நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர் சந்திப்பில் சீமான்

93

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் சீமான் பேசியதாவது,

ஐயா ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து புதிதாக ஒன்றும் செய்துவிடப் போவதில்லை. அவரைவிட இந்த மண்ணின் பிள்ளைகள் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்வைத்து பன்மடங்கு செயலாற்றி வருகிறோம். எங்கள் மண்ணைச் சேர்ந்தவர்களே எங்கள் மண்ணை ஆள வேண்டும் என்பது அடிப்படைத் தத்துவ நிலைப்பாடு. இது நாங்கள் புதிதாகக் கூறியதல்ல. எங்களது முன்னோர்கள் வகுத்துத் தந்த பாதை.

‘நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்’ என்கிறது தமிழர் மறை திருக்குறள். ‘நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தை பெருங்கூட்டம் நாம் தமிழர் நாம் தமிழர் என்று முரசறிவாய்! குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி கூண்டோடு போயிற்று கொட்டடா முரசம்!’ என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன். ‘கெஞ்சுவதில்லை பிறர்பால் அவர்செயக்கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை! மொழியையும், நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை’ என்கிறார் பாவலலேறு பெருஞ்சித்திரனார். அவ்வாறு எங்கள் முன்னோர்கள் வகுத்தப் பாதையில் நாங்கள் பயணிக்கிறோம். எங்கள் நிலத்தை நாங்கள் ஆள்வது என்பது எங்களது அடிப்படை உரிமை. நாங்கள் ஆளாது பிறர் ஆண்டால் நாங்கள் அடிமை. அடிமையாய் வாழ நாங்கள் ஒருபோதும் தயாராக இல்லை. ரஜினிகாந்த் படங்களில் நடிப்பதிலேயோ, இங்கு வாழ்வதிலேயோ எங்களுக்கு எந்தச் சிக்கலுமில்லை. ஆனால், எங்களை ஆள நினைப்பதைத்தான் வன்மையாக எதிர்க்கிறோம்.

மன்னராட்சிக் காலத்தில் மராத்திய சரபோஜி மன்னர்கள் படையெடுத்து வந்து எங்களது முன்னோர்களை அடக்கியாண்டார்கள். மக்களாட்சிக் காலத்திலே ரஜினிகாந்த் படமெடுத்து வந்து ஆளத் துடிக்கிறார். இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. சனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்றால், அந்த சனநாயகம் எங்கள் மாநிலத்தில் மட்டும்தான் இருக்குமா? காவிரியில் தண்ணீர்கேட்டுப் போராடியபோது கர்நாடகாவில் வாழ்ந்தத் தமிழர்களைத் துரத்தி அடித்து அகதிகளாக விரட்டினார்களே அப்போது எங்கே போனது இந்தச் சனநாயகம்? இன்றைக்குச் சனநாயகம் குறித்து பேசுபவர்கள் அன்றைக்குப் பேசாது எங்கே போனார்கள்? அதனால், ரஜினிகாந்தின் அரசியல் வருகையை கடுமையாக எதிர்ப்போம். அதனை எதிர்த்து அரசியல் செய்வோம். அவர் அரசியலுக்கு வந்து ஒன்றையும் செய்யப்போவதில்லை. நாங்கள் அமைப்பு சரியில்லை என்று கூறியதைத்தான், ‘சிஸ்டம் சரியில்லை’ என அவர் ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார். நாங்கள் அமைப்பில் என்ன மாற்றம் செய்வோம் என்பதை விளக்கியிருக்கிறோம். இந்த அமைப்பை மாற்றுவது குறித்து அவர் ஏதாவது கூறியிருக்கிறாரா?

பெங்களூரில் 90 விழுக்காடு இருப்பது தமிழர்கள்தான். எல்லைப்பிரிப்பில் பெங்களூர் கர்நாடகா வசம்போனது. அங்கு வாழ்கிற தமிழர்களை கன்னடர்கள் என ஏற்கவில்லையே, அவர்களைத் தமிழர்கள் என்றுதானே பார்க்கிறார்கள்? மராட்டியத்தில் 26 இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களை மராட்டியர்களாக ஏற்றிருக்கிறார்களா? அப்புறம் ரஜினிகாந்தை மட்டும் தமிழர் என எவ்வாறு ஏற்க முடியும்? இதனைத்தான், ‘எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே! இங்கு பிறப்பினும் அயலான் அயலானே!’ என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.

அவர் தன்னைத் தமிழர் என இனமாற்றம் செய்துகொள்கிறபோதே நமக்குத் தெரிகிறதே அவரது உள்நோக்கம்? ‘என் மொழி, இனம் என பேசுகிறபோது உனக்கு நடுக்கம் வருகிறதென்றால் உன் அடித்தளத்தை என் தாய்நிலத்தில் கட்டியிருக்கிறாய் என்று பொருள்’ என்று இதனைத்தான் குர்தீஸ் மூஸா கூறுகிறார். சீனப்பேரரசன் சன் சூ, ‘என் தாய்மொழியை என்னைவிட நன்றாகப் பேசுகிறாய் என்றால், என்னை உனக்கு ஆள ஆசை வந்துவிட்டது’ என்கிறார்.

