ரோகித் வெமுலாவின் மரணம் இந்துத்துவாவின் நரபலி – நாம் தமிழர் மாணவர் பாசறை கண்டனம்

35

ரோகித் வெமுலாவின் மரணம் இந்துத்துவாவின் நரபலி: தீண்டாமையையும், ஏற்றத்தாழ்வையும் கட்டிக்காக்கும் மத்திய பல்கலைக்கழகங்களை மாநில அரசுகளின் வரம்புக்குள் கொண்டு வரவேண்டும்.
– நாம் தமிழர் மாணவர் பாசறை அறைகூவல்

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த ரோகித் வெமுலா, ஐதராபாத் மத்திய பல்கழைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்படிப்பைப் படித்து வந்தார். கல்லூரியில் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பில் இயங்கிவந்த ரோகித், இந்துத்துவத்தின் கோர முகத்தைத் தோலுரிக்கும் ‘முசாபர்நகர் பாக்கிஜே’ எனும் ஆவணப்படத்தைத் தனது நண்பர்களுடன் கல்லூரி வளாகத்துக்குள் திரையிட்டுள்ளார். மேலும், யாகூப் மேனன் தூக்குக்கு எதிராகப் பரப்புரைகளையும் செய்துள்ளார். இதன்மூலம், வெறுப்புணர்வு அடைந்த ஆர்.எஸ்.எஸ்.சின் அகிலப் பாரதிய வித்தியார்த்திப் பரிஷத் (ஏ.பி.வி.பி) இந்துத்துவ அமைப்பானது அம்பேத்கர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களைத் தாக்கியதாகப் பொய்க் குற்றசாற்று ஒன்றைப் புனைந்தது. இதன்மூலம், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, ‘ஐதராபாத் பல்கலைக்கழகம் தேசவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது’ என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணிக்குக் கடிதம் எழுதினார். இதனால், ரோகித் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டு வளாகப் பகுதிகளில் பிரவேசிக்ககூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். பல்கலைக்கழக வளாகம், விடுதி, நூலகம், வகுப்பறை என எங்கும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், அவர்கள் வெட்டவெளியில் கொட்டகை அமைத்து 15 நாள்களுக்கு மேலாகத் தங்கிப் போராடியிருக்கிறார்கள். ஏற்கனவே, ஆராய்ச்சி உதவித்தொகை நிறுத்தப்பட்டுப் பொருளாதார நெருக்கடியில் சிரமப்பட்டு வந்த ரோகித் தொடர்ந்து இழைக்கப்படும் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டு கடந்த சனவரி 17 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நண்பரின் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை என்பது இந்தச் சமூகமும், அதன் ஒரு அங்கமும் நிகழ்த்தும் கொலை என்பது மறுக்கமுடியாத உண்மை. தொடர்ந்து இதுபோன்ற மத்திய பல்கலைக்கழகங்களில் அகாலமரணங்கள் நிகழ்வதும், அந்த நேரங்களில் கண்டனம் எழுவதும் பின்பு மறந்துவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. இங்கு ஈழ மக்கள் துயர்துடைக்க, இனப்படுகொலைக்குத் துணை நின்ற அரசுகளைக் கண்டித்து அப்துல் ரவூப்பும், முத்துக்குமாரும் செய்யத் துணிந்ததையேதான் ரோகித்தும் செய்துள்ளார். இதை முட்டாள்தனம் என்றோ, பயம் என்றோ, மனநோய் என்றோ பிதற்றுவது மடமை. எளிய குடும்பப்பின்னணியில், ஒரு தனியார் நிறுவனக் காவலரான தந்தைக்கும், வீட்டிலிருந்து தையல் தொழில் செய்யும் தாய்க்கும் பிறந்த ரோகித், தனது அறிவுக் கூர்மையாலும், மனம்தளராது உழைப்பாலும் பள்ளி கல்லூரிகளில் படித்து மேற்படிப்பிற்காக ஐதராபாத் மத்திய பல்கழைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு வரை பயின்றிருக்கிறார். அவரது இறுதிக்கடிதம் வாழ்வின் மீதான அவரின் நம்பிக்கையையும், ஆங்கிலப் புலமையையும் பறைசாற்றுகிறது. அப்பேர்பட்ட அறிவுத்தெளிவுள்ள ரோகித் போன்றவர்களே தூக்கிட்டுத் தற்கொலை செய்வதற்கான சூழல் மத்திய