கலைக்கல்லூரி மாணவர் பிரகாசின் மரணம் நிகழ்ந்து ஒரு மாதத்தைக் கடந்தும் குற்றவாளிகளைக் கைது செய்யாதது ஏன்? – சீமான் கேள்வி

21

அறிக்கை: சென்னை கவின் கலைக்கல்லூரி மாணவர் தம்பி பிரகாசின் மரணம் நிகழ்ந்து ஒரு மாதத்தைக் கடந்தும் குற்றவாளிகளைக் கைது செய்யாதது ஏன்? – சீமான் கேள்வி | நாம் தமிழர் கட்சி

கலைக்கல்லூரி மாணவர் பிரகாசை இழந்துவாடும் அவரது பெற்றோருக்கு நேற்று 27-11-2017 பிற்பகல் 1 மணியளவில் வேலூர் மாவட்டத்திலுள்ள அடுக்கம்பாறை எனும் சிற்றூரில் உள்ள மாணவர் பிரகாசின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதுகுறித்து இன்று (28-11-2017) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை, எழும்பூரில் உள்ள கவின் கலைக்கல்லூரியில் பீங்கான் கலைத்துறையில் இறுதியாண்டு படித்து வந்த மாணவரான தம்பி பிரகாஷ் கடந்த 25-10-2017 அன்று தூக்கிட்டுத் தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். அவர் மரணமடைந்து ஒரு மாதத்தைக் கடந்துவிட்ட நிலையில் இன்னும் அதுகுறித்தான நீதிவிசாரணை மேற்கொள்ளப்படாதிருப்பதும், இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குச் சாதகமாக வழக்கின் போக்கை மாற்ற முனைவதும் பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. மரணத்திற்குப் பிறகான ஒரு மாத காலத்தில் இன்னும் குற்றவாளிகளைக் கைதுசெய்யாது விட்டுவைத்திருப்பது ஏன் என்கிற கேள்வியே இவ்வழக்கில் இழைக்கப்படும் அநீதியைக் காட்டுகிறது. தம்பி பிரகாசின் மரணத்தை வெறுமனே தற்கொலை என்ற வட்டத்திற்குள் சுருக்கிவிட முடியாது. இது சாதிய வன்மத்தோடும், மதவெறிப்போக்கோடும் கல்லூரி நிர்வாகத்தால் நிகழ்த்தப்பட்டப் பச்சைப்படுகொலையாகும். ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் இறந்துபோன தம்பி ரோகித் வெமுலாவுக்கு நிகழ்ந்த சாதியக்கொடுமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் சாதியத்தீண்டாமைகளும், புறக்கணிப்பு நிகழ்வுகளும் தம்பி பிரகாசுக்கு நிகழ்ந்திருக்கிறது. அதுவே அவரைத் தற்கொலைப்பாதையை நோக்கித் தள்ளியிருக்கிறது என்பது மறைக்கவியலா உண்மையாகும்.

வேலூர் மாவட்டத்திலுள்ள அடுக்கம்பாறை எனும் குக்கிராமத்தில் பிறந்த தம்பி பிரகாசு தனது துறையில் சாதிக்க வேண்டும் என்ற மனவுறுதியும், இலட்சியத் தாகமும் கொண்டு தினமும் வேலூரிலிருந்து சென்னைக்குத் தொடர்வண்டியில் பயணித்து வந்து படித்திருக்கிறார். அளப்பெரிய திறமையும், தன்னிரகற்ற உழைப்பையும் கொண்டிருந்ததன் விளைவாக முதல் இரு ஆண்டுகள் சிறந்த மாணவனுக்காகக் கல்லூரியின் விருதையும் பெற்றிருக்கிறார். வரைகலை, டெரகட்டா, மற்றும் பீங்கான் கலையியலில் மிகப்பெரும் அறிவைக் கொண்டிருந்த அவரை அவரது துறைத்தலைவர் ரவிக்குமார் சாதி, மதக்கண்ணோட்டத்தோடு அணுகியிருக்கிறார். திட்டமிட்டுப் புறக்கணித்தல், வாய்ப்புகளை மறுத்தல், மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுப் பிரகாசை கல்விக் கற்கவிடாது பெரும் இடையூறு செய்திருக்கிறார். இதுகுறித்துக் கல்லூரியின் முதல்வர் சிவராசுக்குப் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் துறைத்தலைவர் மீது மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, துறைத்தலைவரின் செயலுக்கு முதல்வரும் துணைபோயிருக்கிறார். இதனால், தனது கல்வியைத் தொடர முடியாமல் போகிறதே என்கிற வேதனையில் மனமுடைந்து போன பிரகாசு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். ஆளுமைகளையும், அறிஞர்களையும், படைப்பாளிகளையும், வல்லுநர்களையும் இச்சமூகத்திற்கு உருவாக்கித் தர வேண்டிய கல்விக்கூடங்கள் கொலைக்களமாகி அவர்களைக் கொலைசெய்கிறது என்பது கல்வி முறையிலுள்ள நிர்வாகச் சீர்கேட்டினையும், பேராபத்தினையும் எடுத்துரைக்கிறது. மேலும், பாடத்திட்டத்தில் மட்டுமல்லாது பயிற்று முறைகளிலும் சீர்திருத்தங்கள் தேவை என்பதைத் தெளிவாய் உணர்த்துகிறது.

