காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளான நடுக்குப்பம் மக்களை சந்தித்தார் சீமான்

32

காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளான சென்னை மெரீனா கடற்கரை அருகேயுள்ள நடுக்குப்பம் பகுதி மக்களை இன்று 27-01-2017 காலை 9 மணியளவில் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு மீதானத் தடையை நீக்கக்கோரி மாணவர்களும், இளைஞர்களும் அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஆனால், அதனைக் காவல்துறையும், தமிழக அரசும் திட்டமிட்டு வன்முறைக்களமாக மாற்றியிருக்கிறது.
23ஆம் தேதி மாலையில் ஜல்லிக்கட்டுக்காக சட்டம் இயற்றப்பட்டது. அதனை போராட்டக்காரர்களுக்கு விளக்குவதற்கு நீதியரசர் ஐயா அரி பரந்தாமன், சட்டவல்லுநர் சங்கர சுப்பு போன்றோரை பயன்படுத்தியது அரசு. அந்த சட்டவல்லுநர் குழுவை போராட்டம் தொடங்கியபோதே உருவாக்கி போராட்டக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தால் அரசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே இவ்வளவு பெரிய இடைவெளி வந்திருக்காது. ஆனால், அதனைச் செய்யாமல் மாலையில் சட்டமியற்ற இருக்கும்போது காலையில் தடியடி நடத்திப் போராடியவர்களைக் கலைத்திருக்கிறார்கள். மேலும், பெண்களை மானபங்கப்படுத்தி, கர்ப்பிணிப்பெண்களைத் தாக்கி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். போராடுபவர்கள் எல்லாம் படித்தவர்கள்; கண்ணியம் மிக்கவர்கள்; போராடியபோது சிறுசிறு சலசலப்புக்குக்கூட இடம்கொடுக்காதவர்கள். அவர்களிடம் அவசர சட்டம் பாதுகாப்பானது என்று எடுத்துக்கூறியிருந்தாலே அமைதியாகக் கலைந்து போயிருப்பார்கள். ஆனால், அறவழிப்போராட்டம் வெற்றியடைந்து விடக்கூடாது எனத் திட்டமிட்டு அதனை வன்முறையாக மாற்றியிருக்கிறார்கள்.
நடுக்குப்பம் பகுதி மக்கள் போராடும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் உணவும், நீரும் கொடுத்தார்கள் என்பதற்காக அவர்களது வாழ்வாதாரமாக இருந்த மீன் சந்தை எரிக்கப்பட்டிருக்கிறது. பெண் காவலர்கள்தான், பாஸ்பரஸ் துகள்களைத் தூவி அதனைக் கொளுத்தியிருக்கிறார்கள். இதனை நேரிடையாகப் பார்த்தவர்கள் இங்கு இருக்கிறார்கள். போராடியவர்களுக்கு உதவியது அவ்வளவு பெரிய தவறா? இவர்களைத் தாக்கி உடைமைகளைச் சேதப்படுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? நடுக்குப்பம் மக்கள் என்ன சமூக விரோதிகளா? அவர்கள் சமூக விரோதிகள் என்றால், மணல் கொள்ளையடிப்பவர்கள், மலையைக் குடைந்தெடுத்து செல்பவர்கள், இலஞ்சம், ஊழல் மூலம் பணத்தைக் குவித்து வைத்திருப்பவர்களுக்கெல்லாம் பெயர் என்ன? அவர்கள் சமூகக் காவலர்களா?
தமிழர்கள் இனி போராடவே வரக்கூடாது; அப்படிப் போராட வருபவர்களுக்கு யாருமே உதவ முன்வரக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட வன்முறைதான் இதுவெல்லாம். அதனால்தான், நடுக்குப்பம் மக்களின் வாழ்வாதாரமாக இருந்த சந்தை கொளுத்தப்பட்டு இருக்கிறது. அரசானது மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கிற வேலையைச் செய்ய வேண்டும். ஆனால், இங்கிருக்கும் அரசு வாழ்வாதாரத்தை அழிக்கிற வேலையைச் செய்கிறது. அதனால், பாதிக்கப்பட்டு நிற்கிற நடுக்குப்பம் மக்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க அரசு முன்வர வேண்டும். எரிக்கப்பட்ட சந்தையைச் சரிசெய்ய உடனடியாக மேற்கூரை அமைத்து கொடுக்க வேண்டும். அதனைச் செய்யாவிட்டால் மீண்டும் இம்மண்ணில் போராட்டம் வெடிக்கும். அதனைத் தடுக்க முடியாது என்று சீமான் தெரிவித்தார்
மேலும் புகைப்படங்கள் https://drive.google.com/open?id=0Bxc2BS79sTuCSHI0YmpPU1Jmemc
https://www.youtube.com/watch?v=j5qeSSZql7E

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதடியடி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கிறார் சீமான் – 27.01.2017
அடுத்த செய்திகர்நாடகத்தின் பாரம்பரிய ‘கம்பலா’ விளையாட்டை மீட்கும் கன்னடர்களின் போராட்டம் வெல்லட்டும் – சீமான் வாழ்த்து!