தஞ்சை மண்டல உழவர் பாசறை செயலாளர் கண்ணை.லெனின் மறைவிற்கு சீமான் கண்ணீர் அஞ்சலி

38

விழியின் இமையாக இருந்து காத்து உபசரித்து உடனிருந்து மகிழ்ந்தவன் இன்று என்னை விட்டு போய்விட்டான்.
————————————————————————-
தஞ்சை மண்டல உழவர் பாசறை செயலாளர் கண்ணை.லெனின் மறைவிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கண்ணீர் அஞ்சலி

———————————————————————-

இன்று காலை எனது ஆருயீர் தம்பியும், நாம் தமிழர் கட்சி உழவர் பாசறை தஞ்சை மண்டலச்செயலாளருமான கண்ணை.லெனின் விபத்தில் சிக்கி அகால மரணம் அடைந்த செய்தி என்னை பெரும் அதிர்ச்சியிலும், மிகுந்த மன வேதனையிலும் வீழ்த்தியுள்ளது.

மாபெரும் தமிழினவிடுதலை வீரனான என் தம்பி லெனின் முள்ளிவாய்க்கால் முற்றச் சுவரை இடிக்க அரசாதிகரம் முனைந்த போது தீரத்துடன் தடுத்து நிறுத்தி போராடி சிறைப்பட்டவன்.ஓய்வறியாத தன் உழைப்பால் தஞ்சை மண்டலத்தில் நாம் தமிழர் கட்சியினை உருவாக்க தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவன்.ஒரு சிற்றூரில் பிறந்தாலும் தமிழகமெங்கும் பரவி வாழ்கிற நாம் தமிழர் உறவுகளின் பேரன்பை பெற்றவன். எம் பெரியத்தகப்பன் நம்மாழ்வார் வழியில் இயற்கை வேளாண்மை புரட்சியை நிகழ்த்திட மாபெரும் ஆவல் கொண்டவன். நான் தஞ்சைக்கு வரும் போதெல்லாம் என்னை விழியின் இமையாக இருந்து காத்து உபசரித்து உடனிருந்து மகிழ்ந்தவன்.

சாதீயமும், பெருங்கட்சிகளின் நெருக்கடியும் கூட என் தம்பி லெனினின் இனமானப் பற்றை அசைக்க முடியவில்லை. ஆனால் தலைக் கவசம் அணியாத சிறுகவனக்குறைவு என் தம்பி லெனினின் விலைமதிப்பற்ற உயிரை இன்று பலி வாங்கி இருக்கிறது. பலமுறை என் தம்பிகளிடத்தில், என் உறவுகளிடத்தில் நான் வேண்டிக் கேட்ட கொண்ட பிறகும் கூட தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் என் தம்பிகள் பயணம் மேற்கொள்ள முனைவது எனக்கு தாங்கொணா மனவேதனையை அளிக்கிறது.

எதனாலும் ஈடு செய்ய முடியாத என் தம்பி லெனின் போன்ற போராளிகளின் இழப்பு ஒரு சிறிய கவனக்குறைவால் ஏற்பட்டு விடுவது என்பது சகிக்க முடியாதது. இனிமேலாவது நாம் தமிழர் உறவுகள் தலைக்கவசம் அணிந்துதான் இரு சக்கர வாகங்களில் பயணிக்க வேண்டும் என இத்தருணத்தில் நான் என் உறவுகளிடத்தில் கோருகிறேன்.

இனி லெனின் இல்லாத தஞ்சையை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.என் ஆருயிர்த் தம்பி லெனின் அவர்களை இழந்து வாடும் உற்றார்,உறவினர், நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு எனது நெஞ்சார்ந்த ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் தம்பி இனமானப் போராளி கண்ணை லெனின் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக என் புகழ்வணக்கத்தை செலுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி,

முந்தைய செய்திரோகித் வெமுலாவின் மரணம் இந்துத்துவாவின் நரபலி – நாம் தமிழர் மாணவர் பாசறை கண்டனம்
அடுத்த செய்திதமிழ்மொழி காக்கும் போரினிலே இன்னுயிர் ஈந்த ஈகிகளுக்கு வீரவணக்கம்