தங்கை ஹாதியா தனது விருப்பப்படி இறை மார்க்கத்தையும், இல்லற வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ள அரசும், சட்டமும் வழிவிட வேண்டும் : சீமான் வலியுறுத்தல்

105

தங்கை ஹாதியா தனது விருப்பப்படி இறை மார்க்கத்தையும், இல்லற வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ள அரசும், சட்டமும் வழிவிட வேண்டும் : சீமான் வலியுறுத்தல்
மாணவி ஹாதியாவுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேரளாவின் கோட்டயம் மாவட்டம், வைக்கம் ஊரைச் சேர்ந்த தங்கை அகிலா சேலத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தபோது இசுலாம் மதத்தின் மீது பற்றுதல் ஏற்பட்டு மதமாறி தன் பெயரை ஹாதியா என மாற்றிக்கொண்டு, ஷெஃபி ஜஹான் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஹாதியாவின் தந்தை அசோகன், தனது மகளை மதமாற்றம் செய்து தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தச் சதிநடப்பதாகத் தொடர்ந்த வழக்கை ஏற்ற கேரள உயர் நீதிமன்றம் ஹாதியாவின் திருமணத்தை ரத்து செய்ததோடு, அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் உத்தரவிட்டது.
சனநாயக நாடான இந்தியாவில் எவரும் எம்மதத்தையும் தழுவிக்கொள்ளவும், அவ்வழியே வாழ்க்கையைத் தன் விருப்பப்படி அமைத்துக்கொள்ளவும் அவருக்கு முழு உரிமையுண்டு என்பதை ஒரு தனி மனிதனின் அடிப்படை உரிமைகளாக அரசியலமைப்புச் சாசனம் வரையறுக்கிறது. ஆனால், இதற்கு முற்றிலும் முரணான வகையில் கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்தது பெரும் வருத்தத்திற்குரியது. அது இந்நாடு ஏற்றிருக்கும் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், சகோதரத்தன்மைக்கும் குந்தகம் விளைவிக்கக்கூடியதாகும். அதுவும் அவரது அலைபேசியைப் பறித்து அவரது செயல்பாடுகளைக் கண்காணிக்க உத்தரவிட்டது தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கிற அநீதிச் செயலாகும். இதனை எவ்வகையிலும் ஏற்க முடியாது. 24 வயது ஆகும் தங்கை ஹாதியாவுக்குத் தனது சுய வாழ்க்கை குறித்த எவ்வகை முடிவையும் எடுக்க எல்லாத் தகுதியும், உரிமையுமுண்டு. அவர் ஒன்றும் மனப்பிறழ்வு கொண்டவரல்லர்; ஆகவே, அவரது வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள அவர் தேர்ந்தெடுத்த இறைநெறியையையும், இல்வாழ்க்கையையும் தடுத்து இடையூறு செய்வது என்பது சனநாயக நெறியை ஏற்றிருக்கிற ஒரு நாட்டிற்கு ஏற்புடையதல்ல. இசுலாம் என்கிற மதத்தைப் பின்பற்றுவதாலேயே ஒருவர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்கிற மத அடிப்படைவாதச் சிந்தனையானது மிகவும் ஆபத்தான சிந்தனையோட்டமாகும். அதுவே மக்களை மதத்தின் பேரில் துண்டாடும் மதவெறி அரசியலுக்குத் தூபம் போட்டு வளர்க்க உதவுகிறது. ஆகவே, இசுலாம் என்கிற மதத்தைத் தீவிரவாத மதமாகவும், இசுலாமியர்களையெல்லாம் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கும் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. அதனை வன்மையாக எதிர்க்கிறேன். இசுலாத்தை புரிந்துகொண்டு மதமாறிய பின் நடந்த ஹாதியாவின் திருமணத்தை ‘லவ் ஜிகாத்’ என வர்ணித்து, அதற்குத் தீவிரவாத நோக்கம் இருப்பதாகக் கூறும் அவரது தந்தை அசோகனின் குற்றச்சாட்டானது அடிப்படை ஆதாரமற்றது. எவ்வித முகாந்திரமுமில்லாதது. மதத்துவேசத்தினாலும், மத அடிப்படைவாதத்தினாலும் வெளிப்பட்ட பொய் அது.
