கடைசிப் பாலகனின் இரத்தம் – கண்களில் நீர் வரவழைக்கும் தீபச்செல்வனின் கவிதை!!

67

கடைசிப் பாலகனின் இரத்தம்

மூட மறுக்கும் பாலகர்களின் கண்களில்
குற்றங்களின் முடிவற்ற காட்சிகள் அசைகின்றன
இறுதியில் எதையோ சொல்ல முயன்றபடியிருக்கும்
மூடாத வாய்களில்
மறைக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஒலிக்கின்றன
இரத்தத்தில் பிறந்து
இறுதிவரையில் இரத்தம் காயாமல்
பிசுபித்தபடி உடல் எங்கும் வழிய
குண்டுகளால்சிதைக்கப்பட்ட பாகங்கள் உதிர
எனது நிலத்து பாலகர்கள் திரிகையில்
இலையான்கள் காயங்களை அரித்து
அவர்களைத் தின்று முடித்தன
எல்லோருடைய கண்களின் முன்பாகவும்
எனது தேசத்திற்கெதிரான போரில்
பாலகர்களை பலியிடும் பொழுது
தாய்மார்களை நோக்கி அவர்கள் அழுகையில்
தாய்மடிகளில் இரத்தம் பெருகியிருந்தது
பெண்குறியிலிருந்து குழந்தைகள்வரை சிதைக்கப்பட
பாலகர்களின் பூமியின் வேர் கருகியது
போர் ஆயுதங்கள் மிகுந்த ரசனையொடு
பாலகர்களை சிதைத்துக் கொன்று தின்றன
ஏங்கும் குழந்தைகளின் கண்களை பிடுங்கி
வார்த்தைகளை அழித்து அவர்கள் இல்லாமல் செய்யப்பட்டனர்
பாலகர்களுக்கு எதிரான போரில்
வேருடன் அவர்கள் அழித்தொழிக்கப்பட்ட பொழுது
பூமி வெளித்துப் போனது
அழிக்கப்படும் தேசத்தில் பிறந்த
ஏதும் அறியாத பாலகர்களைக் கொன்று
இரத்தத்தை உறிஞ்சிப் பருகும் போர்ப்படைகள்
பூமியின் கடைசிப் பாலகனின்
நெஞ்சில் துப்பாக்கிகளால் துளைகளையிட்டு
இரத்தத்தை உறிஞ்சிக் குடித்த பொழுது
எல்லாக் குழந்தைகளும் நிலத்தில் வீழ்ந்து கிடந்தனர்.

தீபச்செல்வன்

நன்றி – உலகத் தமிழ்ச் செய்திகள்

முந்தைய செய்திஉலக மகளீர் நாளை முன்னிட்டு நாம் தமிழர் மகிளீர் பாசறை நடத்தும் கருத்தரங்கம் – நிழற்படங்கள் இணைப்பு!!
அடுத்த செய்திகூடங்குளம் அணு உலை: கைது செய்யப்பட்டவர்களை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி