர கிலோமீட்டர் வீதம் ஒதுக்க வேண்டும் என்கிறது விதி. இங்கு அதற்கு நேர்மாறாக, 250 சதுரகிலோ மீட்டரை அதுவும் அவர்களது வாழ்விடத்திற்குத் தொடர்பற்ற இடத்தில் கொடுக்கிறது அரசு. இது ஐ.நா.அவையின் விதிகளுக்கு முற்றிலும் எதிரானது.

சென்னையின் மைந்தர்களான அடித்தட்டு உழைக்கும் மக்கள் அதிகப்படியாக வாழும் பகுதிகளில்தான் இவையாவும் நடந்தேறுகிறது. பல தலைமுறைகளாக அந்நிலத்தைத் தங்களது பூர்வீகமாகக் கொண்டு நிலைபெற்று நீடித்து வாழும் அம்மக்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தொழில் அவர்களது வாழ்விடத்தை ஒட்டியே இருக்கிறது. அவர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றும்போது அவர்களது வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டு அவர்களின் பொருளாதாரச்சூழல் மிகவும் மோசமான நிலையை எட்டுகிறது. மாற்றுக்குடியிருப்புகளையும், வாழ்வாதாரத்திற்கான பொருளாதார வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தராது நிலத்தைவிட்டு அம்மக்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்துவது அப்பட்டமான மக்கள் விரோதமாகும்.

அடித்தட்டு பொருளாதாரப் பின்புலத்தைக் கொண்டு வாழும் இம்மக்கள் யாவரும் அன்றாடங்காய்ச்சிகளாகவும், கூலித்தொழிலாளர்களாகவுமே இருக்கிறார்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் அவர்களின் வாழ்விடங்களுக்கு அருகாமையிலேயே இருந்தால் மட்டுமே அவர்களால் எவ்விதச் சிரமமுமின்றி வாழ்க்கையினை நகர்த்த முடியும். ஆனால், அதனைச் செய்யாது அவர்களுக்கே தொடர்பேயில்லாத பகுதியில் இடம் ஒதுக்கப்படும்போது அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிப்படைகிறது. கல்லுக்குட்டை, செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளிலிருந்து பிழைப்பிற்காக சென்னை மாநகருக்குள் அவர்கள் வந்து செல்வது என்பது சாத்தியமில்லை. ஏற்கனவே, சென்னையிலிருந்து கல்லுக்குட்டைக்கும், செம்மஞ்சேரிக்கும், கண்ணகி நகருக்கும், பெரும்பாக்கத்திற்கும் மாற்றப்பட்ட மக்கள் அங்கு சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏதுவுமற்று, மிகவும் சுகாதாரமற்ற முறையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வாழ்வாதாரத்தொழிலே பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சத்தியவாணி முத்து நகர் மக்களையும் அங்கு கொண்டு செல்வது வதை முகாமில் அடைப்பது போன்றதாகும். இதனை வலியுறுத்தியே அம்மக்கள் தங்களது வெளியேற்றத்திற்கெதிராகப் போராடியிருக்கிறார்கள். அவ்வாறு போராடியவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டதோடு, அதற்கெதிராகக் களத்தில் நின்ற தம்பி இசையரசு போன்றவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பது காட்டுமிராண்டித்தனமானது. அத்தகையத் தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். சத்தியவாணி முத்து நகரில் படிக்கும் பிள்ளைகளின் படிப்பிற்காக மக்களின் குடியிருப்புகள் அகற்றப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தமிழக அரசு கூறியிருந்தாலும் இது போதுமானதல்ல! வீடுகளை இடித்து அவர்களை வெளியேற்றும் பணியினை முழுமையாகக் கைவிட்டு, அவர்களது வாழ்விடத்திற்கு அருகாமையிலே மாற்றுக்குடியிருப்புகளை ஏற்படுத்தித் தந்து அவர்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசைக் கோருகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநாம் தமிழர் ஆஸ்ட்ரேலியா – மெல்போர்ன் பொறுப்பாளர்கள்-2019
அடுத்த செய்திசுற்றறிக்கை: பொதுக்குழுக் கூட்ட அழைப்பு தொடர்பாக | நாம் தமிழர் கட்சி