பொதுமக்களுக்கு கழிவறை கட்டுவதற்கு சீமான் உதவி – காவல்துறையினர் எதிர்ப்பு

75

நாம்தமிழர் கட்சி சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தொடர்ந்து 18 நாட்களுக்கு மேலாக சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார். அவ்வாறு நிவாரணப்பொருட்கள் வழங்கும்போது மதுரவாயல் அருகேயுள்ள மேட்டுக்குப்பம் பகுதியில் வாழும் மக்களையும் சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார். அப்போது அங்கிருந்த மக்கள், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்கு வாழ்ந்து வருவதாகவும், பக்கத்திலே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதால் தாங்கள் கட்டி வைத்திருந்த கழிப்பறைகளைக் இடித்துவிட்டதாகவும், இதனால், அன்றாடம் காலைக்கடனைக் கழிக்கக்கூட கழிப்பறைகள் இல்லாது பெண்பிள்ளைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுவதாகவும் கூறினர். இதனைக்கேட்ட சீமான், அவர்களுக்கு கழிப்பறை கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டுச் சென்றார்.

நேற்று (23-12-15) காலை மேட்டுக்குப்பம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் மூலம் கழிப்பறை கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டார் சீமான். அதன்படி, அங்கு கழிப்பறைகள் கட்டுவதற்கான வேலைகள் காலையிலேயே தொடங்கியது. அப்போது, அங்கு வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், இங்கு கழிப்பறை கட்டக்கூடாது என ஜீவா என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகக் கூறினார். அதனையும் மீறி நாம் தமிழர் கட்சியினர் கழிப்பறைகளைக் கட்டுகிற வேலையில் ஈடுபட்டனர். பிறகு, 50க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், உயர் அதிகாரிகளும் இடத்திற்கு வந்தனர். உடனே, தகவலறிந்து அந்த இடத்திற்கு விரைந்தார் சீமான்.

‘அங்கு கழிப்பறை கட்டக்கூடாது’ என காவல்துறையினர் கூறவே, ‘ஏரிகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டும்போது வேடிக்கை பார்க்கிற நீங்கள், மக்களுக்கு கழிப்பறைக் கட்டும்போது ஏன் தடுக்கிறீர்கள்? தெருவுக்கு 2 மதுபானக்கடைகள் இருக்கிறது. ஆனால், 2,000 பேர் வசிக்கிற இடத்தில் ஒரு கழிப்பறை கூட இல்லை என்றால், மக்கள் எப்படி வாழ்வார்கள்?’ என்று அவர்களிடம் சீமான் கேள்வியெழுப்பினார். பரபரப்பு அதிகமாகி, பொதுமக்களும் அங்கு கூடவே, சென்னை துணைமேயர் பெஞ்சமின் சம்பவ இடத்திற்கு வந்தார். காவல்துறையினரும். அதிகாரிகளும் சீமானிடத்தில் சமரசப்பேச்சு வார்த்தை நடத்தினர். ‘நாங்களே கழிப்பறைகள் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்கிறோம். அதுவரை, நடமாடும் கழிப்பறையை அமைத்துத் தருகிறோம்’ என்று கூறியதையடுத்து, சீமான் மக்களிடம் கூறிவிட்டு கிளம்பிச்சென்றார்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது,

“35 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்துவருகிற மக்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை. ஆனால், இதன் அருகே கால்வாயை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. பக்கத்திலே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குடியிருப்பு வருவதால், அவர்கள் மொத்தமாக எல்லா இடத்தையும் வாங்கிவிட்டோம் என மக்கள் கட்டிவைத்திருந்த கழிப்பறைகளை இடித்துவிட்டு ஆக்கிரமித்திருக்கிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் சந்திக்க வந்தபோது கழிவறை வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்தார்கள். அதனால், புறம்போக்கு இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கென கழிப்பறையைக் கட்டினோம். அதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகள் மூலம் இடையூறு செய்கிறார்கள்”

இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி நான்காவது நாளாக தேனாம்பேட்டையில் துப்புரவுப்பணி 
அடுத்த செய்திஅரசின் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம்.- சீமான் திட்டவட்டம்