கோவையில் ஆய்வுசெய்த ஆளுநரின் செயல் அதிகார அத்துமீறல், மாநில உரிமையைப் பறிக்கும் செயல் – சீமான் கண்டனம்

66

அறிக்கை: கோவையில் மாவட்ட அதிகாரிகளைக் கொண்டு ஆய்வுசெய்த ஆளுநரின் செயல் அதிகார அத்துமீறல், மாநில உரிமையைப் பறிக்கும் செயல் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

கோவையில் ஆய்வு செய்த ஆளுநரின் செயல்பாடு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கோவையில் பாரதியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அங்குள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகளோடு இணைந்து மாவட்டப் பணிகளை ஆய்வுசெய்திருப்பது அரச நிர்வாகம் கொண்டிருக்கிற சனநாயக மாண்புகளைக் குலைக்கும் நடவடிக்கையாகும். ஆளுநரின் செயல்பாடு நல்ல நோக்கத்திற்காகத்தான் என்பது போலத் தோற்றமளித்தாலும் அது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பது தமிழக அரசியலை உற்றுநோக்கி வருகிறவர்களுக்கு நன்றாகப் புரியும். இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சீர்குலைத்து ஒற்றையாட்சியை நிறுவ அதிகாரக்குவிப்பில் ஈடுபடும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, தங்களது ஆட்சியில்லாத மாநிலங்களில் அத்துமீறுவதும், அதிகாரத்தைத் தவறான வழிமுறைகளில் பயன்படுத்துவமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்குத் தனது கேடயங்களாக மாநில ஆளுநர் பதவியையும், வருமான வரித்துறையையும், அமலாக்கத்துறையையும் பயன்படுத்தி வருகிறது.
மக்களாட்சித் தத்துவத்தை ஏற்றிருக்கிற இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்து நடைமுறையான ஆளுநர் பதவி தேவையற்ற ஒன்றாகவே இருக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்படாத ஆளுநர் தனது அதிகாரத்தினைக் கொண்டு மக்களால் தேர்வுசெய்யப்பட்ட மாநிலத்தின் ஆட்சியினை அரசியல் சாசனத்தின் 356வது பிரிவின் மூலம் கலைத்துவிடலாம் என்பது மக்களாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உறவுப்பாலமாகச் செயல்பட வேண்டிய ஆளுநர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது மாநில உரிமைகளுக்கும், தன்னாட்சித் தத்துவத்திற்கும் ஊறு விளைவிப்பதாகும். மத்திய அரசால் தேர்வுசெய்யப்படும் நியமனப் பதவி என்பதால் மத்திய அரசு தனக்கு இணக்கமாய் அனுசரித்துச் செல்வோரையும், தனது ஆட்டுவித்தலுக்கு இயங்குகிற கைப்பாவைகளையுமே ஆளுநர் பதவிக்கு நியமிக்கும் என்பது வெளிப்படையானதாகும். மத்தியில் ஆளும் பாஜக அரசு தாங்கள் ஆளுகை செலுத்தாத மாநிலங்களில் தங்களது அதிகாரத்தைச் செலுத்த ஆளுநர் பதவியினைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி வருகிறது. காங்கிரசு கட்சி ஆண்டு வரும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குக் கிரண் பேடியைத் துணைநிலை ஆளுநராக நியமித்து அம்மாநில அரசிற்குக் குடைச்சல் கொடுத்து வரும் பாஜக, தற்போது ஆளுநர் பதவி மூலம் தமிழகத்தில் தனது காய்நகர்த்தல்களைச் செய்யத் தொடங்கியிருக்கிறது. அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆளுநர் பதவி எவ்வளவு பெரிய வலிமையான பதவியாக மாறியது என்பதனையும். அதனைக் கொண்டு எவ்வளவு சித்து விளையாட்டுகள் அரங்கேற்றப்பட்டன என்பதனையும் அவ்வளவு எளிதில் எவரும் மறந்துவிட முடியாது.
பொதுவாக ஒரு மாநிலத்தின் ஆளுநர் பதவியின் அதிகாரம் என எதுவும் வரையறுக்கப்படவில்லை. அம்மாநிலத்தின் முதல்வர், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி போன்றோரை நியமனம் செய்யும் அதிகாரமே அவருக்குண்டு. அரசியலமைப்புச் சாசனத்தின் 163வது பிரிவு, ஒரு மாநில ஆளுநரின் பணிகளை நிறைவேற்ற, உதவிசெய்ய, ஆலோசனை வழங்க முதலமைச்சர் தலைமையில் ஒரு அமைச்சரவை இருக்கும் எனக் கூறுகிறது. மேலும், அரசியலமைப்புச் சாசனத்தின் 160, 356, 357 ஆகிய பிரிவுகளின் கீழ் ஆளுநருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டும்தான் அவரால் மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட முடியும் எனவும் தெளிவுபடுத்துகிறது. அப்படியிருக்கையில், ஆளுநரே நேரடியாகக் களஆய்வு செய்வதும், மாவட்ட அதிகாரிகளோடு ஆலோசனை செய்வதும் மாநிலத்தின் சுயாட்சிக்கு எதிரானது. இது தனது அதிகார வரம்பை மீறி அத்துமீறலில் ஈடுபடுவதாகும். மத்திய, மாநில அரசுகளின் திட்டம் குறித்த ஐயங்களைத் தலைமைச் செயலாளரிடமிருந்தோ, துறை சார்ந்த அமைச்சரிடமிருந்தோ அல்லது முதலமைச்சரிடமிருந்தோ அறிக்கையாகக் கேட்டுத் தெளிவு பெறலாம் எனும் வாய்ப்பு இருக்கும்போது ஆளுநரே நேரடியாக ஆய்வு செய்ததும், ஆலோசனை நடத்தியதும் அப்பட்டமான அதிகார வரம்பு மீறலாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இச்செயலை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஆளுநரின் அத்துமீறலைக் கண்டிக்காது அதனை ஆதரித்துப் பேசி நியாயப்படுத்த முயலும் தமிழக அமைச்சர்களின் போக்கானது வெட்கக்கேடானது.
மாநிலத்தில் தன்னாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் அமைவதே இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் உகந்ததென நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. மேலும், அதிகாரப்பரவலை செய்து மத்திய அரசிற்கு இணையான சமனியத் தனியரசாக மாநிலங்களை நிறுவ வேண்டும் எனவும் எடுத்துரைக்கிறது. இத்தகைய காலக்கட்டத்தில், மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதும், அவர்களின் உரிமைகளில் தலையீடுவதுமான போக்கு இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைப்பதாக அமையும். எனவே, தமிழக ஆளுநர் அரசாங்க நிர்வாகத்தில் குழப்பம் ஏதும் விளைவிக்காது தனது அதிகார எல்லையை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் | 13-11-2017
அடுத்த செய்திஅறிவிப்பு: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்தியக் கடற்படையைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்