கச்சநத்தம்: சாதியப் படுகொலையுண்ட மூவர் உடலுக்கு வீரவணக்கம் | திருமாவளவன், பாரதிராஜா, சீமான் பங்கேற்பு

591

கச்சநத்தம்: சாதியப் படுகொலையுண்ட மூவர் உடலுக்கு வீரவணக்கம் | திருமாவளவன், பாரதிராஜா, சீமான் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட சாதிவெறி தாக்குதலில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து கச்சநத்தம் ஊர்மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் கடந்த 4 நாட்களாக ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் இன்றும் (01-06-2018) பிற்பகல் வரை தொடர்ந்தது. இதனிடையே சிவகங்கை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, 4-நாள் காத்திருப்பு தொடர் போராட்டத்தைக் கைவிடுவதாக ஊர்மக்கள் அறிவித்தனர். பின்னர், படுகொலை செய்யப்பட்ட 3 உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது, பலத்த பாதுகாப்புடன் உயிரிழந்தோரின் உடல்கள் கச்சநத்தத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவர்களது உடல்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வீரவணக்கம் செலுத்தினார். அதேபோல இயக்குனர்கள் பாரதிராஜா, இராம், அமீர், வெற்றிமாறன், சுரேஷ் காமாட்சி, கோபி நயினார் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் பெ. ஜான்பாண்டியன் உள்ளிட்டோரும் படுகொலை செய்யப்பட்ட மூவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

கச்சநத்தம் சாதியப் படுகொலை குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் சீமான் பேசும்போது, கச்சநத்தம் சாதியப் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம். சாதிய மோதல் குறித்து தொடக்கத்திலேயே அளிக்கப்பட்ட புகார் மீது முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இப்பேரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கலாம்; வழமைபோல நிர்வாக குறைபாட்டால் சாதியப் படுகொலை நடந்தேறிவிட்டது. தமிழ்ச்சமுகமே இன்று தாழ்த்தப்பட்டுதான் இருக்கிறது, இதில் சாதியால் எந்தப் பெருமையும் இல்லை. சாதியே இழிவுதான். பாவேந்தர் பாடுவது போல “இடைவந்த சாதிஎனும் இடர் ஒழிந்தால் ஆள்பவள் நம் தாய்! தாய்! தாயே!” என்கிறார். இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கிறது என்பானும் இருக்கின்றானே! என்று வேதனையில் பாடுகிறார். இன்றைய காலக்கட்டத்தில் தமிழ்ச்சமூகம் தமிழர்களாக ஒன்றிணைந்து வலிமைபெறவேண்டும், ஒற்றுமையடைய வேண்டும் என போராடிக்கொண்டிருக்கும் வேளையில் இதுபோன்ற நிகழ்வுகள் பல நூறாண்டுகள் எங்களைப் பின்னுக்கு நோக்கி இழுக்கின்ற விதமாக நடந்தேறிவிட்டது. தன்னினப் பகையால் ஒருவரை ஒருவர் தாக்கி அழிக்கின்ற கொடுந்துயரம் இனி நிகழக்கூடாது. சொந்த இரத்தங்களுக்குள் இனி யுத்தமும் வேண்டாம்; இரத்தமும் சிந்த வேண்டாம். விரைவில் ஐயா பாரதிராஜா, அண்ணன் திருமாவளவன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட தமிழ்த்தேசிய ஆளுமைகளை ஒருங்கிணைத்து, அடுத்த தலைமுறைப் பிள்ளைகளையாவது இந்த சாதி, மத நஞ்சிலிருந்து மீட்டெடுக்க தேவையான வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் உருவாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஏற்பட்டுள்ளது.

அர்த்தமற்ற பிரச்சினைகளுக்காக அற்பமாக மானுட உயிரைப் பறிப்பதென்பது ஏற்கமுடியாதது. கொலையுண்ட தம்பி சண்முகநாதன் நன்றாக படித்துவிட்டு இயற்கை விவசாயம் செய்துகொண்டிருந்தான் இதுபோன்ற ஆளுமைகளின் உயிர் அற்பமாக பறிக்கப்பட்டுவிட்டது. இதற்கு எவ்வளவு பெரியதொகையை இழப்பீடாகக் கொடுத்தாலும் ஈடாகாது 10 இலட்சம் ரூபாய் நிவாரணம் பெரிய பலனைத் தந்துவிடாது.. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் முதியவர் உயிர்பிழைத்து வந்தாலும் எந்த வேலையும் செய்யமுடியாமல் ஒரு மாற்றுத்திறனாளி போன்று முடங்கி தான் இருக்கவேண்டும். எனவே அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் நீண்டகால வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகளையும் பாதுகாப்பையும் அரசு செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சாதியப் படுகொலை செய்யப்பட்ட மூவரின் இறுதி நிகழ்வில் நாங்கள் பெரும் மனவலியோடும் துயரம்தோய்ந்த இதயத்தோடும் நின்றுகொண்டிருக்கிறோம். இதுபோன்ற கொடும்நிகழ்வுகள் இனிவருங்காலங்களில் தமிழகத்தில் நடைபெறக்கூடாது; வருங்காலப் பிள்ளைகள் காயங்களோடும் கண்ணீரோடும் பேசும் எங்கள் வார்த்தைகளை நீங்கள் உள்வாங்கிக்கொண்டு சாதிய மத உணர்ச்சியிலிருந்து மீண்டு தமிழர் என்கிற தேசிய இனவுணர்வுக்குள் திரண்டு ஒருதாய் பிள்ளைகளாக நாம் ஒன்றிணைந்து வாழவேண்டிய காலத்தேவை, ஒரு வரலாற்றுக்கடமை நமக்கு கையளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும், திருப்பாச்சேத்தி பகுதியை வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பகுதி என அறிவிக்க வேண்டும் என்றும், சிறப்பு உளவு பிரிவினரை பணியில் அமர்த்தி இது போன்ற பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

முந்தைய செய்திஅறிவிப்பு: நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடுக்கும் நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை
அடுத்த செய்திஅறிவிப்பு: அனைத்திந்திய சிறுபான்மை பாதுகாப்பு கழக மாநாட்டில் சீமான் சிறப்புரை – பாளையங்கோட்டை