யார் யாரெல்லாம் தமிழர் என்று என்னிடத்தில் கேட்கிறார்கள். காவிரியிலே தண்ணீர் கேட்கிறபோது தமிழர்களாய் பார்த்து அடிக்கிறார்கள். முல்லைப்பெரியாரில் தண்ணீர் கேட்கிறபோது தமிழர்களாய் பார்த்து அடிக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் யாரெல்லாம் தமிழர் என்று தெரிகிறது. இவர்களுக்குத் தெரியவில்லையா? வெள்ளைக்காரர்கள் 300 ஆண்டுகள் இங்கு வாழ்ந்தார்கள். அவர்கள்தான் இந்நாட்டையே கட்டினார்கள். அதற்காக அவர்களை இந்தியர்களாக ஏற்பார்களா?

நல்லவர் ஆண்டால் போதும் என்றால், வெள்ளைக்காரர்களில் ஒருவர்கூட நல்லவர் இல்லையா? அவர்கள்தான் பாராளுமன்றம், சட்டமன்றம் கட்டினார்கள்; அணைகள் கட்டினார்கள்; தந்தியைக் கொண்டு வந்தார்கள்; தொடர்வண்டித்துறையைக் கொண்டு வந்தார்கள். அவர்களை எதற்கு விரட்டினார்கள்? முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குக் நல்லவர்தானே? நல்லவர் ஆண்டால் போதும் எனக் கூறுகிறபோது என்ன சொல்ல வருகிறார்கள்? தமிழர்கள் எவரும் நல்லவர்கள் இல்லை; அவர்கள் எவருக்கும் தகுதியில்லை எனக் கூற வருகிறார்களா? ஆகச்சிறந்தவர்கள் தமிழர்கள்; உலகத்திற்கு அறிவையே கடன் கொடுத்தவர்கள். அறத்தின் வழிநின்று ஆட்சி செய்த இனத்தின் மக்கள் நாங்கள். அதனால், ஆண் மகனெல்லாம் அப்பாவாக ஆகிவிட முடியாது. பெற்றவர்களே நமக்கு அப்பாவாக இருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ரஜினிகாந்த் மௌனமாக இருக்கும்போது கமலஹாசன் பேசுகிறார். கமலஹாசன் மௌனமாக இருக்கும்போது ரஜினிகாந்த் பேசுகிறார். பின்னாளில் இருந்து வேறு யாரோ இயக்குகிறார்கள். ரஜினிகாந்துக்குப் பின்னால் பாஜக இருந்து அதனைச் செய்கிறது. தன்னலமற்று இம்மண்ணுக்காக உழைத்த சிங்காரவேலர், ஜீவானந்தம், காமராசர், கக்கன், முத்துராமலிங்கத்தேவர், செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி. போன்ற மாபெரும் ஆளுமைகளும், தியாகச் செம்மல்களும் வாழ்ந்த நிலமிது. அவர்கள் போலவே தன்னலமற்று மண்ணுக்கும், மக்களுக்குமாக உழைக்க ஒரு தலைமுறைப் பிள்ளைகள் தயாராகி வருகிறார்கள். அதனால், ஒரே நாளில் கட்சியை ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்பதெல்லாம் இனி சாத்தியமேயில்லை.

ஓகிப் புயலால் ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அதுகுறித்து ரஜினிகாந்தின் கருத்து என்ன? முத்தலாக் விவகாரம் குறித்து கருத்து என்ன? மீனவத் தம்பி பிரிட்சோ மரணம் குறித்தும், விவசாயிகளின் மரணம் குறித்தும் வாய்திறக்கவில்லையே.? தங்கை அனிதா குடும்பத்தினரை நேரில் சந்தித்தாரா? மக்களுக்காக மக்களோடு மக்களாக நின்று போராடுபவன்தான் மக்களுக்கானத் தலைவனாக இருக்க முடியும். திரையில் நடித்துவிட்டதால் தமிழர்களை ஆண்டுவிடலாம் என்பதெல்லாம் தமிழர்களை அவர் எவ்வளவு இழிவாகக் கருதுகிறார் என்பதைத்தான் காட்டுகிறது. தமிழர்கள் குறித்து ஒரு குறுகிய மதிப்பீட்டைக் கொண்டிருக்கிறார். அதனால்தான், இந்த எண்ணம் அவருக்கு வந்திருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாகத் திரைப்படத்தில் நடித்துவிட்டார் என்பதினாலேயே அந்தப் புகழ் வெளிச்சத்தைப் பயன்படுத்தி ஒரு இனக் கூட்டத்தை ஆள நினைப்பது ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாதம்

முந்தைய செய்திஇயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவுப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திசுற்றறிக்கை: தமிழர் திருநாள் பொங்கல் விழா ஏற்பாடுகள் குறித்து