அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளையொட்டி ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்க! – சீமான் வலியுறுத்தல்

31

அறிக்கை: சீக்கியர்க்கு விடுதலை! தமிழர்க்குச் சிறையா? அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளையொட்டி ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்!
– சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக்கின் 550ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி 550 சிறைக்கைதிகளை விடுதலை செய்யப்போவதாக பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. 1970களில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு தடாச் சட்டத்தின் கீழ் 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தண்டனை அனுபவித்து வரும் 8 சிறைவாசிகளை விடுதலை செய்யவும், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங்கின் படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலுள்ள பல்வந்த் சிங் ரஜோனாவின் மரண தண்டனையை வாழ்நாள் சிறையாக மாற்றவும் முடிவெடுத்துள்ள அம்மாநில அரசு, அதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்புதலைப் பெற்றுள்ளதன் மூலம் இதனைச் சாத்தியப்படுத்த இருக்கிறது.

பத்தாண்டுக்கு மேல் வாடும் சிறைவாசிகளை மானுடநேயத்தின் அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி நீண்டநெடுங்காலமாக நாம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக 550 சிறைவாசிகளை குருநானக்கின் பிறந்த நாளான நவம்பர் 29 அன்று விடுதலை செய்ய பஞ்சாப் அரசு முன்னெடுப்புகளைச் செய்துகொண்டிருப்பது மிகச் சரியான முன்நகர்வு. அதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. அதேநேரம், தடா சட்டத்தின் கீழ் மிக முக்கிய வழக்குகளில் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பல்வந்த் சிங் உள்ளிட்ட 9 சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரும் பஞ்சாப் அரசின் கோரிக்கையை ஏற்று 14 நாட்களிலேயே அதற்கு ஒப்புதல் அளித்திட்ட மத்தியில் ஆளும் பாஜக அரசு, பேரறிவாளன், சாந்தன், முருகன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய எழுவரின் விடுதலைக்கு எட்டுகோடித் தமிழ்மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருக்கும் தமிழக அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி இன்றோடு 389 நாட்களைத் தொட்டிருக்கும் நிலையிலும் அதற்குத் தமிழக ஆளுநர் ஒப்புதலைத் தர மறுத்து வருவதும், மத்திய உள்துறை அமைச்சகம் கள்ளமௌனம் சாதித்து வருவதும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரும் அநீதியாகும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட சீக்கியர்களின் விடுதலைக்காக உடனடியாக ஒப்புதல் தந்திட்ட மத்திய உள்துறை அமைச்சகம், பயங்கரவாதச் சதிச் செயல் அல்ல என உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கீழ் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் எழுவரையும் விடுதலை செய்ய மறுத்து தமிழர்களை வஞ்சித்து வருவது தமிழ்த்தேசிய இனத்தின் மீதான இனப்பகையின் விளைவாக நடப்பவையே என்பது தெளிவாகிறது.

பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங் படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இப்போது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டிருக்கும் பல்வந்த் சிங் ரஜோனா எந்த இடத்திலும் தனது குற்றத்தை மறுக்கவோ, தவறு நிகழ்ந்துவிட்டதாகக் குற்றவுணர்ச்சி அடைந்து தனது தண்டனைக்கெதிராக மேல்முறையீடு செய்யவோ இல்லை. மாறாகத், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அதனைத் தனது பெருமையென அறிவித்தவர். அவரது தண்டனைக் குறைப்புக்கும், மற்ற எட்டு பேரின் விடுதலைக்கும் எவ்விதத் தயக்கமுமின்றி உடனடியாக ஒப்புதல் தந்திருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். அதேநேரத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கை எடுத்துக் கொண்டால் எழுவரும் குற்றமற்றவர்கள்; எவரையாவது தண்டிக்க வேண்டும் என்கிற பொதுப்புத்திக்கும், ஆளும் வர்க்கத்தின் சதிச்செயலுக்கும் இரையாக்கப்பட்டவர்கள். இவ்வழக்கில் தம்பி பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த மத்தியப் புலனாய்வு அதிகாரி தியாகராஜன், பேரறிவாளனின் வாக்குமூலத்தைத் தான் திருத்தியதாகவும், தான் அவ்வாறு செய்யாதிருந்திருந்தால் பேரறிவாளன் அன்றே விடுதலையாகியிருப்பார் எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் பிராமணப்பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார். இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதியரசர் கே.டி.தாமஸ், எழுவரும் விடுதலைக்குத் தகுதியானவர்கள் என்பதைத் தெளிவுபட பல்வேறு தருணங்களில் உரைத்திருக்கிறார். விசாரணை வளையம் விரிவடையாததும், சில முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு வழக்கின் விசாரணையில் விலக்கு அளிக்கப்பட்டதையும் தெரிவிக்கிறார் இவ்வழக்கின் விசாரணை அதிகாரி ரகோத்தமன். இவ்வாறு இவ்வழக்கில் சனநாயக மரபுகள் யாவும் மீறப்பட்டு, சட்டவிதிகள் யாவும் தளர்த்தப்பட்டு எழுவரும் சிக்க வைக்கப்பட்டார்கள் என்கிற வரலாற்று உண்மையை யாவரும் தற்போது உணரத் தொடங்கிவிட்டார்கள். தடா எனும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு வரும் சீக்கியர்களை விடுதலை செய்ய ஒப்புக்கொண்ட மத்திய அரசு, தடாச் சட்டம் இவ்வழக்கிற்குப் பொருந்தாது. இது ஒரு பயங்கரவாதச் சதிச்செயல் அல்ல; பழிவாங்கும் போக்கோடு நிகழ்த்தப்பட்ட சாதாரண கொலை வழக்குதான் என உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ராஜீவ் காந்தி வழக்கிலுள்ள எழுவரையும் விடுதலை செய்ய மறுப்பது சகித்துக்கொள்ள முடியாத சனநாயகப் படுகொலை. சீக்கியர்களுக்கு ஒரு நீதி! தமிழர்களுக்கு ஒரு நீதி எனக் காட்டப்படும் இத்தகையப் பாகுபாடு, சட்டத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் மக்களுக்கு இருக்கிற நம்பகத்தன்மையை முழுமையாகக் குலைத்துவிடும் பேராபத்து இருக்கிறது.

எனவே, இவ்விவகாரத்தில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வரைப்போல தமிழக முதல்வரும், மத்திய அரசிற்கு உரிய அரசியல் அழுத்தமும், நிர்பந்தமும் கொடுத்து அதன்மூலம் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று அண்ணல் காந்தியடிகளின் 150வது பிறந்த நாளையொட்டி எழுவரின் விடுதலையை சாத்தியப்படுத்த முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: பெருந்தலைவர் காமராசர் 44ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்