பல்கலைக்கழகங்களில் நிலவுவது என்பதே இந்நாட்டிற்கான அவமானம். கிராம பின்னணியில் வளர்ந்த அறிவில் சிறந்த ஒருவனை மரணத்தை நோக்கித்தள்ளும் அளவிற்கு மன உளைச்சலையும், வேதனையையும் பரிசளிக்கும் இந்த மத்திய பல்கலைக்கழகங்களின் மர்மங்கள் விவாதப் பொருளாக்கியிருக்கிறது. பல்கலைக்கழக நிர்வாகமும், ஆளும் வர்க்கமும் அறிவுத்தளத்தில் சிறந்து விழங்கும் பட்டியல் மற்றும் பிற்படுத்தபட்ட மாணவர்களைக் குறிவைக்கும் அவலநிலை தொடர்கிறது. சாக்குப்பையில்தான் அமர வேண்டும் என அம்பேத்கருக்குப் பள்ளியில் நடந்த தீண்டாமைக்கொடுமைகளின் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியே, பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளே ரோகித்தை தங்கவிடாமல் விரட்டிய இந்த நிகழ்வு. ‘இந்தியா ஓர் அமைதியான தேசமாக வேண்டுமானால் சாதிகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்’ என்றார் அண்ணல் அம்பேத்கர். ஆனால், ‘அகன்ற பாரதம்’ அமைக்கப்போராடுகிற இந்துத்துவா கும்பல்கள் இம்மண்ணில் அமைதி நிலவவிடாது தீண்டாமைகளையும், சாதியக்கொடுமைகளையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன என்பதற்கான சரியான உதாரணம் இந்த மரணம். இந்துத்துவாவை அம்பலப்படுத்தியதற்காகக் கோவிந்த் பன்சாரேவும், கல்புர்கியும் எப்படித் திட்டமிட்டு கொலைசெய்யப்பட்டார்களோ அதைப்போல, இந்துத்துவாவின் கொலைவெறிச்செயலின் நவீனவடிவம்தான் ரோகித்தின் தற்கொலையும். இந்த மரணத்தை இந்திய, இந்துத்துவச் சமூக அமைப்பின் நரபலியாகவே நாங்கள் பார்க்கிறோம். இந்திய வல்லாதிக்கத்தின் அதிகார வெறிக்கு இதுபோல் எத்தனை உயிர்களைக் காவு கொடுக்கப்போகிறோம் என்பதைச் சிந்திக்கும் தருணமிது. இந்திய இந்துத்துவ அரசின் பக்தர்களால் நிர்வகிக்கப்படும் இந்த மத்திய பல்கலைக்கழகங்கள், தனித்தீவுகளாக இயங்கிக்கொண்டு, பிராந்திய நலன்களுக்கும், மக்களுக்கும் முற்றிலும் எதிராக இருப்பதை எப்படி எதிர்கொள்வது?. 27 சதவீத இட ஒதுக்கீட்டை புறம் தள்ளும் இந்த மத்திய அரசின் பல்கலைகழகங்ளில் தான் இவ்விதமான கொடுமைகள் நிலவுகிறது என்பதை நாம் இந்த நேரத்தில் நினைவில் கொள்ளவேண்டும். அரசு இயந்திரத்தின் மீதும், அதன் நிர்வாகத்தின் மீது நிரம்பி வழியும் புகார்களைச் சட்டைசெய்யாமல் மாணவர்களை ஒடுக்குவதற்கு முனையும் இந்த மத்திய அமைச்சர்கள் யாருக்கானவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே, ரோகித்தின் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை நடத்தி, உரியவர்கள் தண்டிக்கப்படவேண்டும். உடனடியாகப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அப்பா ராவ் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். ரோகித்தின் மறைவிற்குக் காரணமானவர்கள் மீது தற்கொலைக்குத் தூன்டியதற்கான வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மூலம் நாடு முழுவதும் இருக்கும் கல்வி நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காவண்ணம் தடுக்கப்பட வேண்டும். மேலும் மத்திய பல்கலைக்கழகங்கள் என்ற அதிகாரத் திமிரில், தான்தோன்றித்தனமாகச் செயல்படும் இந்நாட்டிலுள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களும் மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற சனவரி 29 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திதிருமுருகப் பெருவிழா பதாகைகள் – தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும்
அடுத்த செய்திதஞ்சை மண்டல உழவர் பாசறை செயலாளர் கண்ணை.லெனின் மறைவிற்கு சீமான் கண்ணீர் அஞ்சலி