எட்டு உயிர்களைப் பலிகொண்ட சிவகாசி வெடிவிபத்திற்கு உரிய நீதிவிசாரணை வேண்டும். பட்டாசு ஆலைகள், கடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

35

எட்டு உயிர்களைப் பலிகொண்ட சிவகாசி வெடிவிபத்திற்கு உரிய நீதிவிசாரணை வேண்டும். பட்டாசு ஆலைகள், கடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
===========================================
விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலுள்ள ஒரு பட்டாசுக்கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 மாத கர்ப்பிணி உட்பட 8 பேர் உயிரிழந்தது பெருத்தத் துயரத்தையும், மிகுந்த மனவேதனையையும் தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கேற்கிறேன்.

பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் ஏற்படும் வெடிவிபத்தில் மனித உயிர்கள் மலிவாக போவது வாடிக்கையான ஒரு செய்தியாக மாறிவிட்டது. இதில் விபத்து எனும் போர்வைக்குள் அரசும், அதிகாரிகளும் ஒளிந்துகொள்கிறார்கள். விதி மீறலும், பாதுகாப்பின்மையும்தான் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்பதை ஒருபோதும் மறுக்க முடியாது. இந்த பட்டாசு விபத்துகள் இன்று நேற்றல்லாது பல ஆண்டுகளாக தொடர்வதுதான் பெரும் வேதனைக்குரியச் செய்தியாகும்.

கடந்த 2005ஆம் ஆண்டு சிவகாசி மீனாம்பட்டியில் நடந்த விபத்தில் 20 பேர்; 2009ல் சிவகாசி நமஸ்கரித்தான்பட்டியில் நடந்த விபத்தில் 18 பேர்; 2010ல் சிவகாசியில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர்; 2011ல் சனவரி மாதம் விருதுநகரில் நடந்த விபத்தில் 7 பேர்; அதே ஆண்டு ஏப்ரலில் நடந்த விபத்தில் 2 பேர்; ஜூன் மாதம் தூத்துக்குடியில் நடந்த விபத்தில் 4 பேர்; 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலிப்பட்டியில் நடந்த விபத்தில் 40 பேர்; அதே ஆண்டில் டிசம்பரில் சேலம் மேச்சூரில் நடந்த விபத்தில் 10 பேர்; 2013ஆம் ஆண்டு சிவகாசி, நாரணபுரத்தில் நடந்த விபத்தில் 6 பேர் என கடந்த 17 ஆண்டுகளில் நடந்த வெடிவிபத்துகளில் மட்டும் 399 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இவ்வாண்டிலேயே, கடந்த மார்ச்சில் சிவகாசி, காரிசேரியில் நடந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு; ஜூன் 9 அன்று சிவகாசி, பூலாவூரணியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு; ஜூலை 22 அன்று சிவகாசி வெம்பக்கோட்டை சங்கிபாண்டிபுரம் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு; அக்டோபர் 9 அன்று விழுப்புரம் மாவட்டம், வானூர் துருவை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு, தற்போது சிவகாசியில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழப்பு, சிவகாசி விபத்தின் சுவடு மறைவதற்குள்ளாகவே நேற்று கோவையில் நடந்த வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு என இதுதொடர்கதையாகி வருகிறது.

பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் நடந்தேறும் இவ்விதக் கோர விபத்துகளின் வீரியம் தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது கண்டும் காணாதிருக்கும் அரசும், அதன் அலட்சியப்போக்கும், மெத்தனமும்தான் இத்தனை உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது. சிவகாசியில் வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு கடையானது, ஸ்கேனிங் சென்டர் அருகே இருந்ததுதான் பெருமளவு உயிர்ச்சேதத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. மருத்துவப் பரிசோதனை செய்ய நோயாளிகள் வரும் ஸ்கேனிங் சென்டர் அருகே பட்டாசு கடை அமைப்பதற்கு அதிகாரிகள் எப்படி அனுமதி அளித்தார்கள் என்பதுதான் நமக்குப் புரியாத புதிராக இருக்கிறது. அதேபோல, கோவையில் நடந்த வெடிவிபத்திற்கு ஐ.ஏ. எஸ். அகாடமியின் அருகில் பட்டாசு ஆலை இருந்ததுதான் காரணம் எனக் கூறப்படுகிறது.

பட்டாசுகளை விற்பனை செய்வோர்கள், குடியிருப்புகளுக்கு அருகே 100 அடிக்குள் பட்டாசு கடை அமைக்கக்கூடாது; அளவுக்கதிகமாக பட்டாசுகளைச் சேமித்து வைக்கக் கூடாது; உரிய தீத்தடுப்பு சாதனங்கள் வைத்திருக்க வேண்டும் போன்ற அடிப்படை விதிகளைக்கூட கடைபிடிக்காது காற்றில்விடப்படுவது கண்கூடாகத் தெரிகிறது. பல இடங்களில் பட்டாசு கடை அமைப்பதற்கு உரிமம் பெறுவதிலும் பெரிய குளறுபடிகள் நடக்கின்றன. இதுவெல்லாம்தான் வெடிவிபத்திற்கு முதன்மையானக் காரணமாகிறது. எனவே, இதற்கு முழுமையாகப் பொருட்பேற்க வேண்டியது அதற்குரிய அதிகாரிகளும், அவர்களை வழிநடத்தும் அரசும்தான்.

ஆகையினால், இந்த வெடி விபத்துகள் இனியும் தொடராமல் இருக்க அரசானது உடனடியாகத் தலையிட்டு உரிய நீதிவிசாரணை செய்ய வேண்டும். இந்த விபத்திற்குக் காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் இருக்கும் பட்டாசு ஆலைகள், பட்டாசு கடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இறந்துபோனவர்களின் குடும்பத்திற்கு 10 இலட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு 5 இலட்சமும் நிவாரணம் அளிக்க வேண்டும் எனக் கோருகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திசிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றும் முடிவினை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் : சீமான் வலியுறுத்தல்!
அடுத்த செய்தியாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை: உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும்! – சீமான் கண்டனம்