மாணவர்களிடையே உடையில்கூடப் பேதம் தெரியக்கூடாது எனச் சீருடையை அறிமுகம் செய்வித்த பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த மண்ணில் ஒரு மாணவர் நவீனத் தீண்டாமையால் தற்கொலை செய்துகொண்டிருப்பது இச்சமூகமே வெட்கித் தலைகுனிய வேண்டிய பெருங்கொடுமையாகும். இதற்குத் தொடர்புடைய கல்லூரியின் நிர்வாகமே முழுமையாகப் பொருட்பேற்க வேண்டும். அடிமை இந்தியாவிலேயே ஒரு அம்பேத்கர் உருவாகிவர முடிந்தபோது, சுதந்திர இந்தியாவிலே அம்பேத்கர் போல மாமேதைகளாக வரவேண்டிய இளந்தளிர்கள் கல்விக்கூடங்களிலே கொலைசெய்யப்படுகிறார்கள் என்பது அவமானகரமானதாகும். அக்கொலைதான் ரோகித் வெமுலா, சேலம் முத்துக்கிருஷ்ணன், அரியலூர் அனிதா, வேலூர் பிரகாசு என நீண்டுக்கொண்டிருக்கிறது.
எந்தவொரு மதத்தையும் பின்பற்றுவதற்கும், தனக்கு விருப்பமான இறையை வழிபடுவதற்கும் இந்திய அரசியலமைப்புச் சாசனம் முழுமையான உரிமையை வழங்கியிருக்கிறது. மேலும் கல்விக்கூடங்களிலே உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாது எனவும் அது போதிக்கிறது. அப்படியிருக்கையில், பிரகாஷ் கிருத்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலே அவரைத் தனிமைப்படுத்தித் தற்கொலைக்குத் தூண்டியது அப்பட்டமான வன்கொடுமை செயலாகும். ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தாலும் சாதிக்க வேண்டும் என்ற பெருங்கனவோடு இரவு பகல் பாராது அயராது உழைத்த தம்பி மனமுடைந்து தற்கொலைப்பாதையைத் தேர்வுசெய்கிறார் என்றால் அவர் எந்தளவுக்குக் காயப்பட்டிருப்பார் என்பதை உணர வேண்டும். தம்பியின் வலியையும், வேதனையையும் இறுதியாக அவர் வெளியிட்டுள்ள காணொளிப்பதிவில் சிந்துகிற கண்ணீரே சொல்லும். நேற்றையதினம் தம்பி பிரகாசின் வீட்டிற்கு ஆறுதல்கூற நேரில் சென்றேன். ஒரு மாபெரும் கலைஞனாக உருவாக வேண்டிய தனது மகனை இழந்துவிட்டு தவிக்கிற அக்குடும்பத்தின் வலியினையும், மனவேதனையையும் போக்க முடியாத கையறு நிலையில் காலம் நம்மைத் தள்ளியிருக்கிறதே என்கிற வெறுமை பெரும் ரணத்தைத் தந்தது. தம்பி பிரகாசின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமானது அல்ல! அது இச்சமூகத்திற்கானது.

எனவே, தம்பி பிரகாசின் மரணத்தை இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாகக் கொலைவழக்காகப் பதிவு செய்து இதற்குக் காரணமான துறைத்தலைவர் ரவிக்குமார், கல்லூரி முதல்வர் சிவராஜ் உள்ளிட்டோரைக் கைதுசெய்ய வேண்டும் எனவும், கவின் கல்லூரியில் இருக்கும் பிரகாஷ் செய்த சிலைகளை அவர் குடும்பத்திடம் ஒப்படைக்கவேண்டும் எனவும், பிரகாசின் குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இல்லாவிடில், தம்பி பிரகாசுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை பெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திசாதி-மத ஒடுக்குமுறையால் கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலை: குடும்பத்தினருக்கு சீமான் நேரில் ஆறுதல்
அடுத்த செய்திகந்துவட்டிக்கு ஆதரவாளன் எனக் குற்றஞ்சாட்டுவதா? – ஜி.ராமகிருஷ்ணனுக்கு சீமான் கண்டனம்!