இக்குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று கேரளக் காவல்துறையின் விசாரணையில் தெரிவித்தப் பின்னும், ஹாதியாவின் திருமணத்தை ரத்து செய்த கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பானது முழுக்க முழுக்கச் சட்டவிரோதமாகும். 18 வயதுக்கு மேல் நிரம்பிய ஒரு இளம்பெண் தனது விருப்பத்தின்பால் மதமாற்றம் செய்துகொள்வதற்கும், வாழ்க்கைத்துணையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும் இருக்கும் அடிப்படை உரிமைகளை மறுத்து அம்மத மாற்றத்திற்கும், திருமணத்திற்கும் உள்நோக்கம் கற்பித்து இயல்பான ஒரு நிகழ்வைத் தீவிரவாதச் செயல்களோடு தொடர்புபடுத்துவது அபத்தமானது. இதற்கு எதிரான உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் இதன் உண்மையறிய NIA என்கிற தேசியப் புலனாய்வு நிறுவனத்திடம் கொடுத்தது மிகப்பெரிய வரலாற்றுப்பிழை. இந்த அபத்தக் குற்றச்சாட்டை விசாரணை என்ற பெயரில் உண்மையாக்கும் முயற்சியில் மத்திய பாஜகவின் கீழ் உள்ள NIA கடுமையாக முயற்சிக்கிறது. கடந்த 27ஆம் தேதி இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்தபோது தங்கை ஹாதியா கேரள காவல்துறையால் அழைத்துவரப்பட்டிருந்தார். NIA சார்பில் பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஹாதியாவின் கணவர் மீது சுமத்தியது. அதை ஆமோதிக்கும் விதமாகக் கேரள அரசும் நடந்துகொண்டது வேதனையளிக்கிறது. சமீபகாலங்களில் பெரும் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடும் கேரள முதல்வர் ஐயா பினராய் விஜயன் தலைமையிலான சிபிஎம் அரசு, NIAவின் குற்றச்சாட்டுகளை மறுக்காமல் மவுனம்காத்து, மேலும் பாஜகவின் மதவாதக் குற்றசாட்டுக்கு வலுசேர்க்கும் விதமாக நடந்துகொள்வது ஏற்புடையதல்ல. தன் மாநிலத்தின் மகளை இப்படி ‘ஆசைவார்த்தைகளால் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார்’ என்று NIA வைக்கும் குற்றச்சாட்டுகளை எதிர்த்து குரல் கொடுக்காமல் அமைதிகாப்பது ஏமாற்றமளிக்கிறது. ஹாதியா கடந்த 11 மாதங்களாகக் கடும் கெடுபிடிகளுக்கிடையில் எந்தச் சுதந்திரமும் இல்லாமல் வாழ்வதாகவும், தனது கணவருடன் வாழ விரும்புவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் முறையிட்டார். அவரின் இந்த விருப்பத்திற்கு மதிப்பளிக்காமல், இடைக்காலத் தீர்ப்பில் தங்கை ஹாதியாவின் படிப்பைத் தொடர மட்டும் ஆணைப் பிறப்பித்திருப்பது எந்தச் சட்டத்திட்டத்தின் அடிப்படையில் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தவேண்டும். இருப்பினும் அவரை அவரது விருப்பத்தின் பெயரில், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு அனுப்பி அவரது பாதுகாப்பை உறுதிசெய்தது சற்று ஆறுதல் அளிக்கிறது. ஹாதியா தனது படிப்பை எவ்வித இடையூறும் இல்லாதவகையில் தொடரவும், அவர் விருப்பம் போல் வாழவும், அவருக்கான பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
முதலில் இசுலாம் என்கிற மதத்திற்கு மாறுவதாலேயே ஒருவர் தீவிரவாதச் செயலில் ஈடுபடக்கூடும் எனும் பொதுப்புத்திக்குள் ஒளிந்திருக்கிற மதத்துவேசத்தைத் துடைத்தெறிய வேண்டும். அதற்கு எங்களைப் போன்ற சனநாயகச் சக்திகள் தொடர்ந்து குரல் கொடுத்துகொண்டிருந்தாலும், அரசுகளின் நிர்வாகச் சீர்திருத்தத்தின் மூலமே சாத்தியப்படுத்தமுடியும். மத்தியில் ஆளும் மதவாத பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியில் கேரள அரசாங்கம் வீழ்ந்துவிடாது, ஹாதியா – ஷெஃபி ஜஹான் பக்கம் நின்று பாதுகாக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, இவ்விவகாரத்தில் ஹாதியாவின் விருப்பப்படி மார்க்கத்தைத் தழுவுவதற்கும், திருமண வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கும் அரசும், சட்டமும் வழிவிட வேண்டும், அதற்குத் தமிழக அரசு துணை நிற்கவேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திஅறிவிப்பு: ஆர்.கே நகர் தேர்தல் பரப்புரைத் திட்டம்: முதல் நாள் | நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திஆர்.கே நகர் தேர்தல் பரப்புரை: நாள் – 01 | வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூடம்